ஏணிப்படிகள் — 3
இறக்கம்
வாழ்க்கை ஏற்ற , இறக்கங்கள் நிறைந்தது. என்றும் ஏற்றம் மட்டுமே இருக்காது, இறக்கமும் இருக்கும். இறக்கம் என்பது வீழ்ச்சி கிடையாது.
பரமபதம் மாதிரி ஏற்றம், இறக்கம் இரண்டுமே இருப்பது வாழ்க்கை.
புத்தர் ஒருநாள் அவர்களின் சீடர்களிடம் கூறினார். தான் தியானம் செய்வதால் வாழ்க்கையில் உயரவில்லை, ஆனால் சிலவற்றை இழந்து இருக்கிறேன். அப்படி இழந்தவைகள் கோபம், பதட்டம், மரணபயம், பொறாமை என பல. நாம் இறக்கங்களாக இதைத்தான் பார்க்கிறோம்.
கோபம், பொறாமை, பகை, பேராசை இவைகளில் இருந்து ஒரு படி இறங்கினாள் இரட்டிப்பாக வாழ்க்கையில் முன்னேறலாம் என்பது எனது கருத்து. அதை எப்படி செயல்படுத்தலாம் என்பதை தான் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.
“ஏற்றங்கள் முயற்சி எடுத்துக் செல்லவேண்டும்
இறக்கங்கள் பயிற்சி எடுத்துச் செல்லவேண்டும்”
இறக்கங்களாக இருக்க வேண்டியவை மனிதனின் ஆறு எதிரிகளாக கருதப்படும்
· கோபம்
· பொறாமை
· அகங்காரம்/ ஆணவம்
· பேராசை
· போட்டி
· மோகம்
கோபம்: மற்றவர்களின் மீது காரணமில்லாமல் எரிந்து விழுவது, எதற்கெடுத்தாலும் கோபமாக பேசுவது, அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவது. இது தேவை இல்லாமல் உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான முடிவுகளை எடுக்க வைக்கும். கோபத்தினால் உங்கள் மனதை கட்டுப்படுத்த இயலாமல் போய்விடும்.
பொறாமை: “உலகத்திலே பெரிய ஆமை பொறாமை” என்பார்கள். தன்னைவிட யாரும் உயர்ந்து , வளர்ந்து விடக்கூடாது என்ற தீய எண்ணம். தன் மேலுள்ள கவனத்தை விட அடுத்தவர்களின் நோட்டம் பார்ப்பதே வேலையாகி விடுகிறது. இதனால் தங்களின் நேரம் வீணாகிறது என்பதை அவர்களால் உணர இயலாது.
அகங்காரம் / ஆணவம்: மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் என எண்ணுதல். அடுத்தவர்களை மதிப்பதே கிடையாது. பணம், செல்வாக்கினால் மனிதர்களை எடைபோடுவது இதனால் நல்ல குணம் கொண்ட மனிதர்களை இழக்க நேரிடுகிறது.
பேராசை: இருப்பதை கண்டு திருப்தி அடையாமல் மேலும் மேலும் ஆசை கொள்வது. இவர்களுக்கு எதிர் கிடைத்தாலும் திருப்தி அடையாது இவர்கள் எப்போதும் சந்தோஷம் அடைய மாட்டார்கள்.
போட்டி: அடுத்தவர்களிடம் எப்பொழுதும் போட்டியுடன் பார்க்கும் குணம், இது சரியான வழி கிடையாது. நல்ல பாதைக்கு எடுத்துச் செல்லாது. தான் வெற்றியடைவதற்கு எதையும் செய்வார்கள்.
மோகம்: அளவற்ற பற்றுக் கொண்டு அதை எப்படியாவது அடையவேண்டும் என எண்ணி சில தவறான வழிகளில் செல்லுதல்.
இந்த குணங்கள் அனைத்தும் தனி மனிதனுக்கும், மனித சமுதாயத்திற்கும் எதிரானவை இவைகளை பயிற்சியின் மூலம் குறைக்க வேண்டும்.
இந்த குணங்களுக்கு பெரும்பாலும் மூலக்கூறின் வெளிப்பாடே (டி.என்.ஏ) காரணம் என்பார்கள், அது முற்றிலும் தவறு. மூலக்கூறுகளின் செயல்பாடு சூழ்நிலை பொறுத்துதான் அமையும். சூழ்நிலைகள் சரியாக இருந்தால் மூலக்கூறுகளும் சரியான முறையில் செயல்படும்.
இந்த குணங்களை குறைக்க ….
தூய்மை
· சுற்றுச்சூழல் தூய்மை
· உடல் தூய்மை
· மனத் தூய்மை
· செயல் தூய்மை
· வாக்குத் தூய்மை
இந்த தர்ம கோட்பாடுகளை பயன்படுத்தி பாருங்கள். நல்ல மாற்றத்தை நம்முள் உணர முடியும்.
கோபம், பகைகளை களையுங்கள். பகை என உணரும் போது அது உங்கள் வளர்ச்சியை தடுக்கும். கோபம் வரும் போது பொறுமையை கடைபிடியுங்கள். எதையும் சற்று யோசித்து பேசுங்கள் கோபத்தில் இருக்கும்போது இயற்கையை ரசியுங்கள். கோபம் தானாகவே குறையும். இனிமையானவை பற்றி பேசுங்கள் பகை உணர்வு வராது.
“ஆரோக்கியமே ஆனந்தம்”- ஆரோக்கிய வாழ்விற்கு கோபம், பொறாமை, அகங்காரம், பேராசை, மோகம், போன்ற குணங்கள் தேவையற்றது. இந்த குணங்களை கட்டுப்படுத்தி உங்கள் நற்பண்புகளை வளர்க்க முயற்சியுங்கள்.
“அழிவைத் தருவது ஆணவம்
ஆபத்தை தருவது கோபம்
இருக்கக்கூடாது பொறாமை
செய்யக்கூடாதது துரோகம்
நம்பக் கூடாதது வதந்தி
மிகக் கொடிய நோய் பேராசை “
நம் பெரியோர்கள் நமக்குச் சொன்ன தத்துவங்கள், இதை எப்போதும் நினைவில் கொள்.
இருக்க வேண்டியது பணிவு
உயர்வுக்கு வழி உழைப்பு
தழுவி விடக்கூடாது வாய்ப்பு
மிகப்பெரிய தேவை அன்பு
இறக்க வேண்டியவைகளை இறக்கி, ஏற்ற வேண்டியவைகளை ஏற்றி முன்னேற்றமடைய வாழ்த்துக்கள்.