கதை கேளு — உறுதி வேண்டும்
மகளே கயல்விழி, வாழ்க்கை என்ற போர்க்களத்தில் போராட உறுதி வேண்டும். நீ உறுதியாக இல்லை என்றால் உன்னால் எதையும் சாதிக்க முடியாது. பாரதியின் பாடலின் வரிகளை நினைவு கொள்க!
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்
மனதிலும் , காரியத்திலும் உறுதி வேண்டும் என்ற மகா கவி மிக அருமையாக எழுதியுள்ளார் என்று தன் மகள் கயல்விழிக்கு முனியன் அறிவுரை வழங்கினான்.
எதற்கு அறிவுரை என்ற கேள்வி தானே? பார்க்கலாம் வாங்க….
கயல்விழி தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டாள் , முனியன் அவளிடம் திருமணத்திற்க்கு மாப்பிள்ளை பார்க்கலாமா என்று கேட்டான். கயல்விழியோ தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறினாள். முனியன் சற்று யோசித்து, தன் மகளை பார்த்து யாரையாவது காதலிக்கிறாயா? தான் காதலுக்கு எதிரி இல்லை. நல்ல பையனாக இருந்தால் பேசி திருமண செய்து வைத்து விடலாம். அவளோ இல்லை என்று மறுமொழி கூறினாள்.
மேலும் முனியன் தனது பேச்சை தொடர்ந்தான் , அப்படி இல்லை என்றால் எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும். கயல்விழி நல்ல மாப்பிள்ளை அமைந்தால் மட்டும் போதுமா? மாமியார், மாமனார், கொழுந்தன், கொளுத்தி என அவர்கள் சொந்தங்களை பார்க்க வேண்டாமா? குடும்பத்தை பார்த்து மாப்பிள்ளை எடுத்தால் மாப்பிள்ளை நல்லவரா அமைவாரா ? என தனக்குள் உள்ள பயத்தை வெளிப்படுத்தினாள். திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையுமா என்ற உறுதி கயல்விழியிடம் இல்லை. ஆகையால் தான் திருமணம் வேண்டாம் என்கிறாள்.
அவளின் இந்த உறுதியில்லா குணத்திற்குத்தான் முனியன் அறிவுரை கூறிக்கொண்டிருந்தான்.
மேலும் அவனது அறிவுரையை கேட்போம்.. பயன் படுகிறதா என்று பார்ப்போம் .
உறுதி என்ற பண்பு எதையும் சாதிக்கும் சக்தியுடையது. மன உறுதியுடன் வாழ்வில் வெற்றி பெற முயற்சி செய்திட வேண்டும். மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட சாய்த்து விடலாம். மன உறுதி இல்லாதவர் சிறிய கற்க்களை கூட நகர்த்த முடியாது. மனஉறுதி படைத்தவர் எதிர்ப்பு, பொறாமை,ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்வார்கள்.
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம், அதில் நிறைய நபர்கள் வருவார்கள், போவார்கள். அவர்களுக்கு பயந்து கொண்டிருந்தா, எப்படி வாழ்க்கையை நடத்திட முடியும்? உறுதியாக இருக்க வேண்டும் , எதையும் துணிந்து கடந்து செல்ல வேண்டும்.
சரியோ, தவறோ நீ நினைப்பதை உறுதியாக, தைரியமாக, வெளிப்படையாக செய். எதையும் தாங்கும் இதயத்திற்கு உறுதி வேண்டும் தாயே. துணிந்திடு , வென்றிடு !!
கதை கருத்து :
உறுதி மட்டும் இருந்தால் போதும், அது உன் இலக்கை நோக்கி நடை போடும்.வாழ்க்கை என்ற நம்பிக்கை ஒளியை ஏற்றுவது உறுதி ( மன உறுதி , உடல் உறுதி_). உறுதி என்ற தீயை அணைத்துவிடாதே, இழந்துவிடாதே.
சோதனை, தடைகளை மன , உடல் உறுதி உடைக்கும் என்பதை மறந்து விடாதே. உறுதி என்பது பிடிவாதமல்ல, நற்குணம். அதை வளர்த்துக்கொள்.அது உன்னை காப்பாற்றும்.
உறுதியான எண்ணங்கள் ஆயிரம் மலைகளுக்கு ஈடானது, அதன் மேல் எழுப்பும் உனது கனவுகள் நிச்சயம் நிறைவேறும். பயத்தினால் வெற்றி அடைய முடியாது. உறுதி கொள் , அச்சம் தவிர் , துணிந்திடு , நாளை நமதே.