கதை கேளு — அறைக்குள் யானை

Sankar sundaralingam
2 min readApr 10, 2021

--

மனோதத்துவ மருத்துவரை பார்க்க ஒரு தொழிலதிபர் வந்தார். அவர் மிகப்பெரிய பணக்காரர், அவரிடம் இல்லாத செல்வ வளங்களே இல்லை. விதவிதமான ஆடம்பர கார்கள், மாடமாடிகைகள். ஆனால் அவர் முகம் வாடியிருந்தது.

மருத்துவரிடம் எனக்கு மன நிம்மதி இல்லை, தூக்கம் இல்லை, இதயம் வெடிக்கிற மாதிரி தோன்றுகிறது என்றார்.

மருத்துவர் அவரை சமாதானப்படுத்தி, ஏன் உங்களுக்கு இப்படி தோன்றுகிறது என கேட்டார்?

தொழிலதிபர் நான் சிறு வயதில் கடினமாக உழைத்து, பலரை ஏறி மிதித்து இந்த நிலைமைக்கு வந்தேன். என்னை எதிர்த்தவர்களை தந்திரமாக வென்றேன். இப்பொழுது அனைத்தையும் பெற்றேன். ஆனால் அன்று இருந்த நிம்மதி தூக்கம் இன்று பட்டு மெத்தையில் எனக்கு கிடைக்கவில்லை. பல நாட்களாக எனக்கு ஆழ்ந்த சிந்தனை, இதைப்பற்றிய சிந்தித்தேன். சரி நாம் செய்த செயல்களுக்குத் பிரதிபலனாக சிலருக்கு உதவலாம் என யோசிக்கையில், என் மனம் தடுமாறுகிறது. அதனை செய்ய முடியவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை?

மருத்துவர் சரி, நான் கூறும் வகையில் சற்று சிந்தித்துப் பாருங்கள், உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கிறதா என்று பார்ப்போம்.

சரி மருத்துவர் சொல்லுங்கள்!!!

ஒரு குட்டி யானையை கொண்டு வந்து, ஒரு வீட்டின் அறையில் அடைத்து வைத்து சில காலங்கள் வளர்த்து வந்து, அது வளர்ந்த பின் அதை வீட்டின் அறையிலிருந்து வெளியே கொண்டு வந்து விட வேண்டும். எப்படி செய்கிறீர்கள்?

எப்படி சாத்தியமாகும்? குட்டியாக இருக்கும்போது வாசல் கதவு வழியாக உள்ளே கொண்டு சென்றிருப்பார்கள். இப்பொழுது அது வளர்ந்து பெரிய யானை ஆகிவிட்டது. வாசற்கதவு வழியாக வெளியே கொண்டுவர முடியவே முடியாது. வீட்டின் அறை மற்றும் வீட்டை உடைத்து தான் யானையை வெளியே கொண்டு வர முடியும்.

சரியாக சொன்னீர்கள். இதை சற்று உங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஆமாம் மருத்துவரை எனக்கு இப்ப புரிகிறது நான் எனது சுய முன்னேற்றத்திற்காக சிறுநஞ்சை என் மனதில் விதைத்தேன் அது இன்று வளர்ந்து ஆலமரமாக நிற்கிறது என்னை எந்த நற்செயல்களையும் செய்யவிடாமல் தடுக்கிறது.

என்னால் இன்று ஆல மரத்தை அடியோடு சாய்க்க முடியவில்லை, ஆனால் அந்த நஞ்சுவை என் மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி எறிவேன்.

மருத்துவர்: கண்டிப்பாக முடியும். முயற்சி செய்யுங்கள், வாழ்த்துக்கள்.

கதை கருத்து.

நஞ்சு மனம் வேண்டாம். நஞ்சுவை மனதில் சிறிதாக விதைத்தால், அது அறையில் உள்ள யானையைப் போல் உங்கள் மனதில் வளர்ந்துவிடும். எப்படி யானை உள்ள அறையில் எந்த பொருளையும் உள்ளே வைக்க இடம் இருக்காது, அது போல தான் நஞ்சு நிறைந்த மனதில், எந்த நற்செயல்களையும் செய்ய இடம் கொடுக்காது. ஆதலால் மனதை சுத்தமாக வைத்திருந்து நற்காரியங்களுக்கு உதவுங்கள்.

நன்றி!!!

வணக்கம்!!!

--

--

Responses (2)