25வது வாரம் -கதை கேளு — பணம்

Sankar sundaralingam
2 min readDec 19, 2020

--

கணவன்- மனைவிக்கிடையே பெரிய வாக்குவாதம். கணவன் மனைவியிடம் கூறுகிறான், தன்னுடைய கடமை பணம் சம்பாதிப்பது “திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற பழமொழிக்கேற்ப நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். குடும்பம்,குழந்தைகளை பார்க்க வேண்டியது, உன்னுடைய வேலையாகும். அதில் என்னை இழுத்துவிட்டு, எனது நேரத்தை வீணாக்காதீர். பணம் இருந்தால் நம் பொருளாதார நிலை மற்றும் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

மனைவி கணவனைப் பார்த்து, ஏங்க ஆம், குடும்பத்தை பார்ப்பது என் கடமை. அதை நான் ஒருபோதும் வேலையாக கருதவில்லை. என் கவலை நீங்கள் குழந்தை, குடும்பத்தை பார்ப்பது மட்டுமல்ல உங்கள் உடல்நலத்தை பார்ப்பதும் தான். எத்தனை பணக்காரர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருந்துள்ளது? அடப் போமா, பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கிடலாம், பணம் தான் வாழ்க்கை.

இதைக் கேட்டவுடன் மனைவிக்கும் புரிந்துவிட்டது, தன் கணவனுக்கு பணப் பைத்தியம் பிடித்துவிட்டது. இதை எப்படியாவது அகற்றவேண்டும் என எண்ணி கணவனிடம் பேச ஆரம்பிக்கிறாள்.

ஏங்க, பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பணமும் ஒருவகையில் ஜாதி மாதிரிதான். இருப்பவன் உயர்ந்தவன், இல்லாதவன் தாழ்ந்தவன் என பிரித்துப் பார்க்கிறோம். பணம் வைத்திருப்பவர்களை கண்டு பொறாமைப்பட்ட காலமெல்லாம் மாறி, ஆரோக்கியமானவர்களை பார்த்துதான் பொறாமை படுகின்றனர்.

பணத்தால் கடந்துபோன காலங்களையும், மறைந்துவிட்ட இளமையும், போய்விட்டு உயிரையும் வாங்க முடியுமா? கூறுங்கள். என்னமா பேசுகிறாய், அது எப்படி முடியும்? முடியாத விஷயங்களை கூறி என்னை திசை திருப்ப பார்க்கிறாய்.

நீங்கள் அப்படி நினைப்பது தான் தவறு.

உங்கள் பணத்தால்,

வீடு வாங்கலாம் , ஆனால் அன்பான இல்லத்தை அல்ல.

கடிகாரம் வாங்கலாம், ஆனால் பொன்னான நேரத்தை அல்ல .

கட்டில் மெத்தை வாங்கலாம், ஆனால் நிம்மதியான தூக்கத்தை அல்ல

காப்பீடு வாங்கலாம், ஆனால் பாதுகாப்பு அல்ல.

விதவிதமான சாப்பாடு வாங்கலாம், ஆனால் பசியை அல்ல .

புத்தகம் வாங்கலாம், ஆனால் அறி வை அல்ல.

மருந்து வாங்கலாம், ஆனால் ஆரோக்கியத்தை அல்ல.

பணத்தால் வாங்க முடியாதவைகள் இன்னும் பல இந்த உலகில் உண்டு. அது உங்களைப் போன்றவர்களுக்கு தெரிவதில்லை, புரிவதும் இல்லை. இன்று உங்களிடம் நாங்கள் உள்ளோம் ஆனால் உங்களுக்கு பணத்தின் மீது பற்று எங்களைவிட. பணம் சம்பாதித்த பிறகு அனுபவிக்க எங்களை தேடும்போது காலம் கடந்து விடும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. உங்களுக்கும் எனக்கும் வயதாகி விடும். நம் குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள். அவர்களது குழந்தை பருவத்தை அனுபவிக்காமல் போய்விடும்.

மனைவியை பார்த்து கணவன், சரிமா தவறுதான். நான் இதை உணர்ந்து விட்டேன். எனக்கு நன்றாக புரிந்தது. பணம் வாழ்க்கையில் ஒரு அங்கம் தான், அது மட்டுமே வாழ்க்கை கிடையாது. பணத்தோடு குடும்பம் நடத்த முடியாது.

கதை கருத்து: இன்று நாம் அனைவரும் பணம் என்ற ஒரே குறிக்கோளுடன் பயணித்து வாழ்க்கையின் உண்மையான சுகங்களை புறக்கணிக்கிறோம். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் “எளிய மாத தவணை” நம்மை ஏழ்மையாக்கி விடுகிறது.

தேவைக்கதிகமாக ஆசைப்பட்டு, உங்கள் உடல் ஆரோக்கியத்தை கெட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.

வாழ்வதற்கு செலவு மிகக்குறைவு

மற்றவர்களை போல் வாழ்வதற்குத்தான்

செலவு மிக அதிகம்

பணம் என்ற மோகத்தில் அன்பு, பண்பு,நட்பு, உறவு, வாலிபம், வாழ்க்கையை இழக்காதீர்கள்.

பணம், பணம் என்று ஓடி நிம்மதியைத் தொலைக்காதீர்கள்.

பணத்தால் கிடைக்கும் புகழ் நம்மிடம் பணம் இருக்கும் வரை மட்டுமே நிலைக்கும், குணத்தால் கிடைக்கும் புகழ் இறந்த பின்பும் நிலைக்கும் .

- சுவாமி விவேகானந்தர்.

--

--

No responses yet