Sankar sundaralingam
4 min readJun 12, 2021

--

50வது வாரம் — கதை கேளு- பாதைகள்

இது எனது ஐம்பதாவது தொகுப்பு 50வது கதை. என்னை கதைகளை எழுத ஊக்குவித்த குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது மகத்தான நன்றியை இங்கனம் பதிகிறேன். உங்களுடைய ஊக்கம்,பாராட்டு இல்லையென்றால் இந்தப் பாதைகளை என்னால் கடந்து இருக்க முடியாது. இந்த 50வது தொகுப்பு எனது பாதையில் ஒரு மைல்கல்….…….

ஒரு கிராமத்தில் உடற்பயிற்சி பயிற்சியாளர் இருந்தார், அவரது பயிற்சி பள்ளியில் எண்ணற்ற மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளை பயின்று வந்தனர். இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் அந்த மாணவர்களுக்கு இடையே நிறைய இருந்தது. இதைக் கண்டு ஆச்சரியம் பயிற்சியாளர்க்கு, இதை எப்படி நீக்குவது என்று ஆழ்ந்து சிந்தனை செய்தார். இவ்வேளையில் ஒரு நாள் மாணவர்களுக்கு இடையே சலசலப்பு, என்ன என விசாரித்த பயிற்சியாளர் அறிந்து கொண்டது. விளையாடுவதில் முதலிடம் வசதி படைத்த மாணவர்களுக்கு , அவர்கள் விளையாட்டு முடித்ததற்கு அப்புறம் தான் மற்ற மாணவர்கள் விளையாட வேண்டும். இவர்களுக்கிடையே 3 பிரிவு, 1- பணக்கார மாணவர்கள்,2- நடுத்தர மாணவர்கள்,3- ஏழை மாணவர்கள்.

இதை எப்படியாவது அகற்றவேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சியாளர் மூன்று பிரிவுகளில் இருந்து பிரதிநிதிகளை அழைத்தார். அவர்களிடம் கூறினார் உங்களில் யார் முதலில் விளையாட வேண்டும்? யார் பெரியவர் சிறியவர் என முடிவு எடுப்பது பணமோ, பொருளோ கிடையாது, உங்கள் திறமை தான். திறமை இருந்தால் பணத்தையும், பொருளையும் எளிதாக சம்பாதித்துவிடலாம். அதனால் நான் உங்கள் மூன்று பேருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன். அந்த போட்டியினை வெல்பவரே திறமையானவர் என கருதப்படுவார். மூவரும் போட்டிக்கு ஒப்புக் கொண்டு, என்ன போட்டி என கூறுங்கள் எனக் கேட்டனர்.

அதற்கு பயிற்சியாளர் ஊரில் இருந்து சற்று தொலைவில் உள்ள மலையைக் காட்டி, அந்த மலையை யார் முதலில் சென்று அடைகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர். அந்த மலையை அடைவதற்கு நீங்கள் மூவரும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும். மிதிவண்டியை ஓட்டியும் செல்லலாம், கையில் எடுத்துக் கொண்டு செல்லலாம். அது உங்கள் சவுகரியத்தை பொருத்தது.

உடனடியாக அந்த 3 பிரதிநிதிகளும் தங்கள் மிதிவண்டியை எடுத்து தயார்படுத்தி போட்டிக்கு தயாராகினர். பணக்கார அணியை சேர்ந்த பிரதிநிதி, போட்டிக்கென தொழில்நுட்பத்துடன் உள்ள மிதிவண்டி புதிதாக வாங்கி தயாராகினான். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பிரதிநிதி மிதி வண்டியுடன் தயாராகினான். ஏழை குடும்பத்தை சேர்ந்த பிரதிநிதி பழைய மிதிவண்டி உடன் தயாராகினான்.

மற்ற இரண்டு அணிகளும், பணக்காரர் அணியின் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மிதிவண்டியை பார்த்து எப்படி இந்த மிதிவண்டி வண்டியை நமது அணி வெல்ல முடியும் என கவலை அடைந்தனர் . அவர்களது முகமும் வாடியது.

போட்டியை ஆரம்பிப்பதற்கு முன்பு பயிற்சியாளர், மூணு பிரதிநிதிகளுடன் நீங்கள் எந்த பாதையில் ஆனாலும் தேர்ந்தெடுக்கலாம். இந்த வழியில்தான் செல்ல வேண்டும் என எந்தக் கட்டாயமும் கிடையாது. உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு, பாதை கிடைக்கவில்லை என்றால், உன் பாதங்களை பதிய, பாதையை உருவாக்கு. நீ செல்வதற்கான பாதையை தேடாதே, பாதையை நீயே உருவாக்கு எனக்கூறி போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டி தொடங்கிய சற்று நேரத்தில் பணக்கார அணியின் பிரதிநிதியின் மிதிவண்டி மின்னல் வேகத்தில் பறந்தது. நடுத்தர அணியின் பிரதிநிதி தனது சைக்கிளுடன் ஒரு மாற்றுப் பாதையை கண்டுபிடித்து புறப்பட்டு சென்றான். ஏழை அணியின் பிரதிநிதி தனது மிதிவண்டியின் பயணத்தைத் தொடங்கினான். சற்று தொலைவில் அவனது மிதிவண்டி பழுதடைந்தது. அவன் என்ன செய்வது என்று அறியாமல் துடித்தான்.

அவன் பயிற்சியாளர் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் சொன்னதை சற்று சிந்தித்து யோசித்தான். உடனடியாக சைக்கிளைத் தூக்கிக் கொண்டு காட்டுப் பகுதியில் தானே பாதம் பதித்து, புதிய பாதையில் தனது பயணத்தை தொடங்கினான்.

பணக்கார அணியின் பிரதிநிதி, பாதையைக் கண்டுபிடித்து சாலை வழியாக வேகமாக முக்கால் பாகம் இலக்கை அடைந்தான். அது மலை பிரதேசம் என்பதால் , அங்கே கேளிக்கை விடுதிகள், ஆடம்பர சொகுசு பங்களாக்கள் மற்றும் உணவகங்கள் இருந்தது. இதை கண்ட அந்த பிரதிநிதி, சரி நாம் முக்காவாசி வந்துவிட்டோம். சற்று இளைப்பாறி செல்லலாம் என முடிவெடுத்து அங்கு தங்கினான்.

“வானிலையை விட அதிகமாக மாறுவது மனநிலை, இந்த மனங்களில் மனநிலையை அடக்க தெரிந்தவன் அறிவாளி.”

நடுத்தர அணியின் பிரதிநிதி எப்படியாவது குறுக்கு வழியில் அந்த மலையை அடைவதற்கு, கிராமப்புறத்தை தேர்ந்தெடுத்து சென்றான். போகும் வழியில் அவனுக்கு பலதடைகள். கிராமத்து மக்கள் ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்கு செல்ல அவனை அனுமதிக்கவில்லை.

திட்டமிடாத பாதையிலும், குறுக்கு வழியிலும் இலக்கை அடைவது கடினம்.

இப்படியாக ஏழை அணியின் பிரதிநிதி நடந்தே அந்த மலையை முதலில் அடைந்தான். நடுத்தர அணியின் பிரதிநிதி கிராமப்புற மக்களின் தொந்தரவால் மாற்று பாதை மாறி வெகு தூரம் சென்று இரண்டாவதாக மலையை அடைந்தான். பணக்கார அணியின் பிரதிநிதி கேளிக்கை விடுதியில் பொழுதைக் கழித்து அங்கேயே தங்கி, இரண்டு நாட்கள் கழித்து தான் அந்த மலையை அடைந்தான்.

பயிற்சியாளர் மூவரையும் மலையில் சந்தித்தார். வெற்றி பெற்றவரை வாழ்த்தினார். பின்னர் மூவரையும் ஒவ்வொருவராக தனது அனுபவத்தை பகிர சொன்னார்.

முதலில் பணக்கார அணியின் பிரதிநிதி, நான் முதலில் வென்றிருக்க வேண்டும் ஆனால் வாய்ப்பை தவற விட்டேன். ஏனென்றால் எனது கவனம் திசை மாறியது. இதில் நான் கற்றது பாதை திசை மாறினால் வாழ்வின் வளமை தடுமாறி விடும். இளமையில் பாதைகளை தடுமாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் உங்களுக்கான எதிர்காலம் தடுமாறி விடும்.

நடுத்தர அணியின் பிரதிநிதி, நான் குறுக்கு வழியில் சென்று மலையை அடைந்து விடலாம் என நினைத்தேன் ஆனால் என் வழி தவறானது. அதனால்தான் என்னால் வெகுதூரம் சென்று சீக்கிரம் மலையை அடைய முடியவில்லை. இந்த நிகழ்வில் எனது கற்றல், கடுமையான பாதை என்று எதுவுமில்லை, பாதையை மாற்றாதே. பாதை குறித்து உன் பார்வையை மாற்று. நாம் வகுக்கும் பாதை நம்மோடு முடிவதில்லை, அதில் பயணிக்க பலர் உண்டு ஆதலால் வகுக்கும்போதே பிழையின்றி வகுப்பது தான் நல்லது.

வெற்றி பெற்ற பிரதிநிதி தனது அனுபவத்தை பகிரத் தொடங்கினார். கடினமான பாதைகள் எப்போதும் மகிழ்ச்சியான இலக்கையை சென்றடையும். செல்லும் பாதைகள் சரியாக இருந்தால் வேகமாக அல்லது மெதுவாக சென்றாலும் வெற்றிதான். பாதைகள் மாறினாலும், இலக்குகள் மாறாவிட்டால் பயணங்கள் முடிவதில்லை.

இறுதியாக பயிற்சியாளர், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். உங்களுக்குள் வேறுபாடு இருக்கக்கூடாது. இந்த மூவரும் ஒற்றுமையோடு இருந்திருந்தால், மூவரும் ஒரே நேரத்தில் மலையை அடைந்திருக்கலாம். இதிலிருந்து நாம் கற்கும் பாடம் என்னவென்றால், நடக்கும் பாதை ரோஜா மலர்களின் மீது அமைய வேண்டும் என நினைப்பது தவறு இல்லை. ஆனால் அதில் ஒரு முள் கூட இருக்கக்கூடாது என நினைப்பது அர்த்தம் இல்லை.

கதை கருத்து:

வாழ்க்கை பாதை உங்களுக்கானது மட்டும் மற்றவர்கள் உங்களுக்கு துணையாக நடக்க முடியும். ஆனால் உங்களுக்காக நடக்க இயலாது. சரியான பாதைகள் தெரிவதற்கு முன் பயணங்கள் மாறி விடுகிறது அல்லது முடிந்துவிடுகிறது.

பாதையை தேடுபவன் சாதாரண மனிதன்!

பாதையை உருவாக்குவோம் சாதனை மனிதன்!

உருவாக்கும் நமக்கான பாதையை!

நன்றி! வணக்கம்!

--

--