கதை கேளு — அனுபவம்
ஒரு நாள் பேரன் கோபமாக வந்து தன் தாத்தா அருகில் அமர்ந்தான். எங்க அப்பாவுக்கு அறிவே கிடையாது, எப்ப பார்த்தாலும் என்கிட்டே எதாவது சொல்லிக்கிட்டே இருக்கிறார். ஏன் இப்படி பன்றாருன்னு தெரியல ? ஏன் இப்படின்னு கேட்டா ? என் அனுபவத்துல சொல்றேன் என்றார். என்னதான் இவங்க பெரிய அனுபவத்த கண்டங்கன்னு எனக்கு தெரியல?
தாத்தா, இப்படி தான் நீங்க சின்ன வயசுல அனுபவன்னு சொல்லி என் அப்பாவ சித்தரவதை பண்ணீங்களா? அதுதான் அவர் இப்ப எனக்கு பண்றாரா?
அதற்குத் தாத்தா சிரிச்சுகிட்டே….. அனுபவம் என்பது பறவைகள் மாதிரி . பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். உன்கிட்ட எந்த அனுபவத்தை உங்க அப்பன் சொன்னான்னு எனக்கு தெரியல.
தாத்தா , அவரு நான் செய்யும் வேலை மற்றும் அதன் விளைவுகளை சொல்லறாரு. அனுபவம் என்ற பேரில் நான் ஒளிந்து கொள்ள விரும்பவில்லை. படைப்பிற்கு அனுபவம் ஒரு தடை .
பேரா ! அனுபவம் மூளைக்கு தான், இதயத்திற்கு இல்லை. நீ செய்யம் செயல்களில் அடுத்தவர்களுக்கு நன்மை என்றால் உன் இதயம் சொல்வதை கேள் . அது கெடுதல் விளைவிக்குமானால் உன்னுடைய அல்லது உன் சுற்றார்கள் அனுபவத்தை அறிந்து தவிர். படைப்பிற்கு அனுபவம் தடை இல்லை , பல படைப்புகள் அனுபவத்தினால் தான் சாதிக்க முடிந்தது / முடிகிறது . எதையும் செய்வதற்கு முன் ,சரி பார்த்து, ஆராய்ந்து செய்.
சரி தாத்தா, ஒரு சிறிய சந்தேகம். அனுபவம் என்றால் என்ன?
பேரா! பெரிய விஷயங்களை விவாதிப்பது அனுபவம் அல்ல. சிறிய விஷயமாக இருப்பினும், அதை புரிந்து செயல்படுவதே அனுபவம். அனுபவம் என்பது நாம் கற்ற பாடங்கள் நம் வாழ்க்கைக்கு உரமாக அமைவதுதான் . அனுபவத்தை கற்றுக் கொடுக்க முடியாது, அது அனுபவித்துதான் பெற முடியும்.
தாத்தா, என்ன பொறுத்த வரைக்கும், அனுபவம் என்பது நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் சூட்டிக் கொள்ளும் நூதன பெயர்தான் அனுபவம்.
நீ சொல்வது ஒருவகையில் சரிதான், ஆனால் முழுமையாக கிடையாது . அனுபவம் எப்படி ஏற்படுகின்றது என்பது முக்கியமான ஒன்று இல்லை, அதைக்கொண்டு என்ன செய்கிறோம் என்பதே முக்கியமான விஷயம். கண்ணதாசன் சொன்னது போல “அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது, எல்லாவற்றையும் இழந்த பின் எஞ்சி நிற்பதே”.
கலைஞர் சொன்னது போல “அனுபவம் ஒரு பள்ளிக்கூடம், ஆனால் அதில் ஆணவக்காரர்கள் கற்றுக் கொள்வதில்லை.” ஆணவத்தோடு இருக்கிறவங்க எவ்ளோ அனுபவங்களை கற்றுக் கொண்டாலும் அதில் இருந்து பாடம் கற்று திருந்துவது இல்லை , கற்றுக்கொண்ட அனுபவங்களை புரிந்துகொண்டு அதன் தவறுகளை பின்னாட்களில் தவிர்ப்பது தான் உண்மையான அனுபவம்.
நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே அனுபவம். அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர் ,ஏனென்றால் முதலில் பரிச்சை, பின்பு பாடம். அனுபவம் விதை போன்றது. அந்த விதை பின்னாளில் முளைத்து செடியாகவும், மரமாகவும் காய்த்து பயன் தருகிறது.
அனுபவங்கள் நல்லவை கெட்டவை என இரண்டு வகை உண்டு. இது ஒரு தொடர் சங்கிலி, தவிர்க்க முடியாத ஒன்று. நமது வாழ்வின் அங்கம், ஒரு சக்தி நம் வாழ்க்கையை வடிவமைப்பதில்.
புரிந்துவிட்டது தாத்தா. அனுபவங்கள் பல பாடங்களை பல்வேறு தருணங்களில் பலருக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இதை நாம் மற்றவர்களிடம் கேட்டு அல்லது நமது சொந்த அனுபவத்தில் கற்றதை வைத்தும் அல்லது படித்தும். நன்மை, தீமைகள் ஆராய்ந்து சரியான தருணத்தில் பாதையை நகர்த்தினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அனுபவம் நாம் செய்யும் தொழில்களிலும் வேலைகளிலும் பிறருக்கு கெடுதல் செய்யாமல் இருக்க பயன்படுத்த வேண்டும்.
சரியாகச் சொன்னாய் பேரா பல தருணங்களில் அனுபவங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் அனுபவம் மூளைக்கு தான், இதயத்திற்கு அல்ல. உதாரணமா, பிறருக்கு ஏதாவது நன்மை செய்து, அதில் பிரதிபலன் இல்லை என்று கூறி உதவி செய்வதை நிறுத்தி விடுவார்கள். பின்பு வேறு யாராவது நிஜமாகவே உதவி கேட்டு வரும்போது செய்ய மாட்டார்கள். ஏன் செய்யவில்லை என்று யாராவது கேட்டால், எனது முன் அனுபவம் என்று கூறுவார்கள். தயவுசெய்து உண்மையான தேவை அறிந்து உதவி செய்.
கதை கருத்து:
ஒரு பயணத்தின் முடிவில் ஒரு மறக்க முடியாத அனுபவம் ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும் மேற்சொன்ன கதையில் கூறியது படி அனுபவத்தை அனுபவித்து வாழ்க்கையை நல்வழிப் படுத்துங்கள் .
தொடரட்டும் உங்கள் நல்ல அனுபவ பாடங்கள்…..