100வது வாரம்

Sankar sundaralingam
2 min readMay 28, 2022

--

கதை கேளு — எளிமை

100வது கதை என்ற மைல்கல்லை எட்ட காரணமாக இருந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். எமது 100 கதைகளை இணைத்து புத்தகமாக வெளியிட உள்ளேன். தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

— — — — — — — — — -

இரண்டு பெண்கள் வீதியில் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த தெருவில் நடந்து செல்பவரை பற்றி அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். அந்த ஆளை பார் ஓட்ட சைக்கிள், கிழிந்த வேட்டி, தேய்ந்த செருப்பு. பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். நம்ம ஊரில் பிச்சைக்காரர்கள் இல்லையே! வெளியூர் ஆளாக இருக்கலாம்.

அந்த நபர் பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்க்கு அருகில் வந்தார், பெண்கள் வியப்போடு பார்த்தனர். அவர்கள் அமர்ந்திருக்கும் வீட்டிற்க்கு அருகிலுள்ள வீட்டிற்கு சென்று, சிறிது நேரத்தில் அங்கிருந்து திரும்பி சென்றார். அவரை வழி அனுப்ப தேன்மொழி என்பவள் வந்தாள்.

தேன்மொழி! யாருமா? அந்த ஆள் பார்க்க ஒரு மாதிரியா இருக்காரு, உங்க அப்பாவுக்கு உடம்பு முடியலையா, தெரியாத ஆட்களை வீட்டிற்குள் அனுமதிக்காதே.

அப்படி இல்லை அத்தை, அவர் பெயர் கல்யாண ராமன். அப்பா வேலை செய்யும் கம்பெனியின் உரிமையாளர்.

என்ன சொல்கிறாய் தேன்மொழி, நம்ப முடியவில்லை. ஒரு வேளை பெரிய கருமியாக இருக்கலாம்.அப்போ இவ்வளவு சொத்தை வைத்து என்ன பண்ணப் போறார்? ஆள பார்த்த பிள்ளை, குட்டிகளுக்கு கூட செலவு செய்வதில்லை போல இருக்கு..

அவரது எளிமையை கண்டு ஏளனம் செய்யாதீர். அவர் எளிமையானவர், வீண் ஆடம்பரம் அவரிடம் கிடையாது. செல்வத்திலும் எளிமையாக இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா உங்களுக்கு?

அவர் சிறுவயதில் வறுமையில் இருந்தார். வறுமையென்றால் அப்பேற்பட்ட வறுமை. சாப்பாட்டுக்கே பஞ்சம். அவரது தந்தை சிறுவயதில் இறந்து விட்டார். வறுமையின் காரணமாக அவர் பள்ளிக்கூடம் கூட போகவில்லை. வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தார். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறினார். இன்று சொந்த வீடு, கார், பணத்தட்டுப்பாடற்ற நிம்மதியான வாழ்க்கை. அவர் பணத்தின் அருமை தெரிந்திருந்தாலும் அதற்க்கு அடிமை ஆகாமல் எளிமையாக இருந்து வருகிறார். உங்களுக்கே தெரியும் புது பணக்காரர்களின் ஆட்டம் எப்படி என்று.

எளிமை பெருந்தவம். எளிமை என்பது தோற்றத்தில் மட்டுமல்ல. எளிமை என்பது மனதிலும், சுபாவத்திலும், அகங்காரமற்ற குணத்திலும், மதியிலும் கலந்து இருப்பதாகும். எளிமை என்பது உயர்ந்த பண்பை வெளிப்படுத்தும் குணாதிசயம்.எளிமை அடக்கத்துடன் கூடியது. அடக்கம் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும். எளிமை வாழ்க்கையின் தூய்மையான அழகை வெளிப்படுத்துகிறது. எதற்க்கும் பயப்படாமல் வலிமையாக வாழ வைக்கிறது.

எளிமை எளிமையானதல்ல, ஆனால் கடினமானதும் அல்ல. அது இயல்பானது. இயல்பாக இருந்தால் அனைவரையும் ஈர்க்க முடியும். எளிமை என்பது ஏழ்மையல்ல, பிறர் மனதை மயக்கும் சக்தி. எளிமை ஒரு சிறந்த தலைமை பண்பு. அவர் என்றுமே புகழுக்கும், அடுத்தவர்கள் சொத்துக்கும் ஆசை பட்டதில்லை. அனைவரிடமும் சகஜமாக பழகுவார்.

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அதை கற்று தருகிறார். இந்த காலத்தில் அப்பன் சம்பாதித்த சொத்தை வைத்து கொண்டு பந்தா செய்பவர்களின் மத்தியில், தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்ததில் ஊதாரித்தனம் செய்யாமல், தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவிகள் செய்து எளிமையாக வாழ்ந்து வருகிறார் கல்யாண ராமன்.

எளிமையாக வாழ்ந்தவர்கள் பலரை நாம் அறிந்திருக்கிறோம் உதாரணமாக காமராஜர், கக்கன் , அப்துல் கலாம், இன்னும் பலர் . இன்று நம் கண் முன்னாடி வாழ்பவர்களை கண்ட மேனிக்கு விமர்சிக்காதீர்கள். அவர்களை உதாரணமாக பார்த்து எளிமையாக வாழ்வதற்க்கு முயற்சி செய்யுங்கள் .

இப்ப கூட இங்க வந்தது அப்பாவின் மருத்துவ செலவுக்கு பணம்கொடுக்க. எவ்வளவு செலவானாலும் தான் பார்த்துக்கொள்வதாகவும் வாக்கு கொடுத்தார்.

அவரது எளிமைக்கு பின்னால் இவ்வளவு ஆழமான கருத்தும், காரணமும் இருப்பது எங்களுக்கு தெரியாது. விளக்கியதற்கு நன்றி. நாங்கள் எளிமையாக இருக்க முயற்சிக்கிறோம்.

கதை கருத்து:

வாழ்க்கையின் மிக உயர்ந்த பண்பு எளிமை — லியோனார் டோ டாவின்சி

எளிமையை நாம் எண்ணி புறக்கணிக்காமல், நகைக்காமல் அதனை நம் வாழ்வுடன் அணைத்து மகிழ்ந்தால் மனித வாழ்க்கையில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் என்றும் இனிமையாக இருக்கும். எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. எளிமை வாழ்வின் இனிமை.

இலக்கணம் இளைமையாக இருந்தால் தான் புரிகிறது, எளிமையான கவிதை அனைவரையும் கவர்கிறது. எளிமையான வாழ்வே ஏற்றத்தை கொடுக்கும். எளிமை யதார்த்தம்.

எளிமை கற்போம்.அவ்வழி நடப்போம்…..

--

--

No responses yet