கதை கேளு — உயர பறப்போம்

Sankar sundaralingam
2 min readAug 29, 2020

--

உயர பறப்போம்

கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அனைத்து மாணவர்களாலும் மதிக்கப்படும், பாராட்டப்படும், போற்றப்படும் தமிழ் பேராசிரியர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் முன்னாள் மாணவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று விழாவில் கலந்து கொண்டார். முன்னாள் மாணவர்கள் அனைவரும் அவர்களது பொன்னான கல்லூரி கால நினைவுகளை ஒவ்வொருவராக பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கூறியது, கல்லூரி காலத்தை இழந்து தவிக்கிறோம். அது மீண்டும் அமையாது, காலங்கள் கடந்து விட்டது.

பேராசிரியர்: சரி இது அனைவருக்கும் பொருந்தும், ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் இல்லையெனில் அது மிகுந்த வருத்தத்தை அளிக்கும். முன்னேற்றம் என்பது நகர்ந்து செல்வது, நீங்கள் உங்கள் தற்போதைய தொழில் மற்றும் வேலை இடத்தில் உள்ள சந்தோசங்கள், அனுபவங்களை அனுபவித்து உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி முன்னேறி செல்ல வேண்டும்.

உடனே மாணவர்கள் அனைவரும் பேராசிரியர் அவர்களைப் பார்த்து இப்போதெல்லாம் தொழில் மற்றும் வேலைகளில் மிகுந்த போட்டி, ஒருத்தரை மிதித்து தான் மற்றவர்கள் மேலே வரமுடியும். யாரை நம்புறது, யாரை நம்பக் கூடாது என தெரியவில்லை. புறம் சொல்வது, எப்போது பார்த்தாலும் நம்மைப்பற்றி மேலிடத்தில் புகார் செய்வது நம்மளை எப்படி காலி பண்ணலாம் என யோசிக்கதான் நம்மள சுத்தி இருக்காங்க. இந்த சூழ்நிலையில் எப்படி சந்தோஷத்தை அனுபவிக்க? என்ன நடக்கும் என்று தெரியாது? என புலம்பி தள்ளினார்

பேராசிரியர்: கழுகைப் போல் வாழ கற்றுக் கொள்ளும். காகத்தைப் போல் அல்ல.

மாணவர்கள்: கழுகு பறவைகளின் அரசன். எத்தனை அரசர்கள் இருக்க முடியும்? எல்லாரும் கழுகு ஆக முடியாது.

பேராசிரியர்: அப்படியல்ல, கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே.அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும். ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும். கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும். உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து கீழே விழுந்து விடும்.

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள். மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள்.நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

கதை கருத்து: நாம் என்னவாக இருக்க வேண்டும் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும். எல்லாக் காலத்திலும் எல்லா சாதனையாளர்களும் போட்டி, பொறாமை, எதிர்ப்புகள், புறம்கூறுதல் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதை கண்டு பயப்படாமல் புலம்பாமல் உங்கள் வேகத்துக்கு உயர பறங்கள். எதிர்ப்பாளர்கள், போட்டியாளர்கள், குறை கூறுபவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.

--

--

Responses (1)