அறிவோம் அறிவியலை — கீழாநெல்லி

Sankar sundaralingam
3 min readMay 27, 2023

கீழாநெல்லி மருத்துவ குணமுள்ள கீரை, சுமார் 1 அடி வரை வளரும் தாவரம். இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர். இந்தியாவில் பல்வேறு ஆய்வுகூடங்களில் கீழாநெல்லியை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் உள்ளதை அறிய முடிந்தது. கீழாநெல்லி இந்தியாவைச் சார்ந்த தாவரம் ஆகும்.

“மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது” எனும் பழமொழிக்கு ஏற்ப, கீழாநெல்லி தாவரம் சிறியதாக இருந்தாலும், அது கொடுக்கும் மருத்துவப் பலன்களோ மிக அதிகம். கீழாநெல்லி முழுத் தாவரமும் மருந்தாக பயன்படுகின்றது. இதன் கீழாநெல்லியின் இலைகளில் பில்லாந்தின் என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும்.

கீழாநெல்லியின் சிறப்பு என்ன தெரியுமா! கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு என நான்கு சுவைகளின் அற்புதக் கலவையைக் கொண்டிருக்கும் மூலிகை கீழாநெல்லி.”செங்கீழாநெல்லி” எனும் வகை, வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் சிறந்த மூலிகை!

கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள் :

மஞ்சள்காமாலை நோயை குணப்படுத்தும் : “காணும் யாவும் மஞ்சளாகவே தோன்றும் கீழாநெல்லி காணாதவரை” என்ற பழமொழி மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி சிறந்த மருந்து என்பது நமக்கு உணர்த்துகிறது. காமாலை நோயைக் குணப்படுத்த பல ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பான மூலிகை கீழாநெல்லி.இதன் முழுச்செடியையும் அரைத்து, மோரில் கலந்து பருக, காமாலை நோயில் அதிகரித்திருக்கும் பித்தநீர் படிப்படியாகக் குறைவதைப் பார்க்கலாம்.காமாலை நோயில் பல வகைகள் உண்டு. நோயின் தன்மையையும் தீவிரத்தையும் அதன் வகையையும் அறிந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி கீழாநெல்லியை எடுத்துக் கொள்ளலாம்.

கல்லீரல் பாதுகாப்பு: கீழாநெல்லி கல்லீரலின் காவலன். மதுப்பழக்கம் காரணமாக முதலில் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல். மதுப்பழக்கம் காரணமாகக் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க, கீழாநெல்லியை சாப்பிட்டால் கல்லீரல் புத்துயிர் பெரும். கல்லீரலை பாதிக்காமல் கீழாநெல்லி தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.கீழாநெல்லியின் சாரங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வருகிறது.

பித்தம் போக்கும் / உடற் சூட்டை குறைக்கும் : உடலுக்குத் தேவைப்படும் குளிர்ச்சியை வழங்குவதால் கீழாநெல்லியை ‘இயற்கையின் ஏர்-கூலர்” என்று அழைக்கலாம். கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.

உடலில் அதிகரித்திருக்கும் பித்தத்தைக் கட்டுப்படுத்த முதலுதவி மருந்தாக கீழாநெல்லித் தைலத்தைப் பயன்படுத்தலாம். கீழாநெல்லித் தைலத்தை தலையில் தேய்த்து, வாரம் இரண்டு முறை குளித்து வர, உடலில் தேங்கிய அதிக வெப்பம் பறந்து போகும்.

அன்னவெறுப்பு நோயை குணப்படுத்தும்: உணவைப் பார்த்தாலே ஒரு வெறுப்பு ஏற்படும் உணர்வை அன்ன வெறுப்பு என்று சித்த மருத்துவம் அழைக்கிறது. அன்னவெறுப்பு குறிகுணத்துக்கு சிறிது கீழாநெல்லி, கடுக்காய், மிளகு ஆகியவற்றை அரைத்து, மோரில் கலந்து பருகலாம். அன்னவெறுப்பு உள்ளவர்கள் கீழாநெல்லியை உண்டால் அன்னவெறுப்பு, அன்னவிருப்பமாக மாறும்.

காயங்களை ஆற்றும்:ரத்தத்தை தூய்மை செய்யும் சக்தி கொண்ட கீழாநெல்லி, சரும நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் காவலன். இதன் இலைகளோடு உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தடவலாம். வெட்டுக் காயங்களுக்கு பூசவும் கீழாநெல்லிச் சாறு பயன்படுகிறது.

செரிமானத்தை தூண்டும்:கீழாநெல்லியை உணவு முறைக்குள் அவ்வப்போது சேர்த்துவர, பசித்தீயைத் தூண்டும். அதாவது, செரிமானத்துக்கு உதவி புரியும் சுரப்புகளை அதிகரிக்கச் செய்யும். ஏப்ரல், மே போன்ற வேனில் காலங்களில் மோரில் கறிவேப்பிலைப் பொடியையும் கீழாநெல்லி பொடியையும் கலந்து அருந்த, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.வயிற்றுப் புண்ணை சரி செய்வதற்கும் கீழாநெல்லி பயன்படுகிறது.

தலைவலியை நீக்கும் : தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு. நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்: உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும்: சிறுநீரகத்தில் தங்கிவிடும் நச்சுக்களை அவ்வபோது வெளியேற்றினாலே சிறுநீரகத்தின் செயல்பாட்டில் கோளாறு நேராது. இதை சிறப்பாக செய்ய துணைபுரிகிறது கீழாநெல்லி.

தலைமுடி உதிர்வு பிரச்சனைகள்: கூந்தல் பராமரிப்பிலும் கீழாநெல்லிக்கு தனி இடம் உண்டு. தலை உஷ்ணத்தால் முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருப்பவர்கள் கீழாநெல்லி இலையை அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வந்தால், தலைமுடி உதிர்வு சட்டென்று நிற்கும். மேலும் புதிய முடிகளும் உற்பத்தியாகும். தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

மலட்டுத் தன்மையைப் போக்கும்.

மருத்துவ தாவரங்களில் முதலிடத்தை கீழாநெல்லிக்கு தரலாம். அப்படி ஒரு அற்புத சக்தி கீழாநெல்லி மூலிகைக்கு உண்டு. நோய்கள் இன்றி வாழ கீழாநெல்லி ஒன்றே போதும்.

--

--