கதை கேளு — ஆசை

Sankar sundaralingam
2 min readJan 29, 2022

--

ஆசை

அலை கடலென ஆர்பரிக்கும்

ஆசை ஆரவாரம், ஆனால்

ஆசையே அழிவுக்கு காரணம்

அதை துறந்து பாருங்கள்

என்கிறார் புத்த பெருமான்,

அத்தனைக்கும் ஆசைப் படு

அது அற்புத சக்தி

என்கிறார் சத் குரு,

கனவு இரு முறை

வந்தால் அது ஆசை

என்கிறார் அப்துல் கலாம்,

அத்தனையும் கேட்டு எதை

பின்பற்றுவது என குழம்பிய

இளம் மனது…

எவரேனும் தெளிவுபடுத்துவாரோ என்ற எண்ணத்துடன் காவேரி கரையோரம் பயணத்தை தொடர்கிறான் அந்த வாலிபன்.

நாமும் அவனை பின் தொடர்ந்து அறியலாம்? வாருங்கள்…..

மார்கழி பனிக்காலம், சாமந்தி பூ தோட்டம் ஒரு புறம் , மறு புறம் காவேரி ஆறு காண கண் கொள்ளா காட்சி, ஆற்றங்கரை தாண்டியவுடன் மலைக் கோவில், அங்கு ஒரு சித்தரை பார்க்கிறான். ஆசை பற்றி தனது குழப்பத்தை இவரிடம் தெளிவு படுத்தலாமா என்ற யோசனை மனதில்.

இவரே அனைத்தும் துறந்தவர், நமக்கு என்ன சொல்ல போறார்? புத்த பெருமான் சொன்னதை சொல்வார். அவர் துணைக்கு நம்மை கூப்பிட்டாலும் கூப்பிடுவார்.

வாலிபனை முணுமுணுப்பதை கண்ட சித்தர், அப்பனே அடியேனின் உதவி, உபதேசம் தேவைப்படுகிறதா என்று கேட்டவுடன். வாலிபனுக்கு அதிர்ச்சி, இது என்ன மாயா வேலை மாதிரி இருக்கு. நான் அவருகிட்ட உத்தாசை கேட்க நினைத்தது சித்தருக்கு எப்படி தெரிந்திருக்கும்.

அப்பனே ஏன் கவலை கொள்கிறாய்? உன் தேவையை கூறும். இந்த பரதேசியின் ஞானத்திற்கு எப்படி புலப்பட்டது என்று குழம்ப வேண்டாம். அவன் உடனே சுதாரித்து கொண்டு சித்தரே தாங்களை நான் ஒருபோதும் பரதேசி என நினையேன்.

என்னுடைய குழப்பம் ஆசையை பற்றி புத்த பெருமான் மற்றும் பலர் வெவ்வேறு வகையாக கூறுகிறார்கள். அதன் தெளிவு இன்னும் புலப்படவில்லை.

அப்பனே ! ஆசை உலகம் இயங்குவதற்கும் பயன்படும், அழிப்பதற்கும் பயன்படும். இன்னும் சுருங்க சொன்னால் அன்பான ஆசை ஆள்கின்றது, ஆபத்தான ஆசை அழிக்கின்றது.

மீண்டும் திகைத்து நின்றான் அந்த இளைஞன்.

சித்தர் மீண்டும் பேச தொடங்கினார், ஆசை படு ஆனால் அதற்குள் உன்னை அடக்கிவிடாதே. ஆசை பேராசையாகவும், நிராசையாகவும் ஆகிறது. பேராசை பெருநஷ்டம். ஆசை பைத்தியம் ஆகாதே, அப்படி ஆவதால்தான் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை வருகின்றது. இவைகள் மிகப்பெரிய தீ, இவற்றினால் இந்த உலகம் கண்ட போர்கள் எத்தனையோ , இழந்த உயிர்கள் எத்தனையோ கணக்கிட்டால் எண்ணிலடங்காதது. எதையும் போகும் போது எடுத்து செல்ல முடியாது என்பதை உணர்ந்தால் பேராசை என்பது வராது.

மீன் தரையில் வாழ, மனிதன் நீருக்குள் வாழ கனவு கண்டால் அது நிராசை. நடக்காத விசயத்திற்க்காக ஆசை படுவதில் எந்த உபயோகமும் இல்லை. சாதிக்க கூடிய விஷயங்களுக்கு ஆசை பட்டால் மட்டும் போதாது. அதற்கு இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். ஆசை கனவில் மிதப்பதை காட்டிலும் அதற்கு உழைக்க வேண்டும்.

ஆசை துறக்க வேண்டும் என்று புத்த பெருமான் ஆசை பட்டாரல்லவா, ஆசை இல்லா மனிதன் இல்லை. ஆசைகள் இல்லாமலே வாழ முடியுமா என்று கேட்டால், வாழ முடியாது. உயிர் வாழ்வது என்பதே ஆசைதான். மனிதன் மண்ணுக்குள் புதையும் வரை தன் ஆசையை அடக்குவதில்லை, அடக்கவும் முடியாது. ஒவ்வொரு பருவத்திலும் அது மாறும் (குழந்தைப்பருவம், இளமைப்பருவம்,உழைக்கும் பருவம், முதுமை பருவம்).

இப்படி சித்தர் கூறியதை கேட்ட அவன் முகம் சிரிப்பை கண்டது, அது ஏளன சிரிப்பு கிடையாது. தெளிவடந்தை ஆனந்த சிரிப்பு என்பதை நாம் உணர்கிறோம். சித்தர் அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

கதை கருத்து :

ஆசை அவசியம், ஆசை மறைவதில்லை, மாறுகிறது. காலத்திற்க்கு ஏற்றவாறு. ஆசையை சீரமைத்து பார்க்க வேண்டும், அப்படி பார்த்தால்தான் அவசியமற்றதை எறிய முடியும்.

ஆசை உனை செதுக்குகிறது,அடையாளம் காட்டுகிறது,ஊக்குவிக்கிறது, உயர்த்துகிறது, அது பேராசையானால் வீழ்த்தவும் செய்கிறது. இதை மறவாதே.

ஆசையை துறக்க தேவையில்லை ,தேவையானவற்றிற்கு மட்டும் ஆசைப்பட்டு, அதனுள் உன்னை அடக்கிவிடாதே. ஆசை நதியிலிருந்து மீண்டு வருவது கடினம்.

--

--

No responses yet