கதை கேளு
செய்யும் தொழிலே தெய்வம்
தாத்தா பேரனுக்கு இடையே உரையாடல்!
தாத்தாவிடம் பேரன், தாத்தா இவ்வுலகில் எந்த தொழில் சிறப்பு வாய்ந்தது? நான் நம் சொந்தங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, அரசியல்வாதியாக, மளிகை கடைக்காராக, கூலி வேலை செய்பவர்களாக, நெசவாளியாக, விவசாயியாக, உழைப்பாளிகளாக. இதில் யார் சிறந்தவர்?
நான் எந்த தொழிலை என் வருங்காலத்திற்கு தேர்ந்தெடுக்கலாம். எனக்கு நல்ல தொழிலை நீங்கள் கூறுகிறீர்களா? நான் இப்பவேயிலிருந்து அதற்கு படிக்கிறேன். நான் ஏன் என் அப்பாவிடம் கேட்காமல் உங்களிடம் கேட்கிறேன் என்றால், நீங்கள் பெரிய அனுபவசாலி, நாலும் அறிந்தவர்.
பேரா, நான் கண்டிப்பாக கூறுகிறேன். அதற்கு முன் நீ முக்கியமான ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
தொழிலில் எந்த தொழிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று கிடையாது. தொழில்களுக்கு இடையே ஜாதி , மதம் வேறுபாடு கிடையாது. நம் சொந்தங்கள் அனைவரும் தொழில் பக்தியுடன் செயல்படுகிறார்கள். தொழில் செய்யாமல் சோம்பேறியாக நாட்களை வீணாக்குவது தான் தாழ்ந்தது. தொழில் செய்யாதவரை நம் சமூகம் மதிப்பதில்லை, திருமணத்திற்கு பெண் கொடுப்பதும் இல்லை.
செய்யும் தொழிலில் பொய்யும், புரளியும் இன்றி நேர்மையாகவும், கடமையாகும் தொழில் செய்பவர் சிறந்தவர்.
இதை மகாகவி பாரதி…
வையகம் காப்பவரேனும் — சிறு
வாழைப்பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே — பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர்.
என்று அரசனையும் வாழைப் பழக்கடை வைத்திருப்பவரை ஒப்பிடுகிறார். இந்த இருவரில் பொய் இன்றி தொழில் செய்பவரே சிறந்தவர் என்று கூறுகிறார்.
கடமையே கண் கண்ட தெய்வம். செய்யும் தொழிலே தெய்வம் என வாழ்தல் வேண்டும்.
செய்யும் தொழிலே தெய்வம் -பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
செய்யும் தொழிலே தெய்வம் — அந்த
திறமைதான் நமது செல்வம்
கையும் காலும் தான் உதவி- கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி
என அழகாக விளக்கியுள்ளார்.
பேரா ,உனக்கு புரிகிறதா. எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு ஈடுபாடு செய்கிறோம் என்பதே முக்கியம்.
உனக்கு இன்னொரு உதாரணம் கூறுகிறேன்.
ஒரு ஆசாரியிடம் ஊர் தலைவர் 10 நாற்காலிகளை செய்ய சொன்னார். ஆசாரி மிகவும் பயத்துடன், கடமையுடன் 10 நாற்காலிகளையும் செய்து தலைவரிடம் காண்பித்தார். தலைவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆசாரியை பாராட்டி, சரி இன்னொரு நாற்காலியும் செய்யச் சொன்னார். இதை தட்ட முடியாத ஆசாரி விருப்பமில்லாமல், ஏனோ தானோ என்று மற்றொரு நாற்காலியும் செய்து தலைவரிடம் தகவல் தெரிவித்தார். தலைவர் நாற்காலியை பார்க்காமல் நன்று, ஆசாரி எங்களுக்கு 10 நாற்காலியை செய்ததற்காக உங்களுக்கு பரிசாக கொடுக்கத்தான் இந்த ஒரு நாற்காலியை செய்யச் சொன்னேன். அது உங்களுக்கு தான் அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார். இதை கேட்டு அதிர்ந்து போன ஆசாரி தன் தவறை உணர்ந்தான். அந்த ஆசாரி தொழிலை முழு மனதுடன் செய்ய வேண்டும். அது எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி என்பதை புரிந்து கொண்டான்.
அதனால் உனக்கு என்ன தொழில் பிடிக்கிறதோ அதை தேர்ந்தெடுத்து, அதில் முழு ஈடுபாட்டுடன் பொய்யின்றி உண்மையாக உழை. அது உன்னை மேலோனாக்கும்.
கதை கருத்து:
செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழியை என்றும் மறவாதே!!! செய்யும் தொழிலை நேசிப்போம், சுவாசிப்போம். தொழிலின் மீது ஆழ்ந்த கவனம் தேவை என்பதை இக்கதை உணர்த்துகிறது. செய்யும் தொழிலே தெய்வம் என விரும்பி அத் தொழிலை செய்தால் வெற்றி நிச்சயம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்த்தும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.