ஏணிப்படிகள்-5

Sankar sundaralingam
2 min readNov 6, 2020

--

தக்க சமயத்தில் உதவுதல்

ஏணிப்படிகள் தொடரின் கடைசி பகுதி இது. இதற்கு முன் வாரங்களில், நான்கு பகுதிகளில் ஏற்றம், இறக்கம், உதவுபவர்கள் என பார்த்துள்ளோம். இந்தப் பகுதியில் தக்க சமயத்தில் உதவுதல் எப்படி என்றும், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பற்றி காண உள்ளோம். இத்துடன் ஏணிப்படிகள் தொடர் நிறைவடைகிறது.

முந்தைய பகுதியில் அவர்களை நாம் கடவுளுக்கு நிகராக மதிக்க வேண்டும். அவர்களை மறக்கக் கூடாது, என்றெல்லாம் பார்த்தோம் . அப்படி அவர்களை மதிக்கப்பட அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

உதவி நாடுபவர்கள் கடவுளிடம் கூட தக்க சமயத்தில் உதவ வேண்டும் என கூறுவார்கள். பிறர் நிலை அறிந்து அவர்களுக்கு உதவுவது பயன். காலம் சென்ற பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது எந்த பலனும் கிடையாது. சமயத்தில் உதவாமல் பின் உதவுவேன் என்று சொல்வதும் தவறு. உங்களால் முடியும் என்றால் முடியும் என்று கூறுங்கள், முடியவில்லை என்றாலும் முடியவில்லை என்று தெளிவாக சொல்லுங்கள். அதுவே பெரிய உதவி. பிறகு பார்க்கலாம் என்று தட்டிக் கழிக்காதீர்கள்.

பசிக்கு உணவு அளிக்க வேண்டுமே தவிர, இறந்தபின் வாய்க்கரிசி போடுவது என்ன பயன். அவசரம் அறிந்து உதவ வேண்டும். உதவுபவர்கள் போல் நடிக்க வேண்டாம்.

உதவுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள். உங்களுக்குள் ஒரு கேள்வி, இவர்களுக்கு எதற்கு நெறிமுறைகள் என்று. ஆமாம், நம் அனைவருக்கும் நெறிமுறைகள் வேண்டும், அவர்களுக்கும் கூட…

  • உதவுபவர்கள் தான் செய்த உதவியை பரப்பி பெருமை கொள்ளக் கூடாது. அப்படி செய்யின் அது உதவி கிடையாது. விளம்பர வியாபாரம்.
  • உதவி செய்த பின் பிரதிபலன் எதிர்பார்க்கக்கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சன்மானம் ஆகும்.
  • செய்த உதவியை ஒரு போதும் சொல்லிக் காட்டக்கூடாது.
  • உதவி பெற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர்களது தன்மானம் எத்தருணத்திலும் காக்கப்பட வேண்டும்.

ஒருவர் நம்மை புகழ அல்லது மதிக்க வேண்டும் என்று உதவி செய்தால் அது வீண் தான், எதிர்பாராமல் செய்யும் உதவி நமக்கு உயர்ந்த உணர்வினை கொடுக்கும்.

மனிதரில் மூன்று வகைகள் — ஔவையார்

நூல்: தனிப்பாடல்

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்

சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல

குலாமாலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில்

பலா, மாவைப் பாதிரியைப் பார்

அசைகின்ற அழகிய மாலையைச் சூடியவளே, வேல் போன்ற கண்களை உடையவளே,

மனிதர்களில் மூன்று வகை.

  • சிலர், உதவிகளைச் சொல்லாமலே செய்வார்கள் அவர்கள் உயர்ந்தவர்கள் ( பலா )
  • வேறு சிலர், சொல்லிவிட்டுச் / பிறர் கேட்க செய்வார்கள் அவர்கள் சிறியவர்கள் (மா )
  • இன்னும் சிலர், சொல்வார்கள், ஆனால் செய்யமாட்டார்கள் / கேட்ட பிறகும் உதவாமல் இருப்பவர் கயவர்கள் (பாதிரி )

இவர்களைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் பலா, மா, பாதிரியைப் பார்.

பலா மரம், பூக்காது, ஆனால் காய்க்கும், இனிமையான சுளைகளைக் கொண்ட பழங்களைத் தரும். எதையும் எதிர்பார்க்காமல் உதவ கூடியவர்கள் முதல் வகை மனிதர்களுக்கு உவமை இது.

மா மரம் பூக்கும், காய்க்கும், பழுக்கும், எதையும் சொல்லிவிட்டுச் செய்கிற அல்லது பிறர் கேட்க உதவி செய்பவர்கள் விளம்பர விரும்பிகள் இரண்டாவது வகை மனிதர்களுக்கு உவமை இது.

பாதிரி மரம் பூக்கும், ஆனால் காய்க்காது, பழுக்காது, எந்தப் பலனும் தராது, பந்தாவாகச் சொல்லிவிட்டு எதுவுமே செய்யாமல் இருக்கிற மூன்றாவது வகை மனிதர்களுக்கு உவமை இது. வாய்ச்சொல்லில் வீரர்கள்.

நாம் பலா மாதிரியா அல்லது மாதிரியா அல்லது பாதிரி மரம் மாதிரியா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

நாமும் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம், வாழ வழி விடுவோம்!!!

நாம் அனைவரும் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஏற்ற, இறக்கங்களுக்கு (பொறாமை, பகை, ஆணவம்) உறுதுணையாய் ஏணியாக நிற்போம்.

நன்றி!!!

வணக்கம்!!!

மீண்டும் உங்களை சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த தொடரின் வாயிலாக சந்திக்க காத்திருக்கிறேன்.

--

--

No responses yet