கதை கேளு — ஒற்றுமையே பலம்
கல்லூரி மாணவர்களின் பொதுக்கூட்டம். வருகின்ற தேசிய அளவு கல்லூரிகள் போட்டியில் பங்கேற்பது குறித்தும், எப்படி இந்த வருட விருதை நமது கல்லூரி வாங்க வேண்டும் மற்றும் அதற்கு நம் அனைவரின் பங்கு என்ன என்பதைப் பற்றி கூறி விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லத் தொடங்கினர். இதில் யார் பெரிய ஆள்? அதிக செல்வாக்கு யாருக்கு? என ஏராளமான பேச்சுக்கள் மற்றும் வாதங்கள். அங்கு வந்த முதல்வர் அனைத்து மாணவர்களும் அமைதி காக்க சொன்னார்.
இங்கு நான் எவர் மீதும் தவறு, யார் என்ன சொன்னார்கள் என கேட்க போவதில்லை. உங்கள் தவறுகளை நீங்கள் தான் அறிய வேண்டும். அடுத்தவர்கள் சுட்டிக்காட்ட தேவையில்லை. ஒற்றுமை மிக அவசியம்.
பாரதி சொன்னதை நினைவில் கொள்….
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவருக்கும் தாழ்வே….
நாம் ஒரு கல்லை எடுத்து நாயைப் பார்த்து எறிந்தால், பலம் வாய்ந்த நாய் கூட பயந்து ஓடி விடும். ஆனால் தேன் கூட்டின் மீது எறிந்தால் தேனீக்களுக்கு பயந்து நாம் தான் ஓடவேண்டும் . பலம் வாய்ந்த நாயை விட பலம் குன்றிய சிறிய தேனீக்கள் நம்மை ஓட வைப்பதற்கு காரணம் அதன் ஒற்றுமை. யாராக இருந்தாலும் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
காகம் தன் இனத்திற்கு ஆபத்து என்றால், நொடிப்பொழுதில் கூடிக் கரையும். ஒற்றுமை ஐந்தறிவு படைத்த காகத்திடம் இருக்கும்போது. ஆறறிவு படைத்த நம்மிடம் ஏன் இருக்காது?
எண்களின் ஒற்றுமைதான் கணிதம்
மழை துளிகளின் ஒற்றுமைதான் ஏரி குளம்
மரங்களின் ஒற்றுமைதான் காடு
எழுத்தின் ஒற்றுமைதான் வார்த்தைகள்
ஆறுகளின் ஒற்றுமைதான் பெருங்கடல்
பாறைகள் ஒற்றுமைதான் பெருமலை
படைகளின் ஒற்றுமைதான் வெற்றி
குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை தான் குடும்பம்
இதை புரிந்து கொண்டு ஒற்றுமையாய் இருங்கள். உங்களுக்கு அடித்துக்கொண்டு அடுத்தவர்களுக்கு வெற்றி வாய்ப்பை தந்துவிடாதீர்கள்.
இதை அறிவுப்பூர்வமாகவும் மற்றும் முழு மனதுடனும் புரிந்து கொண்ட மாணவர்கள். ஒன்றாக சேர்ந்து, கூட்டு முயற்சி செய்து சிறந்த கல்லூரிக்கான விருதை தட்டிச் சென்றனர்.
கதை கருத்து:
இந்த உலகில் வாழும் காலம் சிறிது. இதில் நீ பெரியவன், நான் பெரியவன் என அடித்துக் கொள்ளாமல். விட்டுக் கொடுத்து வாழும் வரை ஒற்றுமையாக வாழ்வோம்.
ஒற்றுமையாக இருந்தால்தான் நம் பலத்தை நம் எதிரிக்கு காட்ட முடியும் . ஒற்றுமை காலத்தின் தேவை புரிந்து செயல்படுங்கள்.