கதை கேளு — காலந்தவறாமை
நேரம் பொன் போன்றது!!!
ஒரு கிராமத்தில் ஒரு மிகப் பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் உடல் முழுவதும் விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள், கைக்கடிகாரம் அணிந்து இருப்பார். அவர் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். சமீப காலங்களாக அவர் தொழிலில் பல நஷ்டங்கள், இது அவரை மிகுந்த வருத்தத்திற்கு ஆளாக்கியது. ஒருநாள் அவர் ஒரு ஆசிரமம் சென்று அங்கு ஆசிரம மடாதிபதி சந்திக்கிறார். மடாதிபதியுடன் தனது தொழில் சம்பந்தமான சிக்கல்களை எடுத்துரைத்தார். செல்வந்தவரின் சிக்கல்களை புரிந்து கொண்ட மடாதிபதி, செல்வந்தரை பார்த்து நீங்கள் உங்கள் தொழில் லட்சியம் மற்றும் இலக்குகளை நன்கு அறிந்துள்ளீரா?
செல்வந்தர் நன்கு அறிந்துள்ளேன், ஆனால் இலக்குகளை எட்ட இயலவில்லை.
மடாதிபதி செல்வந்தரை பார்த்து சரி, நாளை நீ இங்குள்ள ஆசிரம நண்பர்கள் அனைவருக்கும் காலை உணவு விருந்தளித்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள். உணவு சரியாக காலை 9:00 மணிக்கு வழங்கவேண்டும், நீயும் இங்கு உணவு வழங்கும் நேரத்தில் சரியாக இருக்க வேண்டும் என கூறி விடைபெற்றார் மடாதிபதி .
செல்வந்தர் மிக மகிழ்ச்சியுடன் அடுத்த நாளுக்கான காலை உணவை தனது சமையல்காரர்களை அழைத்து மிக பிரம்மாண்டமாக செய்ய சொன்னார் . செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் நல்ல முறையில் சமைத்து விருந்தளிக்க சொன்னார். அடுத்த நாள் காலையில் செல்வந்தர் கூறியது போலவே அவரது சமையல்காரர்கள் நன்கு சமைத்த உணவுகளை ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று விருந்தளிக்க தயாராகினர். மடாதிபதி சரியாக காலை 8:55 க்கு வந்து உணவுகள் தயாரா? என கேட்க சமையல்காரர்கள் தயாராக இருக்கிறது.
சமையல்காரர்: அனைவருக்கும் பரிமாறலாமா?
மடாதிபதி: நன்று செல்வந்தர் வந்துவிட்டாரா?
சமையற்காரர் மற்றும் மடாதிபதி ஆசிரம நண்பர்கள் : இல்லை என பதிலளித்தனர்.
சரியாக ஒன்பது மணி ஆகியும் செல்வந்தர் வரவில்லை மடாதிபதி பரவாயில்லை. நாம் ஆசிரம உணவுகளை அருந்தலாம் என கூறி ஆசிரம உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்தனர்.
சமையல்காரர்கள் நீங்கள் கொண்டு வந்த உணவை எடுத்துச் சென்று உங்கள் செல்வந்தரிடம் கொடுத்து விடுங்கள் எனக் கூறினார்.
சற்று காலதாமதமாக ஆசிரமம் வந்தார் செல்வந்தர் நடந்தவற்றை தனது சமையல்காரர்கள் மூலம் அறிந்து கொண்ட செல்வந்தர் , மடாதிபதியிடம் சென்று தனது காலதாமதத்திற்கு மன்னிக்குமாறு வேண்டினார்.
மடாதிபதி இது நான் உனக்கு வைத்த பயிற்சி . காலத்தின் அருமையை உணராத எவராலும், எதையும் சாதிக்க முடியாது.
காலம் தவறாமை ஒரு மனிதனின் நடத்தையும், லட்சியத்தையும் நிரூபிக்கும் ஒன்று. நேரத்தை கடைப்பிடிப்பது பொதுவாக நம்பகமானவராகவும், கடின உழைப்பாளியாகவும் இருப்பார். நீ இதிலிருந்து உனது தொழில் சிக்கல்களின் காரணத்தை அறிய முற்படு. பின்பு தெரியும் எதனால் உனக்கு இந்த சிக்கல்கள், கண்டிப்பாக அது காலதாமதமாக தான் இருக்கும்.
எவ்வளவு விலை உயர்ந்த கடிகாரம் அணிகிறோம் என்பதல்ல மரியாதை, அடுத்தவர்களின் நேரத்தை எப்படி மதிக்கிறாய் என்பதே உன்னுடைய உண்மையான மரியாதை.
காலந்தவறாமைக்கு இவ்வளவு கண்டிப்பு அவசியமா என ஆசிரமம் நண்பர் ஒருவர் கேட்ட, மடாதிபதி காலந்தவறாமை மட்டுமல்ல அனைத்து நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்ள கண்டிப்பு அவசியம் தேவை, இல்லை எனில் வாழ்க்கை வீணாகிவிடும் என்று கூறி அங்கிருந்து விடைபெற்றார்.
கதை கருத்து : நேரம் பொன் போன்றது . காலந்தவறாமையை பின்பற்றவில்லை எனில் வாழ்க்கையில் உயர செல்வது கடினம் . எத்தருணத்திலும் அடுத்தவர்களின் நேரத்திற்கு மதிப்புக் கொடுங்கள், காக்க வைப்பது புகழல்ல , இழிவு, அடுத்தவர்களுக்கல்ல உங்களுக்கு.
“காலந்தவறாமையை தந்தை எடுத்துரைக்கும் போது எரிச்சல்
தாய் எடுத்துரைக்கும் போது கிண்டல்
ஆசிரியர் எடுத்துரைக்கும் போது கசப்பு
காலத்தின் கட்டளை தொழிலாளியான போது அவசியமாயிற்று.”