கதை கேளு ஏழ்மை

Sankar sundaralingam
2 min readFeb 13, 2021

--

அடர்ந்த காடு, அதன் எல்லையில் பத்ரகாளியம்மன் கோவில். அருகில் உள்ள ஊர் மக்களுக்கு இந்த தெய்வம் தான் குலதெய்வம். இந்த தெய்வத்தை வணங்காமல் அந்த ஊர்வாசிகள் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த முனியம்மாள், ஒரு நாள் காட்டு வேலைக்கு செல்லும் போது கோவிலுக்கு சென்று பத்ரகாளி அம்மன் இடம் முறையிடுகிறாள்.

தான் பிறக்கும் போது நல்ல செல்வ வளம் உள்ள குடும்பத்தில் பிறந்து, பின் திருமணமாகி வாழ்ந்து வந்தேன். எனது கணவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் என் குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது. இன்று என் ஊர் வாசிகள் எங்களை ஒதுக்குகிறார்கள். நாங்கள் ஏழை, எங்களின் ஏழ்மை காரணம் காட்டி, எங்கள் சொந்தங்கள் கூட எங்களிடம் பேசுவதில்லை என்று கதறி அழுகிறாள்.

கோவிலில் இருந்து ஒரு மூதாட்டி, முனியம்மாளை பார்த்து அழுகாதே. ஏழ்மை என்பது இயலாமை அல்ல. நம் மனித சமுதாயம் நமக்கு அமைத்த மாய சூழ்ச்சி. இவ்வுலகில் உள்ள எந்த ஜீவராசிகளும் ஏழை, பணக்காரன் என்று தங்களுக்குள் பிரித்துக் கொள்வதில்லை. அளவுக்கதிகமாக சேர்ப்பதில்லை. மனிதன் மட்டும்தான் இப்படி செய்கிறான்.

நமக்கு பிடிக்கிறதோ, இல்லையோ இந்த மாயவலையில் இருந்து நாம் கட்டாயம் மீள வேண்டும்.

ஏழ்மைக்கு நாம் கூறும் அர்த்தமே தவறு. செலவில்லா நிலையை பெரும்பாலும் வழக்கில் கூறப்பட்டு வருகிறது. இச்சொல்லுக்கு “துய்க்க முடியாத நிலை” என்று பொருள். இதன் அர்த்தம் அனைத்து செல்வங்களும் இருக்கின்றன, ஆனால் அவற்றை அனுபவிக்க முடியாத நிலையே ஏழ்மை என்று குறிப்பிடுகின்றது.

நீ உன் சுற்றத்தார்களை பற்றி கவலை அடைய வேண்டாம். பணம், பொருளைப் பார்த்து பழகுபவர்கள் உனக்கு தேவை இல்லை. இந்த பத்ரகாளியம்மன் உனக்கு இந்த சூழ்நிலையை வழங்கியது, நல்ல மனிதர்களை அடையாளம் காண கூட இருக்கலாம். அதனால் இந்த நிலையை எண்ணி வருந்தாமல் அடுத்த நிலையை நோக்கி பயணி. அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.

நீ ஏழையாக பிறந்தது தவறில்லை, எழ்மையாய் இறப்பதே தவறு. இந்த மனிதன் உருவாக்கிய மாயை சூழ்ச்சியான ஏழ்மை என்ற நோய் அகல வேண்டும் எனில், உழைப்பு என்ற மருந்தை உட்கொண்டு அதை அகற்றவேண்டும்.

மூதாட்டியின் பேச்சை கேட்ட முனியம்மாள் முகம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மூதாட்டியை வணங்கி கோவிலில் இருந்து வேலைக்கு கிளம்பினாள். அயராது உழைக்க தொடங்கினால், பின்னாளில் மனிதன் உருவாக்கிய மாயை சூழ்ச்சியான ஏழ்மை நிலை அவளிடம் இல்லை.

கதை கருத்து:

ஏழ்மை என்ற நோய் காற்றில் இன்றே பறந்திட, உழைப்பு என்ற மருந்தைக் கொண்டு, இந்த சமூகம் ஏழ்மை நோயை ஒன்று கூடி ஒழிக்க வேண்டும். ஏழ்மை என்று எவரையும் ஒதுக்காதீர்கள். இது நம்மால் உருவாக்கப்பட்ட சூழ்ச்சி முடிச்சு, இதை நாம் தான் அவிழ்க்க வேண்டும்.

இருப்பதை வைத்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றவனே, சாதிக்கும் வல்லமை கொண்டவன்.

ஏழ்மையை ஒழிப்போம்!!!

ஏழ்மை ஒழியும் நாளை ஆவலுடன் நோக்கி!!!

நன்றி!!

வணக்கம்!!!

--

--

No responses yet