ஏணிப்படிகள்-1
ஏணிப்படிகள் என்ற தலைப்பில் தொடர் எழுதலாம் என முடிவெடுத்து சிறு இடைவெளிக்குப்பிறகு தொடங்கும்போது எனது முந்தைய “ஏணிப்படிகள்” கவிதை ஞாபகத்துக்கு வந்தது. ஆதலால் அதை இங்கு பதிவிடுகிறேன்.
ஏணிப்படிகள்
ஏற்றபடி மட்டுமல்ல,
இறக்கத்தின் படியும்
ஏற்றங்கள் வாழ்வாதாரம், அறிவு, பொன்
மற்றும் பல
இறக்கங்கள் ஆணவம், பொறாமை, போட்டி, கர்வம்…
ஏணிப்படிகள் என்றாலே நாம் ஏறுவதைப் பற்றி தான் அதிகம் பேசுவோம். வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசுகையில் ஏணி போல் யார் நம்மை தூக்கி விடுவார்கள் அல்லது யார் ஏணியாய் உதவுவார்கள்? ஏணிப்படிகள் ஏற்றம் மட்டுமல்ல, இறக்கத்திற்கும் பயன்படுகிறது. வாழ்க்கையிலும் சரி இறக்கங்கள் வேண்டும், இறக்கங்கள் என்று குறிப்பிடுவது ஆணவம், பொறாமை, கர்வம். ஒருபுறம் வாழ்வாதாரம், படிப்பு, அறிவு, செல்வங்கள் ஏறுமுகத்திலும் மறுபுறம் ஆணவம், பொறாமை, போட்டிகள் இறங்குமுகத்தில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
பெரும்பாலும் நாம் அனைவரும் ஏறுமுகத்திற்கு கடுமையான உழைப்பு, முயற்சி, திறமைகளை பயன்படுத்துவோம். இறங்குமுகத்திற்கு பொருட்படுத்துவதே கிடையாது. அது தானாகவே அமையும் அல்லது சுலபமாக கிட்டும் என நம்புவது தான். மலை ஏறுவதை விட இறங்குவது தான் கடினம். இறங்கும்போது கால்கள் தடம்புரண்டால் பாதாளம் தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
தொடரி வண்டி பயணிக்க கூட ஏணிப்படிகள் உதவுகின்றன. எப்படி என நினைக்கிறீர்களா?
சாய்க்க சுவர் இல்லை,
படுத்தவாறே ஏரி செல்கின்றது தொடரி….
பாபா படத்தில் சக்தி கொடு பாடலில் வைரமுத்துவின் வரிகளில் “வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்” என்ற வரிகள் ஏணியாய் நாம் பலரை உயர்த்தலாம் ஆனால் ஏமாறக்கூடாது. எனக்கு இந்த வரிகளில் உடன்பாடில்லை ஏனென்றால் ஏணி யார் ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. ஏறி உதைத்தாலும் வேறொருவர் அதை நிறுத்தி பயன்படுத்துவார். நாம் பார்க்க வேண்டியது சுமையா யாரும் படிக்கட்டில் நின்று விடக்கூடாது மற்றவர்கள் ஏறி இறங்க வழிவிட வேண்டும்.
ஏணிப்படிகள் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து எனது காரணம் பலமுறை பலரிடம் அறியப்பட்ட தகவல் மற்றும் உண்மை சம்பவங்கள் உதவியை நாடி வருபவர்கள் உதவி கிடைத்து வளர்ந்தபின் கண்டுகொள்வதில்லை ஏணியை ஏறி உதாசீனப் படுத்துவது போல் அல்லது தேவைக்கேற்றார்போல் பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தைகள் என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு எடுத்துச் சென்றது.
உதவி செய்பவர்கள் செய்தபின் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்து செய்யின் அது வர்த்தகமாகும். வர்த்தகம் செய்கையில் லாபமும் வரும், நட்டமும் வரும் எது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை. உதவி பெற்றவர்கள் உங்களை பார்க்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என்று கவலைப்படாதீர். கண்டிப்பாக நீங்கள் செய்த உதவி அவர்களின் இதயங்களில் என்றும் நீங்கா இடத்தில் இருக்கும். காலம் வருகையில் அதை உணர்வார்கள். நீங்களே ஏணியாய் இருந்து ஏற்றி விடுவது உங்களுக்கு பெருமைதானே? சமயம் கிடைக்கும் போது சிலரது ஆணவம், கர்வம், பொறாமையை இறக்கவும் உதவுங்கள்.
உதவி பெற்றவர்கள், பெற்ற உதவியை உயிர் உள்ளவரை மறவாதீர்கள். செய்தவர்களுக்கு மனதார நன்றி தெரிவியுங்கள்.
ஏணிப்படிகளை கை மற்றும் கால்கள் பிடித்து ஏறுகிறோம் பிடித்து இறங்குகிறோம். வணங்குவதற்கும் புனிதயாத்திரை செல்வதற்கும் இணையானது.
“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞானத்தின் மாணப் பெரிது
திருக்குறள்
விளக்கம்:
உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல,
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல,
உதவி என்பது யாருக்கு செய்கிறோம் என்பது அல்ல
உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதை பொறுத்தது
மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப்படும் உதவி இந்த உலகத்தை விட பெரியது.
ஏற்றிவிட்ட ஏணியை பாதுகாப்போம். உங்களுக்கு மீண்டும் மேலே செல்ல உதவும். உங்கள் கர்வங்களை இறக்கவும் உதவும்.
இந்த தொடரில் நாம் கீழ்கண்ட பாகங்ககளை விரிவாக பார்க்க உள்ளோம்.
1.ஏற்றம்
2.இரக்கம்
3.ஏணியாய் உதவுபவர்கள்
4.தக்க சமயத்தில் உதவுவது
“தோல்வியை ஆணியாய் நினைத்தால் உறுத்தும்,
ஏணியாய் நினைத்தால் உயர்த்தும்”
தோல்விகளைக் கண்டு கலங்காதீர்கள், வருந்தாதீர்கள். தோல்விகளின் பாடம் மூலம் எப்படி உயரலாம் என சிந்தியுங்கள் மீண்டும் சந்திப்போம் பாகம் 2 ல்.
சங்கர் சுந்தரலிங்கம்