அறிவோம் அறிவியலை — வெட்டிவேர்

Sankar sundaralingam
3 min readJun 3, 2023

வெட்டிவேர் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். வெட்டிவேரை பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. வெட்டிவேர் மருந்தாகவும் , நறுமண எண்ணெய்கள் செய்யவும் பயன்படுகிறது. முற்காலத்தில் வாசனைக்காகக் கூந்தலில் வெட்டிவேரைச் சூடிக்கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு இருந்திருக்கிறது. வெப்ப நோய்களைக் குணமாக்க, நெடுங்காலமாகப் பயன்பட்டு வரும் மூலிகை வெட்டிவேர். நீர் மேலாண்மை, அழகியல், மருத்துவம் என அன்றாட வாழ்க்கையோடு கலந்து, நமது இல்லங்களில் மணம் பரப்பும் மூலிகை, வெட்டிவேர்.

“‘வெட்டிவேரு வாசம்… வெடலப்புள்ள நேசம்…” என்ற பாடல் அந்த வேரின் வாசனை பற்றி நமக்கு விளக்குகிறது. வெட்டிவேரின் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளன. வேர் குளிர்ச்சி தரக்கூடியது. இதன் வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என கூறப்படுகிறது.வெட்டி வேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். விழல்வேர், விரணம், இருவேலி, குருவேர் போன்ற வேறு பெயர்களை உடையது வெட்டிவேர். வேர்கள் மண்ணுக்குள் எட்டு அடி ஆழம் வரை செல்லக் கூடியது. ஆற்றங்கரைகளின் இருபுறங்களிலும் வேலியாக அமைந்து மண் அரிப்பைத் தடுப்பதற்காகப் பயன்பட்டதால் ‘இருவேலி’ எனும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

வெட்டிவேர் எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. ஒரு ஆய்வில், வெட்டிவர் அத்தியாவசிய எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

வெட்டிவேரின் மருத்துவ பயன்கள்:

உடல் வெப்பத்தை குறைகிறது:கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும், சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். வெட்டிவேரை 100 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு ஒரு மண்ணினால் செய்யப்பட்ட சட்டியில் போட்டு, நான்கு கப் நீர் ஊற்றி நன்றாக காய்ச்சி அதனுடன் திருநீற்றுப்பச்சை விதையைப் போட்டு, வெயில் நேரத்தில் குடித்து வந்தால் வெயில் சூட்டினால் ஏற்படும் உடம்பு எரிச்சல், கழுத்து வலி, சூட்டுக் கொப்புளங்கள், சிறுநீர் கடுப்பு ஆகியவை நீங்கிவிடும்.

கால் வலிக்கு: கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அப்படியே இரண்டு நாட்களுக்கு ஊறவைக்கவேண்டும். இரண்டு நாட்கள் கழித்து அந்த எண்ணெயை வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம். கால் எரிச்சல்,கால் வலி குணமாகும்.

செல் பிரிவில் உதவுகிறது : வெட்டி வேரில் 300 க்கும் மேற்பட்ட என்சைம்களின் செயல்பாட்டிற்கு காரணமான துத்தநாகச் சத்து காணப்படுகிறது. துத்தநாகம் நம் இயற்கை பாதுகாப்பு அமைப்பை ஆதரிக்கிறது. செல் பிரிவு, செல் வளர்ச்சி மற்றும் காயத்தை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.

நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கிறது: வெட்டிவேர் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தது. இது நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது: இரும்பு, மாங்கனீசு மற்றும் பி 6 வைட்டமின்கள் போன்ற பிற தாதுக்கள் வெட்டி வேர்களில் நிரம்பியுள்ளன.இந்த தாதுக்கள் அனைத்தும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதிலும், உடலில் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் தாங்கள் குடிக்கும் தண்ணீரில், குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் வெட்டிவேர் ஒரு சிறிய அளவு போட்டு வைத்து ந்த தண்ணீரை குடித்து வருவது நல்லது.

மனம் லேசாகும் : வெட்டி வேரில் இருந்து ஒரு லேசான வாசத்தை சுவாசித்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய மனது எப்போதும் லேசாக இருக்கும். மன விழிப்புணர்வை அதிகரிக்கிறது. நீங்கள் விழிப்புடன் இருக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், வெட்டிவேர் எண்ணெயைப் பயன்படுத்துவது விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் மனச் சோர்வு குறைப்பதற்கும் உதவும். வெட்டி வேரில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெயானது மன அமைதிக்கும், மன நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இவைத்தவிர வெட்டிவேரை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் விசிறியை கொண்டு வீசினால் அதில் வரும் காற்றில் மூலம் உடல் எரிச்சல், தொண்டை வறட்சி போன்றவை நீங்கும்.

முகம் அழகுபெறும்: வெட்டிவேர் எண்ணெய் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் தழும்புகள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுதலாம். இவ்வாறு வெட்டி வேர் பவுடரை தொடர்ந்து தேய்த்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுபெறும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது.

பதட்டத்தை குறைக்கும் : வெடிவேர் எண்ணெய் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

சோர்வு நீங்க: காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை தண்ணீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் செரிமான ஆற்றல் அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

வெட்டிவேர் உணவாகவும் பயன்படுகிறது: பனைவெல்லம் மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் வெட்டிவேர் பானத்தை, மண்பானையில் வைத்துப் பருக குளிர்ச்சியை உணர வைக்கும். வெட்டிவேரை நீரில் நன்றாக ஊறவைத்துத் தயாரிக்கப்படும் சர்பத், சுவையிலும் மருத்துவக் குணத்திலும் சளைத்ததல்ல. செரிமானத்தை எளிமையாக்க, வெட்டிவேர் மற்றும் சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்தலாம். இதன் வேரைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயத்தை உடலுக்குப் பலம் கொடுக்கும் டானிக்காக உபயோகிக்கலாம்.

- சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.

- தீக்காயங்களுக்கு வெட்டிவேரை அரைத்து பூசினால் காயங்கள் விரைவில் குணமாகும், தழும்பும் விரைவில் மறைந்துவிடும்.

-வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும்.

-வெட்டிவேர் எண்ணெய் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்களைக் குறைக்கும் தன்மை இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

இப்போது நன்கு உணர்வீர்கள் வெட்டிவேர் வெட்டியான வேர் அல்ல என்று, வெட்டிவேர் ஒரு வெற்றிவேர், புல்லில் புதைந்து கிடக்கும் புதையல்.

--

--