ஒளியும் ஒலியும் - பாகம் 2
ஒளியும் ஒலியும் - பாகம் 1ற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து புது உத்வேகத்துடன் பாகம் 2ஐ வெளியிட ஆவலோடு எழுத ஆரம்பித்தேன். எனது உள்மனது என்னை தோழா படத்தில் இடம்பெறும் நிகழ்விற்கு எடுத்து சென்றது.
தோழா படத்தில் கார்த்தி கிறுக்கி வரைந்ததாக நாகார்ஜூனாவிடம் காண்பிக்க பின் நாகார்ஜூனா அதை பிரகாஷ் ராஜிடம் விற்க அந்த பணத்தை கார்த்திக்கிடம் கொடுக்கும் போது, தான் அடுத்த ஓவியத்திற்கு தயாராவாதாக கூறியது போல, நமது அடுத்த பாகமோ என தோன்றியது . நண்பர்களிடம் இதை பகிர்ந்தபோது அப்படி எதுவுமில்லை, நீ எழுத முயற்சி செய்கிறாய் செய் என்று (எழுதிற வயசுல எழுதல).
இன்றைய சூழலில் சமூக ஊடகங்களுக்கு அடிமைகளா ?
சமூக ஊடகம் போதையா அல்லது பாதையா?
உலக அளவில் 377 கோடி மக்கள் இனணயத்தை நவீன உபகரணங்கள் (கைப்பேசி , கணினி மற்றும் இதர உபகரணங்கள் ) மூலம் உபயோகிக்கிறார்கள் இதில் 81% மக்கள் வளர்ந்த நாடுகளிலும் , 41% வளரும் நாடுகளிலும். 19.7 கோடி சமூக ஊடக செயலிலுள்ள பயனாளர்கள் இந்தியாவில் உள்ளனர் .
இத்தகைய சூழலில் நாம் சமூக ஊடகங்களுக்கு அடிமைகளா / சமூக ஊடக போதையா என்றால் நம்மில் பலர் முழுமையாக கிடையாது என்றும் ,ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஆம் என்றும் , சிலர் இளைய தலைமுறையினர் மட்டும்தான் என பல வாதங்கள் வரும். எவருமே நம்மிடம் உள்ள தவறுகளை அறிய முற்படுவது கிடையாது .
சமூக ஊடக அடிமையாதல் என்பது இந்தியாவில் வளர்ந்து வரும் சுகாதார பிரச்சனை , பெரும்பாலும் இளம் வயதினர். இதன் தாக்கம் குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன் எனது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊர் செல்ல என்னிடம் விவாதித்து கொண்டிருந்த போது, எனது இளைய மகள், அப்பா உங்களுக்கு சாப்பாடு என்ன செய்வீர்கள் என கேட்க, நான் தெரியவில்லை என கூற, உடனடியாக அப்பா நீங்க வலைஒளி மதராஸ் சமையலை பார்த்து சமைத்து கொள்ளுங்கள் என்று கூற வியப்புடன் பார்த்தேன். வலைஒளி குழந்தைகளிடம் உள்ள தாக்கத்தை பாருங்கள்.
கடந்த பத்தாண்டுகளில் கணினி மற்றும் கைப்பேசிகளில் திரைகளை சோதனை மற்றும் உருளுவது ஒரு வழக்கமான செயலாகிவிட்டது .அசூர வளர்ச்சியை சமூக ஊடகங்கள் கண்டுள்ளது ..
இன்று பலர் நீல திமிங்கலம் சவாலால் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டார்கள் . குழந்தைகள் ஒரு அறைக்குள் அடைந்து கிடந்து ஒளிஉரு விளையாட்டினால் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொல்லும் அவல நிலை . வெளியில் பட்டாம்பூச்சிகளாய் ஆடி திரியும் வயதில் ஏன் இப்படி ?
முன்பு குழந்தைகள் எப்படி தனது குழந்தை பருவத்தை கழித்தார்கள் ,கபடி ,கில்லி,கோ கோ, பம்பரம் , கண்ணாமூச்சி , குதிராட்டம் , என ஏராளமான விளையாட்டுகள் , இன்று குழந்தைகள் வீட்டுகுள்ளே இல்லை கைப்பேசிக்குள்ளே முடங்கியுள்ளார்கள் .
எத்தனையோ பேர் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி தனது வாழ்க்கையை தொலைத்துள்ளார்கள் .
நம்மில் பலர் முகநூல் பிரியர்கள் , முகநூல் விருப்பங்களை கணக்கிட்டு காத்துகிடப்பது சாதாரணமாகிவிட்டது . சிலர் தன்னை சுற்றியுள்ள நண்பர்களிடம் பேசாமல் முகநூல் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் , அவர்கள் தற்போதைய நிலை , புகைப்படம் , எங்கு இருக்கிறார்கள் என்பதிலே கவனம் .இதை யாரேனும் சுட்டிகாட்டினாலோ அல்லது அவர்களே தான் செய்வது தவறு என உணர்ந்தாலோ உடனடியாக சமூக ஊடகங்களை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் ஏனெனில் அவர்களால் கட்டுபடுத்த முடியாமை .
புலனை நிலை சோதிக்காமல், காலை எழுந்திருப்பது கிடையாது , இரவு தூங்குவது கிடையாது . இதை கேட்டால் " போங்கண்ணே எனக்கு வெக்கமா இருக்கு " என செந்தில் மாதிரி ஒரு சிரிப்பு .
டிக் டாக் , படவரி போதாக்குறைக்கு , தாமி எடுக்கும்போது உயிர் மாய்த்தவர்களும் உண்டு .
இப்படி இன்னும் பல, அது சரி , எப்படி உணர்வது நாம் இதற்கு அடிமைகளா என்று ?
1. வாரம் ஒரு நாள் இணையதளத்தை அனைத்து வைக்க முடியுமா ?
2. அடிக்கடி நீங்கள் உங்கள் கைப்பேசியில் சமூக ஊடகங்களை சோதிக்கிறீர்களா?
3.கருத்துக்கள் மற்றும் விருப்பங்களை எதிர்பார்த்து காத்துகிடக்கிறீர்களா?
4.இணைய நட்பு எண்ணிக்கையை உயர்த்த விரும்புகிறீர்களா?
5.கவனத்தை கோரும் எண்ணம் வருகிறதா ?
6.காரணங்கள் இல்லாமல் பதிவு போட துடிக்கிறதா ?
சரி இதிலிருந்து எப்படி விடுபடலாம் ?
நிறைய எளிய வழிமுறைகள் இருக்குதுங்க . சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறத்தேவையில்லை
1.உங்கள் சமூக ஊடக பயன்பாட்டு நேரத்தை கணக்கிடவும் .
2.சரியான காரணங்கள் இருந்தால் மட்டும் பதிவிடவும் .
3.சமூக ஊடகங்கள் அறிவிப்புகளை அனைக்கவும்.
சற்று ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் .
இதை நாம் எப்படி கையாள்வதென்று. மீண்டும் உங்களை 3ம் பாகத்தில் நன்மைகளா / தீமைகளா என்பதை உதாரணத்துடன் எழுத்து வாயிலாக சந்திப்போம் .