கதை கேளு — ஐம்புலன்கள்

Sankar sundaralingam
2 min readFeb 5, 2022

--

வல்லவராயன் என்ற அரசன் அவனின் 3 மகன்களில் யாருக்கு பட்டாபிஷேகம் செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில், தனது புதல்வர்களை அழைத்தான்.

புதல்வர்கள் அரசனின் ஆணைக்கு இணங்கி வந்தனர். அவர்களிடம் அரசன் யாருக்கு பட்டாபிஷேகம் என்ற முடிவெடுக்க உங்களை அழைத்தேன். நீங்கள் மூவரும் எனது முடிவுக்கு கட்டுப்படுவீர்கள் என்று நம்புகிறேன்.

மூவரும் ஒருமித்த கருத்துடன், தங்கள் கட்டளையே எங்கள் சாசனம்.

அரசன் புன்னகையோடு அவர்களை பார்த்து, நான் தங்கள் மூவரில் சிறந்தவருக்கு பட்டாபிஷேகம் செய்ய உத்ததேசித்துள்ளேன். மூவரில் சிறந்தவரை தேர்தெடுக்க ஒரு போட்டி நடத்தவுள்ளேன்.

மூவரும் ஆவலாக தந்தையே! கட்டளையிடுங்கள் எந்த போர்களம் செல்ல வேண்டும், யார் மீது போர்துடுக்க வேண்டும்? இப்போதே ஆயத்தமாகின்றோம். வெற்றிகளை பூக்களாக உங்கள் காலில் சமர்ப்பிக்கின்றோம்.

அப்படி போர்களில் உங்களை சோதிக்க விரும்பவில்லை. உங்களின் அறிவு புலன்களை சோதனை செய்ய முற்படுகிறேன்.

ஐம்புலன்கள் பற்றி என்ன நினைக்கீறீர்கள்.

2 மகன்கள் உடனடியாக உணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் ஆகிய பஞ்ச இந்திரங்களை அடக்கியாண்டால் இந்த உலகினை வென்றிடலாம்.

3வது மகன் , எனது நினைப்பு சற்று மாறுபட்டது.

திருமந்திரம் கூறும் கருத்து,

“அஞ்சும் அடக்கு அடக்கு’ என்பார் அறிவிலார்

அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கு இல்லை

அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.’

-திருமந்திரப் பாடல் எண் 2009.

பாடல் விளக்கம் : அறிவில்லாத மூடர்களே ஞானம் பெற ஐம்புலன்களையும் அடக்கு என்ற தவறான வழிமுறையைப் போதிப்பார்கள். ஒளி உடலாக வாழும் அமரர்களால் கூட ஐம்புலன்களையும் அடக்கிவிட முடியாது.’ (மரணம் ஒன்றில்தான் ஐம்புலன் களும் முழுமையாக அடங்கிப் போகும் என்பது உட்கருத்து).ஐம்புலன்களும் அடங்கிவிட்டால் ஞானம் என்பதை அடைய முடியாது என்பதை நான் அறிந்து.ஐம்புலன்களையும் அடக்காமல் மெய்ஞ் ஞானத்தை அடையும் வழிமுறையை நான் அறிந்து கொண்டேனே.

கண்கள் — நிச்சயமாக கண் பார்வையை அடக்க முடியாது.

காது — எதையும் செவியேற்காமல் தடுத்து விட முடியாது.

மூக்கு. -மூச்சை விடாமல், நுகராமல் இருக்க முடியாது.

வாய் — சுவைக்காமல் இருக்க முடியாது.

உடல் — இவைகளை உணராமல் இருக்க முடியாது .

மெய்ஞானத்தை கண்டுணர்ந்து அடக்க நினைப்பது அறியாமை, அவற்றை வசப்படுத்தி கொள்ள வேண்டும்.

உன் கருத்து முற்றிலும் உண்மை மகனே. மேலும் மகா கவி பாரதியும் , வள்ளுவனும் அவ்வழியே கூறுகின்றனர்.

ஐம்பொறி ஆட்சி கொள் -புதிய ஆத்திச்சூடி — ஐம்பொறிகளான (மெய், வாய், கண், மூக்கு, செவி) இவற்றின் செயல்களான ஐம்புலன்கலாகிய (உணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல்) ஆகியவற்றையும் தன்வசப்படுத்தி ஆட்சி கொள்ள வேண்டும் என்கிறார் பாரதி.

திருக்குறள்:

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

இதை உணர்த்த உன்னால் நமது ராஜாங்கத்தை ஆட்சி கொள்ள முடியும், மற்ற இரு சகோதர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

கதை கருத்து :

ஐம்புலன்களை அடக்கி வாழ நினைப்பதை விட (ஐம்புலன்களையும் அடக்குவது என்பது சாத்தியமல்ல) , கவர்ந்து வாழ வேண்டும். ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க . ஐம்புலன்கள் வசப்படுத்தினால் வெற்றி.

காண்கிறேன் புதுமையை,

கேட்கிறேன் இனியவை,

நுகர்கிறேன் சுத்தமானதை,

பேசுகிறேன் நற்சொற்களை,

உணர்கிறேன் நல்லவர்களை.

திருக்குறள்:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறி நின்றார் நீடு வாழ்வார்.’-

ஐம்பொறிகளால் (மெய், வாய், கண், மூக்கு, செவி) ஏற்படும் ஆசைகளை விட்டுவிட்டு பொய்யில்லாத ஒழுக்க நெறியில் நிற்பவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வார்கள்.

ஐம்புலன்களையும் வசப்படுத்தி உலகை கையில் நிறுத்துக!

--

--

No responses yet