அறிவோம் அறிவியலை — வெற்றிலை

Sankar sundaralingam
4 min readDec 3, 2022

--

வெற்றிலை பெட்டி மாத்திரை பெட்டியாக மாறக் காரணம் வேறு எவரும் கிடையாது, நாம் மட்டும் தான்.

எப்படி என்று பார்க்கிறீர்களா?

உண்மையான அறிவியலை அறியாமல், பொய் பிரச்சாரத்தை நம்பி நமது முன்னோர்கள் நமக்கு பழகி கொடுத்த பழக்கத்தை கைவிட்டோம். வெற்றிலை என்றால் வெற்று + இலை , இது சமைக்க உதவாததால் இதன் பெயர் என்று முதல் பொய்ப்பிரச்சாரம். வெற்றிலை பாக்கு நல்ல பழக்கம் அல்ல, வெற்றிலை உண்டால் படிப்பு வராது. இன்னும் நிறைய இது போன்று . உண்மையில் வெற்றிலை மேல் எந்த தீமையும் கிடையாது. அதில் சேர்க்கும் செயற்கை திரவியங்கள் மற்றும் புகையிலை தான் சில நோய்களுக்கு காரணம்.

வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகவும் அது பின்னாளில் இந்தியா வந்ததாகவும் பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால் நீங்கள் நமது இதிகாசங்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகளை பார்த்தால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் இருந்துள்ளதை அறிவீர்கள்.

வெற்றிலையை தாம்பூலம், பாக்கிலை, நாகவல்லி, மெல்லிரை, மெல்லிலை, வெள்ளிலை, வெத்தலை, திரையால், வேந்தன் என பல பெயர்கள் இருக்கின்றன.

- மகாபாரதத்தில் “தருமன் முதல் தாம்பூலம் யாருக்கு என்று, பீஷ்மரிடம் கேட்டான் என்பதை நினைவு கொள்ளுங்கள். தாம்பூலம் போடுவது பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உண்டு. “காதலை மேம்படுத்தும் பொருளாக”த் தாம்பூலத்தைக் குறிப்பிடுகின்றன.

- கிமு 600ல் காசியில் எழுந்த சகிருத சம்கிதை என்னும் ஆயுர்வேத நூலில் வெற்றிலை மூலிகை பற்றிய குறிப்புகள் உள்ளன.

- கிமு 4 ஆம் நூற்றாண்டில் சமண இலக்கியங்களில் தாம்பூலத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

- கிமு 300முதல் கிபி 200 வரை தோன்றிய நூல்களான எட்டுத்தொகை, கலித்தொகை,பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை தாம்பூலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் தேவாரம், திவ்யப்ரபந்தம், கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களிலும் வெற்றிலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 15 & 16 ஆம் நூற்றாண்டுகளில் வெற்றிலை பயிர் செய்து விற்பதற்க்கு வரி விதிக்கப்பட்டது.

உலகிலேயே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் அதிகம் இந்தியாவில் தான் இருந்தது , இன்னும் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து சீனா, பர்மா, வியட்நாம் நாடுகள் வாயிலாக மேற்கத்திய நாடுகளுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இந்தியாவிற்கு தான் முதலிடம் பங்கு .

காவிரி கரையோரங்களில் வெற்றிலை உற்பத்தி அதிகம்.

“ கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” — என்ற மகாகவி பாரதி பாடல் வரிகள் காவிரி கரை வெற்றிலை பயிரிடுவது பற்றி கூறுகிறது.

வெற்றிலை நமது கலாச்சாரத்தில் ஒரு தனி இடம் பிடித்துள்ளது. வெற்றிலை இந்திய கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறது. கோயில் பூஜைகள் , மத நிகழ்வுகள், திருமணம் மற்றும் விருந்து ஆகியவற்றில் வெற்றிலை கட்டாயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட வெற்றிலைக்கு மருத்துவ குணமும் உண்டு , அது ஒரு வகையான மூலிகை, வெற்றிலை மிளகு இலையிலிருந்து பரிணாமத்தவை என்பது நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதோ இங்கே அறிந்து கொள்வோம்.

வெற்றிலையில் ஆண் வெற்றிலை , பெண் வெற்றிலை என்று வெற்றிலையின் பின் புற நரம்புகளின் அமைப்பை வைத்து பிரிப்பார்கள். இரண்டுக்கும் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. வெற்றிலையின் காம்பின் பகுதியிலிருந்து சீரான நடு நரம்பும், அந்த நடு நரம்பிலிருந்து பிரியும் கிளை நரம்புகள் தொடங்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெற்றிலையின் வால் பக்கம் சேரும் இடம் வரையில் சீராக, அமைந்து முடியுமிடத்தில் இரண்டு நரம்புகளும் ஒரு புள்ளியில் சந்தித்தால் அது பெண் வெற்றிலை.

அப்படி இல்லாமல் தொடக்கத்திலிருந்து நரம்புகள் சீராக இல்லாமல் வெற்றிலையின் வால் பக்கத்தில் அந்த நரம்புகள் மேலும் கீழுமாய் சந்தித்தால் அவை ஆண் வெற்றிலை என்றும் கூறுவர் .

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை. இதில் 84.4% நீர்ச்சத்து, 3.1 % புரத சத்து , 0.8% கொழுப்பு சத்து, கால்சியம், புரோட்டின், நார்ச்சத்து, மாவுச்சத்து, தயாமின், பச்சையம், நிகோடினிக் அமிலம், இரும்புச்சத்து,வைட்டமின் சி , நோய் எதிர்ப்பு திறன் கொண்ட சவிக்கால் என்னும் பினைல்புரோபின் (Phenylpropene) பொருள் உள்ளது. இது,உடலுக்கு உஷ்ணம் தரக்கூடியது.

வெற்றிலையில் (Vetrilai) மூன்று வகைகள் உண்டு :

வெற்றிலையில சாதாரண வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலைனு 3 வகைகள் இருக்கின்றன. கற்பூர வெற்றிலை கற்பூர மணத்தோடும், சிறுகாரத்தோடும் இருக்கும். கம்மாறு வெற்றிலை கருமையா நல்ல காரத்தோடு இருக்கும்.

மருத்துவ குணங்கள் :

- வாய் துர்நாற்றம்: தினமும் ஒரு வெற்றிலையை மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

-மலச்சிக்கல்: 30 மி.லி. அளவு வெற்றிலைச் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் (அ) வெற்றிலையை இடித்து இரவு நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

-வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு: 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு பிரச்சனைகள் நீங்க, வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து கீழ்வாயில் வைக்கலாம்.

-செரியாமை: 2–3 வெற்றிலையுடன் 4–5 மிளகுகள் சேர்த்து இடித்து தண்ணீரில் கலந்து கொடுக்க சிறுவர்களுக்கு செரியாமை பிரச்சனை தீரும்.

-இருமல், மூச்சு முட்டல், கடின சுவாசம்: வெற்றிலையை நல்லெண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின் மீது போட்டால் குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்) உண்டாகும் இருமல், மூச்சு முட்டல், கடின சுவாசம் ஆகியவை தீரும்.

-குழந்தை பெற்ற பெண்களுக்கு: குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கவும், பால் கட்டியினால் உண்டாகும் மார்பக வீக்கத்தைக் கரைக்கவும் வெற்றிலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டலாம்.

-வெற்றிலை உடலுக்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் அழகு சேர்க்கும் .(முடி உதிர்வு , முகப்பருவு , உடல் துர்நாற்றத்தை தடுக்கிறது ).

- வெற்றிலை உமிழ்நீரைப் பெருக்குகிறது ; இது பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது இயற்கை தந்த அற்புதம். ஆகவே அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மைக்குறைபாடு நீங்கும்.

- வெற்றிலைச் சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் கோளாறு விலகும்.

-கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். இதன் இலைச் சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.

- வெற்றிலைச் சாறு, தேன், கோரோசனை கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. இதன் மூலம் கபம், சளி குணமாகும்.

-இலையில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இதை இரவில் கட்டுவது நல்லது.

- வெற்றிலையை சாறுபிழிந்து கண்ணில் விட்டால் கண் வலியும், காதில் விட்டால் காது வலியும் நீங்கும்.

-வெற்றிலையுடன் பாக்கு அல்லது மிளகு கூட்டி சுவைப்பதனால் சீரணம் உண்டாகும். மனதிற்க்கு உற்சாகம் அளிக்கும்.

- வெற்றிலை, சுக்கு, மிளகு மூன்றையும் மென்று விழுங்கி வெந்நீர் குடித்தால் வாயு நீங்கும்.

- வெற்றிலையை சூடு பண்ணி சாறு பிழிந்து தலையில் பூசினால் தலைவலி நீங்கும்.

-கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும். இதை கொரானா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க பயன்படுத்தினோம்.

-வெற்றிலை சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.

- வெற்றிலை காம்பில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது .

- விஷம் நீக்கும் வெற்றிலை .

சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை; தினமும் கண்டிப்பா போட்டுக்கோங்க.

Sources:

1. வரலாற்றில் வெற்றிலை — மா.சந்திரமூர்த்தி

2.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=1584&id1=112&issue=20170101

--

--

No responses yet