கதை கேளு — உப்பு
நம்ம ஊரில் மளிகை கடை வைத்திருப்பவர்கள், கடைக்கு வெளியில் உப்பு மூட்டையை அடுக்கி வைத்திருப்பார்கள். இரவில் கடை அடைக்கும் போது அதை உள்ளே எடுத்து வைக்க மாட்டார்கள். கடைக்கு வெளியில் வைத்துதான் செல்வார்கள், இதை யாரும் திருடி செல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை பல காலமாக இருந்து வருகிறது.
வெளி மாநிலத்திலிருந்து வந்த திருடன் ஒருவன் இதை கவனித்தான். அவன் அங்கு பார்த்த மளிகை கடைகளின் எண்ணிக்கை மற்றும் உப்பு மூட்டைகளை கணக்கிட்டால் ஒரு சரக்கு வண்டி நிறைய உப்பு கிடைக்கும், இதை எடுத்து சென்று விற்றுவிடலாம் என்று மனதிற்க்குள் எண்ணினான்.
இருந்தாலும் அவன் மனதில் ஒரு வியப்பு, ஏன் உப்பை கடையுனுள் வைக்காமல் வெளியே வைத்து செல்கிறார்கள், இந்த ஊர் மளிகை கடைக்காரர்கள்? அதன் மதிப்பு இங்கு மிக குறைவா? சரி நாளை காலை இதன் விலையை கேட்டு அறிந்திடலாம் என்று தீர்மானிக்கிறான்.
அந்த திருடன் மறுநாள் காலை மளிகை கடைகள் திறந்தவுடன், வயதானவர் கடையை கண்டுபிடித்து, அவரிடம் பேச்சு கொடுத்து விவரங்கள் அறிய முற்படுகிறான். கடையை அடைந்து , ஐயா உப்பு 1 படி என்ன விலை என்று கேட்கிறான். கடைக்காரர் ரூ.10 என்று சொல்ல, திருடனுக்கு மனதில் சந்தோஷம். நல்ல விலை தான். ஏன் உப்பை வெளியில் வைத்திருக்கிங்க ? இது நல்ல உப்பா அல்லது கெட்ட உப்பா ?
பெரியவர் சிரித்துட்டே, அதன் பயன் படுத்தும் அளவை பொறுத்து இருக்கு. குழப்பமா?
அளவாக பயன்படுத்தினால் — வெள்ளை தங்கம் உப்பு, உலகின் முதன்மையான பொருள்.
அதிகமாக பயன்படுத்தினால் — வெள்ளை விஷம் உப்பு (சீனாவில் பழங்காலத்தில், அதிகமாக உப்பு சாப்பிட்டு தற்கொலை செய்யும் வழக்கம் இருந்துள்ளது).
கடைக்காரரின் பதில் அவனுக்கு உப்பை பற்றிய சிந்தனைகளை மாற்றியது. இதை நாம் திருடினால் தவறு. உப்பு தேவைக்குத்தான் பயன் படுத்தவேண்டும், தேவைக்கதிகமானால் அது ஆபத்து என்று உணர்ந்தான். உப்பின் மகிமையை மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம், காலை பொழுது வாடிக்கையாளர்கள் குறைவு, அதனை பயன்படுத்தி கொண்டு பல சந்தேகங்களை கேட்டான்.
ருசியான சமையலுக்கு மட்டும் உப்பு அவசியம் கிடையாது, வாழ்க்கைக்கும் தான். உப்பை குறையுங்கள், அதிகப்படுத்துங்கள் என்று மருத்துவர்கள் சொல்வது எந்த உப்பை தெரியுமா? சொல்கிறேன் கேள் !
குறைக்க வேண்டிய உப்புக்கள் , குறைக்க வேண்டியவர்கள் .
- படபட(உ)ப்பு — கணவன்
- நச்சரி(உ)ப்பு — மனைவி
- பரபர(உ)ப்பு — இளசுகள்
- ஏய்(உ)ப்பு — மாணவர்கள்
- சிடுசிடு(உ)ப்பு — மாமியார்கள்
- கடுகடு(உ)ப்பு- மருமகள்கள்
- ஒத்திவை(உ)ப்பு — வழக்கறிஞர்கள்
- புறக்கணி(உ)ப்பு — தொழிலாளர்கள்
- ஆர்ப்பரி(உ)ப்பு — அரசியல்வாதிகள்
- தொணதொண(உ)ப்பு- முதியவர்கள்
- தப்(உ)பு — துணை போகிறவர்கள்
அதிகப்படுத்த வேண்டிய உப்புக்கள் , அதிகபடுத்த வேண்டியவர்கள்
- சிரி(உ)ப்பு — அனைவருக்கும்
- சிற(உ)ப்பு — உடம்புக்கும் , மனதுக்கும்
- விய(உ)ப்பு — குழந்தைகளுக்கு
- அறிவி(உ)ப்பு — பெற்றோர்களுக்கு
- வாய்(உ)ப்பு — இளசுகளுக்கு
- துப்(உ)பு — காவல் அதிகாரிகளுக்கு
- உயிர்ப்பு — அனைத்து உயிரினங்களுக்கு.
உப்பும், நட்பும் இல்லாமல் எவனும் இங்கு வாழ முடியாது. வாடிக்கையாளர்கள் வர தொடங்கினர், பெரியவர் வியாபாரத்தில் கவனம் செலுத்துவதை கவனித்தவன் அங்கிருந்து விடை பெற்றான்.
கதை கருத்து :
சும்மா வெளியில் உப்பு கொட்டி இருக்கின்றது என்று குறைத்து எடை போட கூடாது. அதனுள் எத்தனை வாழ்க்கை ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது.
“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது பழமொழி. உப்பு என்றால் மகிழ்ச்சி என்பது பொருள். “அளவான உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற புதுமொழி இன்று பொருந்தும். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
“உப்பில்லா பண்டம் குப்பையிலே” — உப்பு போடாவிட்டால் உணவில் சுவை இருக்காது. உப்பில்லா வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. அதிகரிக்க வேண்டிய உப்புக்களை அதிகரிக்குக, குறைக்க வேண்டிய உப்புக்களை குறைக்குக.