ஒளியும் ஒலியும் பாகம் 3
ஒளியும் ஒலியும் பாகம் -3
கடந்த இரண்டு பாகங்களை தொடர்ந்து இந்த மூன்றாம் பாகத்தை தாங்கள் என் எழுத்து மேல் உள்ள நம்பிகையில் படிப்பீர்கள் என்று கருத்துக்களை கீழே பதிவிட முனைப்புடன் எழுதுகிறேன். மேலும் கடந்த இரண்டு பாகங்களில் உள்ள எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்(கத்து குட்டி).
சமூக ஊடகங்கள் நன்மைகளா / தீமைகளா?
நான் வலம்புரி ஜான் போல வாதம் தீரும் என்றால் தீரும், தீராது என்றால் தீராது என்ற சொல்ல விரும்பவில்லை . என்ன இருக்கோ அதை ஒளிவுமறைவின்றி சொல்ல முயல்கிறேன் .
உங்க உள் மனக் குரல் எனக்கு கேட்குது , ஆம் நான் உங்களை எழுத்து வாயிலாக சந்திப்பதே இந்த சமூக ஊடகங்கள் தான் . சரி பொதுமுடக்கம் இருக்கும்போது வேறு வழியில்லை .
இணையதளமில்லா வாழ்க்கை துணையில்லா வாழ்க்கைக்கு சமம்? நம்மில் பலர் துணையில்லாமல் கூட இருந்திடுவோம்/வாழ்ந்திடுவோம் ஆனால் இணையதளமில்லாமல் இல்லை என்றால் தலை வெடித்துவிடும். இன்று இணையதளம் அடிப்படை அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது.
பொதுவாக எழுத்து நடையில் தலைப்பை விவாதித்த பின் தான் பரிந்துரை கூறுவது வழக்கம். நான் இங்கு வித்தியாசமாக முதலில் பரிந்துரையை கூறி பின் நன்மை / தீமை உதாரணங்களை பதியவிருக்கிறேன். ஒரு புது முயற்சி (ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல் மாதிரி இருக்கா ? இல்லை )
"தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்று கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில் கூறியது போல நன்மையும், தீமையும் யாரும் நமக்கு தருவதில்லை. நாம் அனுபவிக்கும் நன்மை,தீமைகள் அனைத்துக்கும் காரணம் நம் செயல்கள்தான்.
எண்ணங்கள் அழகாக இருந்தால் வாழ்வும் அழகாக இருக்கும் அதுபோல நம் வாழ்க்கை சிக்கல்கள் இல்லாதவாறு நாமதாங்க அமைத்துக்கொள்ளனும் .
திருவள்ளுவர் நன்மை / தீமை பற்றி ஒரு அழகான குறளில்
"நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்"
சாலமன் பாப்பையா அவர்கள் இதை இவ்வாறு விளக்கியுள்ளார். ஒரு செயலை நம்மிடம் செய்ய கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதை செய்ய வேண்டும்.
அப்படி செய்கிறவன் எப்பணியினையும் செய்கின்ற ஆற்றல் படைத்தவன் .
எந்த ஒரு தொழில்நுட்பமாக இருந்தாலும் சாதக மற்றும் பாதக விளைவுகள் உண்டு. அதை கையாளும் திறன் நம்மிடம் தான் உள்ளது. உதாரணமாக சட்டத்தில் உள்ள நடைமுறைகளை பின்பற்றினால் சாதகம் அமையும் (அ) உள்ள ஓட்டைகளை கண்டு பிடித்து மீற வேண்டுமெனில் பாதகம் அமையும்.
"அளவுக்கு மிஞ்சினால் சமூக ஊடகமும் நஞ்சு" அதிலேயே மூழ்கியிருப்பதனால் மன அழுத்தம் அதிகரிப்பதாக ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றது. மாணவர்கள் தேர்வு சமயங்களில் படிப்பில் கவனம் செலுத்தாமல் சமூக ஊடகத்தில் நேரத்தை செலவழிக்கின்றார்கள், இதனால் தோல்வியடைபவர்களும் உண்டு.
குழந்தைகளை சமூக ஊடகத்தில் சிறந்த முறையில் தங்கள் பங்களிப்பை செய்ய பெற்றோர்கள் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய வேண்டும்.
பல சிறுவர்கள் விதிகளை மீறி சமூக ஊடகங்களில் கணக்குத் தொடங்குகிறார்கள், பெற்றோர்கள் அதை ஊக்குவிக்க கூடாது. வருமுன் காப்பதே சிறந்தது.
சொல்வதை சொல்லி முடிச்சாச்சு , அப்ப என்ன செய்யனும் ,
1.எந்த பதிவையும் போடுவதற்கு முன் நன்கு யோசிக்கவும்
2.குடும்ப புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பறிமாறாதீர்கள்
3.அறிமுகமில்லாதவர்களை இணையதள நட்பு வட்டாரத்தில் இணைக்காதீர்கள்.
4.தனிநபர் தகவல்களை பறிமாறாதீர்கள்.
சமூக ஊடக நன்மைகள்
நன்மைகளை பற்றி விவாதிக்க பல உதாரணங்கள் உள்ளன. நான் இங்கு மிக முக்கியமான நிகழ்வுகளை உங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இது உங்களுக்கு புதிதான செய்தி கிடையாது இருப்பினும் அதன் தாக்கத்தை பதிவு செய்யவே.
2015 சென்னை வெள்ளம் நம் அனைவருக்கும் ஞாபகம் வரும், பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தோம், சிலர் செய்தியாகத்தான் படித்திருப்பார்கள். அந்த நேரத்தில் தன்னார்வலர்கள் புலனை வழியாகத்தான் இணைந்தார்கள். ஒருவர் செய்யும் செயலை பார்த்து மற்றவர்கள் இணைந்தார்கள். எங்கள் ஊருணி அறக்கட்டளையும் அப்படி உருவானது தானே. வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் சிலர் பெற்றோர்களிடம் பேச முயலாமல், புலனையில் பதிவிட்டு அதன் மூலம் மற்றவர்கள் அவர்கள் இருக்குமிடத்தை கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்தாரர்களிடம் பேச வைத்ததும் , கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றியதும் இந்த சமூக ஊடகங்கள் மூலம் தான் .
சென்னை மெரினா கடற்கரை புரட்சியில் சமூக ஊடக பங்கு மிக அருமையாக அமைந்தது. இதன் வழியே மாநிலத்தில் அல்ல இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஜல்லிக்கட்டு பற்றிய முக்கியத்துவம் அறிய செய்து ஒருங்கிணைந்தனர் .
உலகம் சுருங்கியுள்ளது, தொலைதூரத்தில் உள்ள நண்பர்களை இணைக்க உதவுகிறது. கடந்த சில வருடங்களா முன்னாள் பள்ளி / கல்லூரி நண்பர்கள் ஒன்றினைவு சமூக ஊடக உதவியுடன் தான் நடைபெற்று வருகிறது.
மற்றும் பல
1.தகவல் கருத்துக்கள் பறிமாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது
2.நிகழ்படம் பதிவேற்றம்
3.பொழுதுபோக்கு
4.வேலை வாய்ப்பிற்கு
5.நமது படைப்புகள் மற்றும் திறைமைகளை வெளி உலகிற்கு கொண்டு செல்வது.
தீமைகள்
சமூக ஊடகங்களை தொடர்ந்து பயன்படுத்தினால், துரிதமாக முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சமூக ஊடகத்தில் ஊடுருவி கொண்டிருக்கின்றனர் , இதனால் பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடுகிறது.
நிஜ வாழ்க்கையிலிருந்து விலகி செல்லும் சூழல் ஏற்படுகிறது.தங்களை சுற்றி நடப்பதைகூட மறந்து விடுகிறார்கள் . தொலைதூர நட்பை அருகில் கொண்டுவந்தது ஆனால் அருகில் உள்ள உறவுகளை தூரமா எடுத்துட்டு போயிடுச்சு.
பல பேர்கள் சமூக வளைதளத்தில் கயவர்களிடம் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். அண்மையில் ஒரு இளைஞன் பல பெண்களை ஏமாற்றிய விஷயத்தை நாம் தொலைகாட்சியில் கண்டு அதிர்ந்து போனோம்.
இணைய குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 100 தடவைக்கு மேல் சமூக ஊடகங்களை பார்வையிடுவோர்களில் , 47% மேல் மன அழுத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இளைஞர்களின் மன நலத்தில் தாக்கத்தை ஏற்படும் தரவரிசையில் படவரி மிக மோசமானது என்று ஐரோப்பா கண்டத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.
வாழ்க்கையை தொலைத்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள் ,எனக்கு தெரிந்த ஒருவர் எப்பொழுதும் கைப்பேசி கையுமா இருந்து வந்தார் , தான் குளியலறை சென்றாலு கூட, அவருக்கும் அவர் மனைவிக்கும் இதனால் நிறைய தடவை சண்டைகள் வரும் , ஒரு நாள் சண்டை முற்றிப்போக அவர் மனைவி தற்கொலை செய்து கொண்டார் . காலங்கள் கடந்தன அந்த நபர் தனது மகனோடு சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார். நீங்கள் நினைக்கலாம் இது தனிநபரின் தவறு இதற்கு சமூக ஊடகங்கள் என்ன செய்யும் .சிறிய விஷயங்களை ஊதி பெரிதாக்கும் சமூக ஊடகங்கள் இது போன்ற நடத்தைகளை ஏன் எடுத்து கூற கூடாது ?
மற்றும் பல
1.தனிநபர் தகவல் திருட்டு
2.தவறான தகவல்கள்
3.சட்ட விரோத பதிவு
4.கலாச்சார சீர் கேடு
5.குணாதிசய மாற்றங்கள்
ஒரு நகைச்சுவை பதிவு , இரு நபர்களுக்கு இடையே நடந்த உரையாடல்
நபர் 1: உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே ?
நீங்க முகநூல்ல இருக்கீங்களா?
நபர் 2: இல்லைங்க
நபர்1: அப்ப படவரியில் இருக்கீங்களா?
நபர் 2: இல்லைங்க
நபர்1: பின் புலனை இருக்கீங்களா?
நபர் 2: இல்லைவே இல்லை . உங்க பக்கத்து வீடுதான் . கடந்த ஒரு வருஷமாச்சு .
ஒருவர் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தினால் அதை சுட்டிகாட்ட வேண்டும் என்று பொது சுகாதார ராயல் அமைப்பு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது .
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது"
இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலை விட பெரிது - விளக்கம் வ.முத்தரசன்
ஆதலால் நாம் அனைவரும் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் , யாரெனும் அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்தினால் அவரிடம் சுட்டி காட்டி அதை உபயோகிக்கும் முறையை சொல்லி குடுங்கள்.
மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திக்க ஆவலோடு …..
சங்கர் சுந்தரலிங்கம்