கதை கேளு — அமைதி
வார விடுமுறை நாள், அம்மா அடுத்த தெருவில் உள்ள தனது 2வது மகன், மருமகளை பார்க்க விடியற்காலை நடந்தே செல்கிறாள். மகன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மகனது வீட்டை அடைந்தவுடன் மணி அடிக்கிறாள். சத்தம் கேட்டு வந்து கதவை திறக்கிறான் மகன் , அதிகாலை அம்மா தன் வீட்டு வாசலில், அம்மாவை உள்ளே அழைக்கிறான். அமரச்சொல்லி தண்ணீர் கொடுக்கிறான்.
அம்மா கேட்கிறாள், எங்கே எனது சின்ன மருமகள் ?
அவன் தன் தாயை அரவணைத்து கதறி அழுகிறான். தாய் அவனைத் தட்டிக் கொடுத்து அழுகாதே, நான் இருக்கிறேன். சின்ன மருமகளுக்கு என்னாச்சு?
அவன் அம்மா இங்கு வந்ததிலிருந்து அவளுக்கு மன அழுத்தம் அதிகமாகி விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்தான் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்த்து, நேற்றுதான் வீடு திரும்பினோம். அவள் உள்ளே உள்ள அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். போய் பாருங்கள்.
உடனே அவனது தாய் மருமகள் இருக்கும் அறைக்கு சென்று, மருமகளைப் பார்த்து எப்படிமா இருக்க? என்னை கூப்பிட்டு இருக்கலாமல்ல? ஏதாவது ஒத்தாசை வேண்டுமென்றால் சொல்லலாமல்ல? ஏன் தனியா கஷ்டப் படுகிறாய்?
மருமகள் மாமியாரை பார்த்தவுடன் மூன்று மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்னாடி கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தாங்க. இந்த 2வது மகனுக்கு திருமணம் ஆகி ஒரு வருஷம் கூட்டுக்குடும்பமா இருந்தாங்க. 2வது மருமகள் கொரானா காரணமாக அலுவலக வேலையை வீட்டிலிருந்தே பார்க்க நேர்ந்தது. குழந்தைகள் விளையாட்டு சத்தம், தொலைக்காட்சி மற்றும் அதிக ஆட்கள் அதனால இரண்டாவது மருமகள் ஒரு நாள் வீட்டில் சண்டை போட்டு எனக்கு இங்கு அதிக சத்தம் , அமைதி இல்லை, நிம்மதி இல்லை அதனால் நாங்க தனியா செல்கிறோம் என்று சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
மூன்று மாதத்திற்கு பின்பு நிலைமை தான். மருமகளின் கண்ணை பார்த்த மாமியார், பழையதை நினைக்க வேண்டாம்.
இல்லை அத்தை , நான் அமைதி தேடி தான் இங்கு வந்தேன் ஆனால் இந்த சூழ்நிலை எனக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை தந்தது. பேச கூட ஆள் இல்லை.
அப்படி இல்லைமா, அமைதி உள்ளே உள்ளது. அதை வெளியில் தேடத் தேவையில்லை, நீ மட்டும் அல்ல, பலர் அமைதியை தேடி ஆசிரமம், ஊர்விட்டு ஊர் செல்கிறார்கள். அமைதி இடத்தைப் பொறுத்து வருவதில்லை. இருக்கும் இடத்தில் இருந்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்டு , எதற்கும் கலங்காமல், அஞ்சாமல், கடமையை சரிவர செய்து, உள்ளம் தூய்மையாக இருப்பது அமைதி. குடும்பத்துடன் கூட்டாக வாழ்வதும் ஒரு வகை அமைதி. அதில் கிடைக்கும் நிம்மதி எதிலும் கிடைக்காது.
ஆமாம் அத்தை அனைத்தும் கிடைத்து, எந்த ஒரு பிரச்சனைகளும், தொந்தரவுகளும் இல்லாத சூழலில் வாழ்வது உண்மையான அமைதி அல்ல. அமைதியை தேடி அலைய தேவையில்லை, அமைதியாக மாறிவிட வேண்டும். அனைத்து சூழ்நிலைகளிலும் அமைதி பொருந்தும், எந்த சூழ்நிலைகளிலும் கோபம் பொருந்தாது. கோபத்தை தவிர்த்தாலே வாழ்க்கை அமைதியாகிவிடும். மனம் அமைதியாக இருந்தால்தான் புத்தி தெளிவாக இருக்கும். இப்போது எனக்கு தெளிந்து விட்டது அத்தை , என்னை மன்னியுங்கள் .
சரி மா சின்ன மருமகளே ! எல்லாம் நன்மைக்கே என்று எண்ணுவோம் மனம் அமைதி பெறும்.
கதை கருத்து :
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..!
- கவிஞர் கண்ணதாசன்
அமைதியை விட பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது. வெளிச் சூழலில் எந்த நிலையில் இருந்தாலும், உள்மனதை அமைதியாக வைக்கவும். அமைதியான மனமே உங்களின் மூலதனம். மனக் காயங்களுக்கு சிறந்த மருந்து அமைதி. அமைதி கட்டாயத்தினால் இருக்க வேண்டாம், உள்ளத்தில் உண்மையாக இருக்க வேண்டும். எந்த சூழலிலும் மன அமைதி இழந்து விடாதீர், அமைதியான மனதில் தான் ஞானம் பிறக்கும்.
அமைதி என்ற நண்பனோடு துணிந்து பயணியுங்கள், அவன் எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டான்.