கதை கேளு — கட்டுப்பாடு
கல்லூரி மாணவர்கள் ( சகலை , ரகளை ) இருவர் கல்லூரியில் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது இருவரும் பேசிக்கொண்டது, என் ( சகலை) அப்பா எனக்கு எப்பொழுது பார்த்தாலும் புத்திமதி சொல்லிக்கொண்டிருக்கிறார். உன் அப்பாவும் இப்படித்தானா ? அமாம் , என் (ரகளை) அப்பாவும் எனக்கு சொல்லிகுடுப்பார்.இந்த வயதில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். ஒழுங்கு மிகவும் முக்கியம், ஒழுக்கம் தவறினால் வாழ்க்கை தடம் மாறி விடும்.
ரகளை, சமீபகாலமா கட்டுப்பாடு என்ற வார்த்தையை கேட்டாலே ரொம்ப கடுப்பா இருக்கு. உதாரணமா கொரானா கட்டுப்பாடு, பயண கட்டுப்பாடு, இரவு நேர நடன கட்டுப்பாடு. இது பத்தாக்குறைக்கு பெற்றோர்கள் வேற வாழ்க்கை கட்டுப்பாடுன்னு அறிவுரை.நமக்கு ஒன்றும் தெரியாததுபோல், அவர்களுக்கு அனைத்தும் தெரிந்தது போல். நமக்கு அறிவுரைகளை வாரி இறைக்கிறார்கள். நாம் இந்த வயதில் அனுபவைப்பதை விட்டு விட்டு , எப்போது அனுபவிப்பது? காலம் மாறிவிட்டது. அவர்களுக்கு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதனால் தான் எப்போ பார்த்தாலும் நமக்கு அறிவுரை கூறி கட்டுப்பாடுகளுடன் இரு என்கிறார்கள். கட்டுப்பாடு என்ற கடப்பாரையை கொண்டு நமது வாழ்க்கையை குழி தோண்டுகிறார்கள்.
ரகளை: சகலை வாழ்க்கையில் எல்லா கட்டத்திலேயே ஒருவகையான கட்டுப்பாடு நம்ம கிட்ட இருந்து தான் இருக்கு, உதாரணமா சொன்னா கொரானா கட்டுப்பாடு அரசாங்கத்தினால், குடும்ப கட்டுப்பாடு அரசாங்க மக்கள்தொகையை கட்டுப்படுத்த, நமக்கு நாமே உணவு கட்டுப்பாடு நம்ம உடல் எடையை குறைக்க , மனக்கட்டுப்பாடு பல நேரத்தில் ஆசையில் மயங்கிட கூடாது என்று , கல்லூரியில் உடை கட்டுப்பாடு போடறாங்க. இப்படி பல கட்டுப்பாடு நம்ம சுத்தி போட்டு தான் இருக்காங்க, அப்புறம் எதுக்கு பெற்றோர்கள் நம்ம நலனுக்கு சொல்றதுக்கு கோப படுனும்.
கட்டுப்பாடுனு என்னப்பா ரகளை?
யாரும் பார்க்கிறார்களோ இல்லையோ, எப்பொழுது சரியானதை செய்வதுதான் கட்டுப்பாடு. இதை சுய கட்டுப்பாடு என்றும் கூறுவார்கள்.
அண்ணா சொன்னது போல கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு இந்த மூன்றும் வாழ்க்கைக்கு மிக முக்கியம். கட்டுப்பாடு இல்லாத மனம் சிக்கி சீரழியம். நாம் பல உதாரணங்களை வரலாற்றிலும் , நிஜத்திலும் பார்கிறோம்.
சகலை நிறைய பேர் சின்ன வயசிலேயே போதைக்கு அடிமையாகிறார்கள். அவர்களால் படிப்பில் கவனத்தை செலுத்த முடியல. இதெல்லாம் கட்டுப்பாடு இல்லாம இருக்கிறதனாலதான். மற்றொரு உதாரணம் , சாலைகளை எவ்வளவு அகலப்படுத்தினாலும் தனி மனித கட்டுப்பாடு இல்லை என்றால் விபத்துகளும் , இழப்புகளும் தவிர்க்க இயலாது.
அறிவு, பதவி, வயசு , பணம் இது அனைத்தும் நம்மை எதையும் செய்யத் துணியும், கற்றுக்கொள்ள வேண்டியது கட்டுப்பாடு ஒன்றே. கட்டுப்பாடு அன்பின் வெளிப்பாடு. காலங்களும் , கோலங்களும் மாறலாம். மன சுயகட்டுப்பாடு மாறாதவரை, உன்னை யாரும் அசைக்க முடியாது.
அதனாலதான் உங்க அப்பா, உங்கப்பா மட்டும் இல்ல எல்லா அப்பாக்களும் நமக்கு சின்ன வயசுல கட்டுப்பாடோடு இருக்கனும் என்று சொல்லி தராங்க.
ரகளை எனக்கு நன்றாக புரிந்தது. கட்டுப்பாடு என்பது கண் போன்றது, அதை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது எந்த பலனும் கிடையாது. அதுபோல கட்டுப்பாடு இல்லாமல் கோட்டை விட்டுவிட்டு, பின்னாளில் வருந்துவது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் தராது.
கதை கருத்து :
தனக்குத் தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு,
வாழ்பவனே சுதந்திர மனிதன். — காந்தியடிகள்
காந்தியடிகள் சொன்னது போல, சுய கட்டுப்பாடுடன் வாழ்பவனே சுதந்திர மனிதன். அவனை யாராலும் அடக்க முடியாது. அவன் யாருக்கும் தலை பணிய தேவையில்லை.
கட்டுப்பாடு என்பது உனக்கு நீ போடும் வேலி கிடையாது. கட்டுப்பாடு என்பது உன் கடமையை தவறாமல் செய்ய போடும் பாதை , அந்த பாதைக்குள் யாரும் நுழைந்து உன்னை கெடாமல் பாதுகாப்பது தான் கட்டுப்பாடு.
இயற்கைக்கு இறைவன் கட்டுப்பாடு,
இசைக்கு தாளம் கட்டுப்பாடு,
இலக்கணம் மொழிக்குக் கட்டுப்பாடு,
நதிக்கு கடல் கட்டுப்பாடு,
கடலுக்கு கரைதான் கட்டுப்பாடு,
மலருக்கு மகரந்தம் கட்டுப்பாடு,
நல்லொழுக்கம் மனித கட்டுப்பாடு.
கட்டுப்பாடு இல்லை எனில் உலகம் என்றோ மாய்ந்து போயிருக்கும்.
கட்டுப்பாடு இறைவன் / முன்னோர்கள் நமக்கு வகுத்த வழி.
கட்டுப்பாடுடன் இருந்து சுற்றத்தைக் காத்திடு!