கதை கேளு — தேடல்
கல்லறை நாளன்று தாயின் கல்லறைக்குச் சென்ற மகன், தாயை வணங்கி கதறி அழுதான். அருகில் இருந்தவர்கள் அவனை சமாதானப்படுத்த முயற்சித்தனர், ஆனால் அவன் சமாதானம் ஆகவில்லை. மீண்டும் அழுது கொண்டிருந்தான். அவனிடம் தன் தாயைப் போன்ற உருவமுள்ள ஒரு அம்மா அங்கு வந்து, ஏன் அழுகிறாய் மகனே என கேட்க!
அவன் என் தாய் வாழும் காலத்தில் கவனிக்காமல் பணம், வேலை, பதவி என அதன்பின் தேடி சென்றேன். இன்று எனக்கு அனைத்தும் உள்ளது. ஆனால் என் தாய் இல்லை. அவளிடம் காண்பித்து என்னால் மகிழ முடியவில்லை. தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் சுவை இருக்கும் என்பார்கள், ஆனால் எந்த தேடல் என யாரும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
ஆம் மகனே, வாழ்க்கையில் தேடல், வாழ்க்கையே தேடல். தேடுவது அறியாமல் தேடி தொலைக்கிறோம்.
மண்ணை தேடி சிலர்
பொன்னை தேடி சிலர்
பதவியைத் தேடி சிலர்
ஆனால் நாம் தேட வேண்டியது ஆரோக்கியத்தை, அன்பான உறவுகளை, நிம்மதியை.
நம்மில் பலர், இல்லாதபோது தேடல் அதிகம், இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.
எது தேவை என அறியாமல் எவ்வளவு தேடினாலும் கிடைக்காது. தேவை முடிந்த பின்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது சிலரின் தேடல். அது எங்கு போய் முடியும் என தெரியாது.
ஆமாம்மா, தேடலுக்கு ஒரு எல்லை உண்டு. பணம், பதவி, பொன் என தேடிப் போனால் வாழ்க்கையை தொலைத்து விடுவோம். தொலைந்த பின் தேடுவது எந்த பயனும் அளிக்காது. என் அனுபவத்தில் கூறுகிறேன். அன்பு, பாசம், உறவுகள், ஆரோக்கியம், நிம்மதியை தேடுங்கள் . அது நிரந்தரம் மற்றவை நிரந்தரம் கிடையாது.
இன்று உன்னிடம் இருக்கும், நாளை வேறு ஒருவரிடம் செல்லும். இதற்கு நாம் இடும் சண்டைகள், போட்டிகள் ஏராளம். இருக்கும் வரை அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் இருங்கள். இன்றைய சூழலில் நம் இறப்புக்கு கூட நாலுபேரும் வரும் சூழல் இல்லை. போகும்போது நாம் தேடி அடைந்த எதையும் கொண்டு செல்வதில்லை.
சரி கவலை வேண்டாம் மகனே! இப்பொழுது நீ புரிந்து கொண்டாய், எதை தேட வேண்டும் என்று. இளம் வயதில், மனதில் ஆயிரம் எண்ணங்கள். எது சரி, தவறு என புரியாத வயது. இப்பொழுது உன் குழந்தைகளுக்கு கற்றுக் கொடு எந்த தேடல் சுவை என்று.
உண்மையான தேடலை தேடும்பொழுது, எத்தனையோ விஷயங்களை தொலைக்கலாம், ஆனால் தேடிக்கொண்டிருக்கும் இலக்கை (ஆரோக்கியம், நிம்மதி) மட்டும் கை நழுவ விடக்கூடாது என்று கூறி அந்த தாய் அவனை வாழ்த்தி அங்கிருந்து மறைந்தாள்.
கதை கருத்து:
வாழ்வின் தேடல் பொருட்களின், பணத்தின் மீது இருக்கக் கூடாது. உயிர் இருக்கும் வரை தேடு, அந்த தேடல் உன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதாக இருக்க வேண்டும். அழகிய தேடலில் ருசியிருக்கும், பகை இருக்காது. பாடலை ரசிப்பதுபோல், தேடலை ரசியுங்கள். ஆரோக்கியம், உறவுகள், நிம்மதியை தேடி தொடரட்டும் உங்கள் தேடல் பயணம்….
நன்றி!!!
வணக்கம்!!!