கதை கேளு
வாழ்ந்து காட்டுவோம்
கதை கேளு
வாழ்ந்து காட்டுவோம்
ஒரு கிராமத்தில் இளைஞன் தான் பொறியாளராக வேண்டும் என்ற கனவில் சிறு வயதில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து வந்தான். தேர்வுகள் நடைபெற்றது, அதில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றான். அவன் ஊரில்/மாநிலத்தில் பொறியியல் கல்லூரிகள் இல்லை. அண்டை மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்தான். அண்டை மாநில அரசு பொறியியல் கல்லூரி சேர்க்கை உள்ளூர் மாநில மாணவர்களுக்கு என சட்டம் போட்டது. இதனால் அண்டை மாநில கிராமத்து மாணவன் அதிக மதிப்பெண் பெற்றும் சேர்க்கை கிடைக்கவில்லை. தனது மாநிலத்திலும் பொறியியல் கல்லூரிகள் இல்லை. மிகுந்த மனவேதனையுடன் அன்று இரவு வீடு திரும்பினான்.
இதை உணர்ந்த அவன் தந்தை, நடந்தவற்றை கேட்டு சரி விடு என கூற, மாணவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவன் தந்தை அவனிடம் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.
வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் நினைப்பது நடக்காது. அது காதல் ஆனாலும் சரி, கல்வி ஆனாலும் சரி, தொழில், வேலை என எல்லாவற்றிற்கும் தான். ஒன்றும் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு இருப்பதைவிட விழுந்த குதிரை எழுந்து வேகமாக ஓடுவதைப் போல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும்.
வாழ்க்கையில் சாதித்தவர்களின் வரலாற்றை படித்துப் பார், அவர்கள் என்ன ஆகவேண்டும் என நினைத்தது ஒன்று, ஆனால் சாதித்தது வேறொன்று.
உதாரணம்: அப்துல் கலாம் ஐயா அவர் விமான ஓட்டியாக வேண்டும் என நினைத்தார், அதில் தோற்றார் ஆனால் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார். பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணி பொறியாளராக வேண்டும் என நினைத்தார் பின்னாளில் பாடகர் ஆகி உச்சத்திற்கே சென்றார். இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றது.
தந்தை விளக்கத்தைக் கேட்ட இளைஞன் தெளிவு பெற்று, உள்ளூரில் கிடைக்கும் படிப்பை படித்து முடித்து தொழில் தொடங்கி முன்னேறினான் பின்னாளில் அவன் ஒரு பொறியியல் கல்லூரியை கட்டினார். தான் பொறியாளராக முடியவில்லை ஆனால் பல பொறியாளர்களை இம்மாநிலத்தில் உருவாக்க முடியும் என்று நினைத்தார் அதையும் நடத்திக் காட்டினார்.
கதை கருத்து : யாரும் எதையும் நம்பி இல்லை. படிப்பு, வேலை, பொருளாதாரம் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. படிக்கும்போது எங்கு வேலை கிடைக்குமென்று படிப்பதில்லை கிடைத்த வேலை எப்போதும் நிரந்தரம் இல்லை. ஆதலால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கண்டு பயப்படாமல் துணிந்து செயல்படுங்கள். மருத்துவம் படிக்க முடியவில்லை என்றால் பொறியாளர் அல்லது வழக்கறிஞர் அல்லது வேறு படிப்பிற்கு முயற்சிகள். மருத்துவ படிப்பு ஒன்றே வாழ்க்கை ஆகாது.
எதையும் திறம்பட செய்யுங்கள். நீங்கள் நட்சத்திரமாக இருந்தால் எங்கு இருந்தாலும் இந்த உலகம் உங்களை திரும்பிப் பார்க்கும்.
பலமே வாழ்வு!!!
பலவீனமே மரணம்!!!
-சுவாமி விவேகானந்தர்
நினைப்பது நடக்கவில்லை என்றாலும் வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்ந்து காட்டுவோம் என்ற தலைப்பில் இந்த கதை எழுத காரணம் சமீப காலமாக மாணவச் செல்வங்களின் மனதில் தேர்வுகளை கண்டு தோல்வி பயம், அதன் விளைவு மரணங்கள். இதற்கான காரணங்களை ஊடகங்கள் போல் மத்திய, மாநில அரசா அல்லது அரசியல் கட்சிகள் என விவாதிக்காமல், ஒரு கருத்தை சொல்ல முயல்கிறேன். இதை படிக்கும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் புரிந்து கொண்டால் சந்தோஷம்.