அறிவோம் அறிவியலை — சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து சாப்பிடுவது.

Sankar sundaralingam
3 min readApr 8, 2023

--

நீங்க தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து எத்தனை நாட்கள் ஆச்சு ?

உங்களால் தற்போது தரையில் சம்மணம் போட்டு அமர முடியுமா?

அப்படினா எவ்வளவு நேரம் அமர முடியும் ?

என்னடா அறிவோம் அறிவியலைன்னு சொல்லிட்டு கேள்வி கேட்கிறேன் என்று நினைக்கிறீர்கள் அல்லவா ?

நீங்கமட்டுமல்ல நம்மில் பலரும் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்தால் கௌரவ குறைச்சல் என்று நினைக்கிறோம். கல்யாணம், திருவிழா, கோயில் பண்டிகை, கருமாதி என நமது அனைத்து நிகழ்வுகளிலும் நாம் தரையில் அமர்ந்து பங்கெடுத்த காலங்கள் போகி தற்போது அனைத்து நிகழ்வுகளிலும் நெகிழி நாற்காலிகளில் அமர்ந்து பங்கெடுக்கிறோம். நெகிழி நாற்காலி நம் உடலில் வெப்பத்தைத்தான் உருவாக்குகிறது. அந்த காலத்தில் நம்மால் நாற்காலிகள் செய்ய முடியாமல் இல்லை, தரையில் அமர்வதற்க்கு பல மருத்துவ காரணங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதற்கு.

நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றுள்ள பழக்க வழக்கங்கள் எல்லாமே அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த நன்மைகளை நமக்கு தருகிறது . அவை அனைத்தையுமே நம்மில் சிலர் மூடப்பழக்க வழக்கம் என்று கேலி செய்கிறோம் அல்லது பழமை என்று வாதம் செய்கிறோம். ஆனால் நம் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது நமக்கு நன்மை மட்டுமே தரக்கூடியவை. அதில் முக்கியமான ஒன்று தான் ‘சம்மணங்கால்’.உணவு அருந்தும் முறை.

தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது நம் வழக்கம் இப்போது அது ஆடம்பரம் என்ற மாயையில் வேகமாக மறைந்து வருகிறது. இன்றைய குழந்தைகள் பாதி பேருக்கு சம்மணம் போட்டு அமர்வது என்று கேட்டால் தெரியாதல்லவா?

சம்மணம் போட்டு அமர்வது / உட்காருவது பல மருத்துவ பலன்களை நமக்கு தருகிறது

கால்களை மடக்கி நாம் கீழே உட்காருவது ஒருவித யோக நிலை. அதற்கு பெயர் சுக ஆசனம் அல்லது பாதி பத்மாசனம்.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது :

தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நாற்காலியில் அமர்வதை விட, தரையில் அமரும்போது, வேகஸ் எனும் நரம்பு (மூளைக்கு தகவல் அனுப்பும் நரம்பு) சுறுசுறுப்பாக செயல்படுகிறது மற்றும் மூளைக்கும் வயிற்றுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது. இதனால் தேவையான அளவு உணவு உட்கொண்ட பிறகு போதும் என்ற அறிகுறி மூளையில் இருந்து கிடைக்கிறது. இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்வது தவிர்க்கப்படும்.

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் உடல் அசைவுகள் நடைபெறுகிறது இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராக நிகழும். மேலும் கீழே அமர்ந்து எழுவது உடற்பயிற்சி செய்வது போல. இதை தொடர்ச்சியாக செய்து வருவதால் உடல் எடையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை காண முடியும். குனிந்து, நிமிர்ந்து சாப்பிடும் போது வயிற்று தசைகள் சுருங்கி விரியும். மனதளவில் ஒரு வகையான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

தோரணையை மேம்படுத்தும்:

ஆரோக்கியமான வாழ்விற்கு தோரணை மிகவும் முக்கியமானதாகும். வழக்கமாக தரையில் அமரும்போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்வது ‘சுகாசனம்’ எனப்படும் யோகப் பயிற்சியாகும். இதன் மூலம் முதுகும் முதுகெலும்பும் நேராக இருக்க உதவும். தரையில் அமரும்போது நமது முதுகுத்தண்டு நேராக இருந்து கம்பீரமான தோரணையை ஏற்படுத்துகிறது. இதனால் தோள் பட்டையில் உள்ள வலிகள் குறைந்து, தசைகள் வலுவடைவதற்கு உந்து சக்தியாகவும், நரம்பு மண்டலத்தை சீரமைக்கவும் உதவுகிறது. எலும்பை பலப்படுத்தவும் இந்த உட்காரும் முறை உதவியாக இருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தை பெருக்குகிறது:

நாற்காலிகயில் கால்களை தொங்கவிட்டு கொண்டு உட்காரும் போது அதிகப்படியான ரத்த ஓட்டம் கால்களுக்கு செல்கிறது. ஆனால் சம்மணங்கால் போட்டு உட்காருவதால் ஏற்படும் அழுத்தம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீரான நிலையில் வைக்கிறது. தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது முதுகுத் தசைகள், இடுப்பு, மற்றும் கோர் தசைகள் எல்லாம் நீட்சியடைகின்றன.

சம்மணமிட்டு அமரும்போது முதுகுத்தண்டுவடத்தின் கீழ் பகுதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி சீரான சுவாசம், தசைகளின் விரிவாக்கத்தை குறைத்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. தரையில் தட்டு இருப்பதால் இயல்பாகவே குனிந்து தான் சாப்பிடமுடியும்.

தொடர்ச்சியாக முட்டிகளை மடக்கி அமர்வதனால் மூட்டுகளுக்கும், இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கிறது. முதுகு வலி, மூட்டு வலி போன்றவற்றை குறைக்கிறது.

மேல்வாதம் மற்றும் கீழ்வாதம் முதலியவற்றை தடுக்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதனால் இது மூட்டுகளை எளிதாக இயங்கச் செய்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியே.

செரிமானத்தை சீராக்கும்:

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உணவு எடுப்பதற்கு நாம் முன்னால் செல்லுவோம். உணவு எடுத்த பிறகு பின்னால் வருவோம். இந்த செயல்பாட்டால் வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு எளிமையான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.

தரையில் சம்மணமிட்டு அமரும்போது முதுகுத் தண்டுவடம் நேராகிறது, கழுத்து நரம்புகள் சரியான நிலைக்கு செல்லுகிறது. இந்த நிலை நம் செரிமான உணர்வை தூண்டும் என்கிறார்கள் நம் முன்னோர்கள்.இதேபோல் செரிமான உறுப்புகளும் சுருங்கி விரியும். இது சாப்பிடும் உணவை எளிதாக செரிக்கவைக்க உதவும்.

மன அமைதியை உண்டாக்குகிறது :

கிராமப்புறங்களில் ஒரு பேச்சுவழக்கு இருக்கும். என்னதான் கயித்துக்கட்டிலில் அமர்ந்தாலும் தரையில் உட்காரும்போதுதான் சொர்க்கமாக இருக்கிறது எனக் கூறப்படுவதுண்டு. அந்த வகையில் தரையில் சாவகாசமாக உட்காருவதால் மனம் தளர்வான மனநிலையில் அமைதியாக இருக்கும். மனதில் உள்ள அழுத்தம் குறையும் எனக் கூறப்படுகிறது.

அமைதியான மனநிலையும், செய்யும் காரியத்தில் கவனத்தைச் செலுத்தவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உணவின் சுவை, நறுமணம் முதலிய அனைத்தையும் கவனிக்க உதவுகிறது. இதனால் மறைமுகமாக நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

ஆயுளை அதிகரிக்க உதவுகிறது :

தரையில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிக மாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், நமது ஆயுள் அதிகரிப்பதற்கும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு எளிய பயிற்சியாகும்.

தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியே. சம்மணம் போட்டு அமரும்பொழுது, சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது

--

--

No responses yet