கதை கேளு — எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்

Sankar sundaralingam
2 min readJul 10, 2021

--

அழகான மனைவி, மிகவும் பொறுமைசாலி, கணவன் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது என்று வாழ்பவள். ஆனால் அவள் கணவனோ (மோகன்) அவளை அன்றாடம் துன்புறுத்துவது, எதை செய்தாலும் குறை கூறுவது என்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் மனைவியின் சாப்பாடு சரியில்லை என்றும் அவளை கண்ணா பின்னா என்று திட்டிவிட்டு வேலைக்குச் சென்றான்.

வேலையிடத்தில் அவனுடைய மேலதிகாரி அவனை அன்று காலை வேகமாக திட்டினார். இவன் காரணம் தெரியாமல் திகைத்து நின்றான். சற்று நேரம் கழித்து தன்னுடைய சக தொழிலாளியிடம் நான் இளிச்சவாயன் என்று நினைத்து என்னை நமது மேலாளர் கன்னாபின்னா என்று திட்டுகிறார். இது சரிதானா என்று கேட்டான்?

சக தொழிலாளி அவனிடம் திருப்பிக் கேட்டான். உன்னைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும் ஏனெனில் நான் உன் பக்கத்து வீட்டில் வசிக்கிறேன். நீ உன் குடும்பத்தில் உன் மனைவியிடம் நடந்து கொள்வது செய்வது சரிதானா மோகன்?

மோகன் சற்று மௌனம் சாதித்தான்.

சக தொழிலாளி அவனிடம் சொன்னான். இப்போது புரிகிறதா உன் கர்ம செயல்கல் தான் உன்னை பின்தொடர்வது என்று. எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.

உன்னைவிட பலம் குறைந்தவர்களை திட்டுவதோ, அடிப்பதோ பலம்/ துணிவு கிடையாது. அப்படி நீ செய்யின் உன்னை திட்ட , அடிக்க உனக்கு மேல் ஒருவர் வருவார் . ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிர் எதிர்வினை உள்ளது. தன்னை விட பலம் (பண பலம், மன பலம், உடல் பலம் ) குறைந்தவர்களை நாம் வஞ்சித்தாலோ அல்லது ஏமாற்றினாலோ கடவுள் அவர்கள் சார்பாக நம்மை வஞ்சிப்பார்.

உதாரணம் உணவுச் சங்கிலி என கூறப்படும்.

புல்வெளியில் உணவுச் சங்கிலி :நெல் –-> எலி →பாம்பு → கழுகு

காடுகளில் உணவுச் சங்கிலி :புல் –-> முயல் → நரி →புலி

குளத்தில் உணவுச் சங்கிலி :தாவர மிதவை உயிரி → பூச்சி → சிறிய மீன் –-> பெரிய மீன் → மனிதன்

பாம்பும் தவளையும் — கதைப்பாடல்

குட்டை ஒன்றில் நீந்தியே

குதித்த தவளைக் குட்டியும்

குட்டைக் கரையின் ஓரமாய்

எட்டி மேலே பார்த்ததாம்!

பச்சைப் புல்லும் கரையிலே

பாயை விரித்தது போலவே

குட்டித் தவளை கண்டதாம்

கொள்ளை ஆசை கொண்டதாம்!

தாவி மேலே வந்ததாம்

தத்தித் தத்திப் பார்த்ததாம்!

ஆவ லோடு புல்லிலே

ஆடிப் பாடி மகிழ்ந்ததாம்!

குட்டிக் கரணம் போடவே

குனிந்த தவளைக் குட்டியை

கெட்ட பாம்பு ஒன்றுமே

கிடுக்கிப் பிடியாய்ப் பிடித்ததாம்!

அதிர்ந்து போன குட்டியும்

“”அண்ணா!… விட்டு விடுங்களேன்

இதுபோல் மீண்டும் வரமாட்டேன்”

என்றே கண்ணீர் விட்டதாம்!

“”கெஞ்சுவ தாலே பயனில்லை

கிடைத்த இரையை விடமாட்டேன்

என்னிட மிருந்து தப்பவும்

எளியவன் உன்னால் முடியாது”

என்று சொல்லிய பாம்பிடம்

“”இறைவன் என்னைக் காத்திடுவார்”

என்றதாம் குட்டி. பாம்புமே

ஏளன மாகச் சிரித்ததாம்!

அந்த வேளை பறந்துமே

அங்கே வந்த கருடனும்

அந்தப் பாம்பைப் பற்றியே

ஆகா யத்தில் பறந்ததாம்!

பதறிப் போன பாம்புமே

பற்றிய தவளையை விட்டதாம்!

புதரில் விழுந்த குட்டியும்

குட்டைக் குள்ளே பாய்ந்ததாம்!

வலியார் அடித்தால் எளியாரை

தெய்வம் அடிக்கும் வலியாரை!

உலகோர் சொல்லும் மூதுரையை

உணர்வீர் அன்புக் குழந்தைகளே!

–புலேந்திரன்,சிறுவர் மணி

இதில் மேற்குறிப்பிட்ட உதாரணங்கள் எல்லாம் பார்க்கும்போது தெளிவாக புரியும் ஒரு விஷயம் என்னன்னா நம்மளோட பலம் குறைந்தவர்களை நாம்ப தாக்கனா நமக்கான எதிர் தாக்குதல் நம்மை விட பலம் இருக்கும் நபர் இடம் இருந்து வரும்.

மோகன் தனது சக தோழனை பார்த்து, எனக்கு புரிய வைத்ததற்கு மிகப்பெரிய நன்றி என தெரிவித்து, தன் மனைவியை நோக்கி சென்றான். தன் மனைவியிடம் நடந்த அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்டு, சந்தோசமாக குடும்ப வாழ்க்கையை நடத்தினான்.

கதை கருத்து

இன்று நம்மிடம் பலம், காசு பணம், பதவி இருக்கிறது என்று எண்ணி மற்றவர்களின் மனதை காயப்படுத்தினால், தொல்லைகள் செய்தால் கடவுள் நமக்கு அளிக்கும் தண்டனையில் இருந்து மீள முடியாது. நமது செயல்கள் அத்து மீறும் பொழுது கடவுள் அசுரனை போல் வந்து நம்மை அழித்து விடுவார். இதனை உணர்ந்தால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. இல்லையேல் அழிவுகாலம் அருகில் வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எளியோருக்கு உதவுங்கள் கடவுள் உங்களுக்கு உதவுவார்.

--

--

No responses yet