அறிவோம் அறிவியலை — கடுகு
சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக கடுகு பயன்பாடு நமது உணவு முறையில் இருந்துள்ளது. கடுகை பயன்படுத்தும் நம்மில் எத்தனை பேருக்கு அதன் மருத்துவ மகத்துவம் தெரியும்?
கடுகு வாசனை மற்றும் சுவைக்கு மட்டும் நம் உணவில் சேர்க்கப்படுவதில்லை. அதற்கு பின்னால் அறிவியலும், மருத்துவமும் அடங்கியுள்ளது. கடுகு விதைகளை உணவில் நேரடியாக சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம். மேலும் உணவுகளை தாளிக்கும் போது எண்ணையில் சிரிது கடுகை சேர்த்து அலங்கரித்தும் சாப்பிடலாம். ஊறுகாய் போன்றவற்றில் கடுகை வறுத்து பொடி செய்து, கடுகு எண்ணையோடு சேர்த்து தாளித்து பயன்படுத்தலாம். கடுகு எண்ணெயில் ஊறுகாய் செய்தால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
கடுகை பற்றிய பழமொழிகள் நம் வழக்கத்தில் உள்ளன. அவற்றில் சில இங்கே பதிவிடுகிறேன். அந்த அளவிற்கு கடுகு நம் வாழ்க்கையில் கலந்துள்ளது. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது”- கடுகின் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாது.அளவில் சிறியதாக இருந்தாலும் செயல்திறனில் நிறைவாக இருக்கும்
“கடுகு களவும் களவுதான் , கர்ப்பூரக் களவும் களவுதான்”
“கடுகு மலையாச்சு , மலை கடுகாச்சு”
“கடுகுச்சு முடுகுச்சு வடுகச்சி காரியம்”
“கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய்போகிற இடம் தெரியாது”
கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகைகள் உள்ளன. கடுகுக்கு தன் சுவை கிடையாது. கடுகை குளிர்ந்த நீருடன் சேர்க்கும் போது அல்லது சூடான எண்ணெயில் பொரிக்கும் போது, அதன் மேல் தோல் அப்புறப்படுத்தப்பட, மைரோஸினேஸ் எனப்படும் நொதியம்(enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம்.
கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.
கடுகு எண்ணெயின் மருத்துவ குணங்கள் :
கடுகு எண்ணெயில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் நல்லெண்ணெய் போன்று ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதில் உள்ள சில உட்பொருள்கள் கேன்சர் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.கடுகு எண்ணெய் குளிர்ச்சி தன்மை அற்றது. இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலை வலி, தலையில் நீர் கோர்த்தல், இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
கடுகு எண்ணெயை உட்கொள்வதன் முக்கிய நன்மைகளில் ஒன்று ஆரோக்கியமான கொழுப்புகளில் நிறைந்துள்ளது.
கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் தலை முடி நன்றாக வளரும்.
கடுகு எண்ணெய்யை உடலில் மசாஜ் செய்து வந்தால் உடலில் தேவையில்லாத டாக்சின்ஸ் வியர்வையில் வெளியேறிவிடும்.உடலில் எந்த வலி இருந்தாலும் இந்த கடுகு எண்ணெய்யை பயன்படுத்தலாம். அதுவே உடலில் ரொம்ப வலி உள்ளவர்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால் பலன் அளிக்காது.
வறண்ட சருமம் உள்ளவர்கள் உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும்போது இந்த கடுகு எண்ணெய்யை 2 சொட்டு எடுத்து ஃபேஸ் பேகில் கலந்து போட்டால் முகம் நன்றாக பளபளப்பாக இருக்கும்.
கடுகு எண்ணெய்யை கைகளில் அரிப்பு, புண்கள், தேமல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கடுகு எண்ணெயை தேய்த்து வந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது.
பற்களில் ஏற்படும் இரத்த சிதைவு பிரச்சனையை சரியாக்க 1 ஸ்பூன் தூள் உப்பு, கடுகு எண்ணெய் 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து மிக்ஸ் செய்து தினமும் காலையில் பல் தேய்த்த பிறகு இந்த கலவையை பற்களில் தடவி வந்தால் பற்களில் உள்ள ஈறு பிரச்சனைகள் சரியாகிவிடும்.
வெந்தயத்தை பொடி செய்து கடுகு எண்ணெயுடன் பேஸ்ட் போல் மிக்ஸ் செய்து உங்கள் முடிகளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து அதன் பின்னர் தலையை ஷாம்பு போட்டு வாஷ் செய்துகொள்ளலாம்.
ஒவ்வொரு இந்திய வீடுகளில் கடுகு எண்ணெய் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் நன்மை செய்கிறது. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க உதவுவதோடு ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இவை இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகும்.
கடுகின் மருத்துவ பயன்கள்
புற்றுநோய் சிகிச்சை:
கடுகு விதைகளில் குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் மைரோசினேஸ் போன்ற சேர்மங்கள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க பைட்டோ கெமிக்கல்களைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஹுயுமன் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் டாக்ஸிகாலஜி என்கிற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி இந்த சின்னஞ்சிறிய விதைகளில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது மேலும் புற்றுநோய்க் காரணிகளின் பாதிப்புகளுக்கு எதிராக பாதுகாக்கிறது என்று தெரிவிக்கிறது.
இருமலை கட்டுப்படுத்தும்:
மணத்துக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் விடவும். இதனுடன் லேசாக வறுத்து பொடி செய்த கடுகை சேர்த்து சூடுபடுத்தினால் இளகிய பதத்தில் வரும். இது ஆறியவுடன் சுண்டைக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டால் இருமல் கட்டுக்குள் வரும்.
கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேனீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்னைகள் இல்லாமல் போகும். இந்த தேனீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.
விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது:
பூச்சி, வண்டு கடி விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு.
தலைவலியை போக்கும் தன்மை கொண்டது:
தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும்போது கடுகு திறம்பட மருந்தாக (மக்னீசியம்) செயல்படுகிறது. இதிலுள்ள மக்னீசியம் நரம்பு மண்டலத்திற்கு ஆறுதலளிக்கும் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் தரும்.
கடுகு செடியை பயன்படுத்தி ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். கடுகு செடியை சிறுதுண்டுகளாக வெட்டவும். இதில் போதுமான அளவு நீர்விட்டு கொதிக்க வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி, தலைபாரம், இருமல், நெஞ்சக சளி, மூக்கடைப்பு சரியாகும்.
விக்கலை கட்டுப்படுத்தும்:
கடுகை பயன்படுத்தி தொடர் விக்கலுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கடுகு பொடியில் நீர் விட்டு குலைத்து, அதை மெல்லிய துணியில் வைத்து தொண்டைக்கு அருகே வைத்தால் விக்கல் சரியாகும்.
சருமத்தை பாதுகாக்கிறது:
ஒவ்வொரு பருவ நிலையிலும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதற்கு கடுகு அதிக அளவில் உதவுகிறது. கடுகு விதைகள் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பருக்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த சிறிய கடுகு விதைகளில் அடங்கியுள்ள ஆன்டி — இன்ப்ளாமேட்டரி மூலக்கூறுகள் உடலில் வீக்கத்தை குறைக்கிறது.
கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.
செரிமான நலத்திற்கு சிறந்தது:
கடுகு விதைகள் செரிமான மண்டலத்திற்கு அற்புதமான நன்மைகளைச் செய்கிறது. செரிமானப் பிரச்சனையால்பாதிக்கபட்டவர்கள் அதிலிருந்து விடுபட கடுகு உதவும். இந்த சிறிய விதைகளில் ஏராளமான நார்ச்சத்து அடங்கியுள்ளது, இது கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது மேலும் உடலின் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
எலும்புகள், பற்களை வலிமையாக்குகிறது:
கடுகில் செலினியம் என்கிற மினரல் நிறைந்திருப்பதால் எலும்புகளுக்கு இது மிகவும் நல்லது. இது உங்கள் எலும்புகளை உறுதியாக்குகிறது. மேலும் கடுகு நகங்கள், தலைமுடி மற்றும் பற்களுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. கடுகில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி — இன்ப்ளாமேட்டரி மூலக்கூறுகள் அடங்கியுள்ளது. இது ஈறுகள் எலும்புகள் மற்றும் பற்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.
வயது முதிர்ந்த தோற்றத்தை தடுக்கிறது:
உணவில் கடுகை சேர்த்துக் கொள்வதன் மூலம் முதுமையைத் தாமதப்படுத்தலாம். கடுகு விதைகளில் விட்டமின் ஏ, கே மற்றும் சி நிறைந்துள்ளது. இது ஒரு மனிதரின் வயதாகும் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
இதயத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
ரத்தத்தை சுத்தப்படுத்தும்,ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
வலி நிவாரணியாக பயன்படுகிறது. வலியை குறைக்கும்.
மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது.
பாருங்க சின்ன கடுகில் இவ்வளவு அறிவியல் கலந்துள்ளது.