அறிவோம் அறிவியலை — வெந்தயம்
பொதுவாக வெந்தயத்தை நோய்க்கு வேம்பாகும் என்பார்கள். வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது. வெந்தயம் பெரும்பாலும் இந்தியர்களின் வீட்டு சமையலறையில் காணப்படும் ஒரு பொருள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. இதன் செடி கீரையாகவும், விதைகள் சுவையூட்டியாகவும் இருக்கிறது.
வெந்தயத்தின் வித்தியாசமான மணமும், குணமும், உணவை சுவையாக மாற்றுகிறது. வெந்தயம் சுவைக்கு மட்டுமல்ல , ஆரோக்கியத்திற்கும் கூட என்பதை பற்றி இங்கு விளக்கமாக பார்ப்போம்.
மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம். வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. வெந்தயத்தை விதையாகவும் , ஊற வைத்தும் அல்லது கீரையாகவும் சாப்பிடலாம்.
வெந்தயத்தின் மருத்துவ பயன்கள் :
நீரிழிவு நோய்யை கட்டுப்படுத்தும்:
நீரிழிவு நோயாளிகள் ஊறவைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்று, வாயு தொல்லையை தடுக்கும்:
ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்றுக்கு மிகுந்த நிவாரணம் அளிக்கிறது.உடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும் குணம் வெந்தயத்திற்கு உண்டு, வயிற்று உஷ்ணத்தை போக்க வெந்தயம் சிறந்த மருந்து. கொஞ்சம் வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
எலும்புகள் வலிமையாகும்:
வெந்தயம் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நிறைய கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் தேவையற்ற மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
கொழுப்பை கரைக்க உதவுகிறது.
வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் கெட்ட கொழுப்பை கணிசமாகக் குறைக்கிறது. இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்து, கெட்ட கொழுப்பு குறையும்.
முடி உதிர்வதை தடுக்கும்:
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தரைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை மணிநேரம் வைக்க வேண்டும். பின் குளிக்க வேண்டும். இதனால் பொடுகு குறையும். முடி உதிர்வது நிற்கும். தலைமுடி அடர்ந்து வளரும்.
வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது
தோல் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கிறது:
தோல்களில் கிருமி தொற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் சில பூச்சி கடிகளால் கொப்பளங்கள் புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு வெந்தயத்தை உலர்வாக அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, அரிப்புகள் புண்கள் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர நோய் குணமாகும்.
சிறுநீரகம்
ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்வது சிறுநீரகங்கள். வெந்தயம் ஊற வைத்த நீரையோ அல்லது வெந்தயத்தை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். மூத்திரக்கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.
பருக்களை தடுக்கும், சருமத்தை மெருகூட்டும்:
வெந்தயம் முகப் பொலிவை மெருகேற்றுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை வெந்தயம் கலந்த முகப்பூச்சுகள் நீக்குகின்றன. வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவ முகம் பளபளக்கும்.
தாய்ப்பால் சுரப்பு
புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு அந்த பெண்கள் வெந்தயத்தை தினமும் இருவேளை உணவுகளில் உட்கொண்டு வர தாய்ப்பால் நன்கு சுரக்கும். அந்த தாய்ப்பாலை அருந்தும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்.
உடல் எடை குறைக்க உதவும் :
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு வெந்தயம் நன்மை பயக்கிறது.வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. பெனுக்ரீக் பசியை அடக்கி, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது. சிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் அரிந்திட்டு சாப்பிட்டு வர பருமனான உடல் எடை குறையும்.
புற்று நோய் தடுப்பு:
வெந்தயத்தில் உள்ள பல இயற்கை வேதி பொருட்கள் புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது .
- வெந்தயத்தை ஊற வைத்து. மையாக அரைத்து தீக்காயத்தின் மீது பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- வெந்தயம் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போக்குகிறது.
- ஒரு துண்டு இஞ்சியுடன் கொஞ்சம் வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
- இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது.
- வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது.
வெந்தய விதைகள், வெந்தைய கீரை நிறைய மருத்துவ குணங்களை பெற்ற இயற்கையான மூலிகை ஆகும், தினமும் இதை பயன்படுத்துங்கள்.