கதை கேளு — விவசாயம்
உலகப் புகழ் பெற்ற கல்லூரி, இக்கல்லூரியில் படிக்க மாணவர்களிடையே கடும் போட்டி, பெற்றோர்களுக்கோ தன் பிள்ளைகள் இங்கு படித்தால் மிகப்பெரிய சமூக அங்கீகாரம், பெருமை. இங்கு பணிபுரிய ஆசிரியர்களுக்கு மிகுந்த ஆர்வம். இச்சூழலில் இக்கல்லூரியில் முதல்வராக முனைவர்.சந்தானம்
அவர் பணியில் சேர்ந்த முதல் நாளில், இறுதியாண்டு மாணவர்களுடன் உரையாற்றுகிறார். அவர் உரையாடல் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. உரையாடலின் இறுதியில், அவர் மாணவர்களிடம் நான் உங்களுக்கு இடையே ஒரு போட்டி நடத்தலாம் என முடிவெடுத்துள்ளேன். இப்போட்டி நடத்த இன்றிலிருந்து மூன்று மாத கால அவகாசம், போட்டி என்னவென்றால் இக்கல்லூரியில் படிக்கும் போது நீங்கள் பல திறன்களை கற்கவேண்டும். அதனடிப்படையில் முதல் ஐந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஐந்து வெற்றியாளர்களின் புகைப்படம் இக்கல்லூரியின் சுவரில் “சிறந்த மாணவர்கள்” என பொறிக்கப்படும்.
மாணவர்களுக்கு மிகப் பெரிய சந்தோசம். எப்படியாவது இப்போட்டியில் வென்று முதல் 5 இடத்தில் பிடிக்க வேண்டுமென முனைந்து கொண்டு. அவர்கள் பல திறன்களை கற்க முற்படுகின்றனர் அவற்றில் தொழில்நுட்பங்களும், வாழ்க்கைத் திறன்களும் அடங்கும்.
மூன்று மாத காலம் முடிந்து. முதல்வர் அனைத்து மாணவர்களையும் சந்திக்கிறார். இன்று தான் போட்டி. நீங்கள் அனைவரும் வெள்ளைத் தாளில் நீங்கள் கற்ற திறன்களை பட்டியலிட்டு என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதன்படியே மாணவர்கள் உடனடியாக வெள்ளைத்தாளில் தாங்கள் கற்ற திறமைகளை தங்கள் பெயருடன் எழுதி முதல்வரிடம் சமர்ப்பிக்கின்றனர். முதல்வர் அனைத்து தாள்களையும் படித்து, நான் போட்டியின் முடிவை அறிவிக்க போகிறேன். நான் உங்கள் தாள்களை படித்ததில் இந்த போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அறிவிக்கிறார்.
மாணவர்களுக்கு இது எப்படி சாத்தியம்? நாங்கள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இத்தனை திறன்களை கற்றுள்ளோம். ஆனால் நீங்கள் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் அது எப்படி எனக் கேட்கின்றனர்.
முதல்வர் சந்தானம், தேர்ந்தெடுத்த மாணவருக்கு விவசாயம் தெரிந்தது. நீங்கள் தொழில் நுட்பங்களை நன்கு கற்று உள்ளீர்கள். தொழில்நுட்பத்தை கற்றுள்ள நீங்கள் வாழ்க்கை திறனான விவசாயத்தை கற்கவில்லை. 3ஜி, 4ஜி, 5ஜி தெரிந்த உங்களுக்கு, கஞ்சி ஊற்றுகின்ற விவசாயம் தெரியவில்லை. அதனால் தான் நான் உங்களை சிறந்த மாணவர்கள் பட்டியலில் தேர்ந்தெடுக்க வில்லை என்று கூறினார்.
குடும்பத்தில் முதல் பட்டதாரி என பெருமை கொள்ளும் நேரத்தில், கடைசி தலைமுறை விவசாயி நாம் என்பதை மறந்து விடுகிறோம். உணவூட்டும் விவசாயத்திற்கு உயிரூட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் நான் இப்போட்டியினை நடத்தினேன். நீங்கள் அனைவரும் விவசாயத்தை க(கா)ற்கவேண்டும்.
பணம்,பொருள் சம்பாதிக்க ஆயிரம் தொழில்கள் இருக்கு, ஆனால் உணவை சம்பாதிக்க நம்மகிட்ட விவசாயம் மட்டுமே. குறைந்தது 100 சதுர அடியாவது விவசாயம் செய்யுங்கள் என்று கூறி முதல்வர் விடைபெற்றார்.
கதை கருத்து
படைப்பவன் மட்டுமே கடவுள் அல்ல. மற்றவர்கள் பசிக்காக உழைப்பவனும் கடவுள்தான். ஆன்லைன், கைப்பேசி என பல தொழில்நுட்பங்களை தயாரித்து லாபம் பார்க்கின்ற நாம், அந்த விவசாயத்துக்கும், விவசாயிக்கும் விசுவாசம் காட்டணும்.
கண்களுக்கு விருந்து படைக்கும் கூத்தாடி பின் ஓடுவதுற்கு பதில், நம் வயிற்றுக்கு உணவு படைக்கும் விவசாயிக்கு உதவுவோம்.
விவசாயிகள் விதைகளை விதைக்கப்படும், நாம் விவசாயம் அழியாது என்ற நம்பிக்கையை விதைப்போம்.
நன்றி வணக்கம்