கதை கேளு — ஓட்டம்
மனைவி தன் கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு கணவனின் பெற்றோர் ஊருக்கு போகிறாள். அவள் தன் மாமனார், மாமியாரிடம் கூறுகிறாள், என் கணவர் ( உங்கள் பிள்ளை ) பணம், பணம் என தினமும் பணத்திற்கு பின்னால் ஓடுகிறார். அவருக்கு குடும்பத்தின் மீது அக்கறை இல்லை. இவருடன் நான் எப்படி என் குழந்தைகளுடன் வாழ முடியும். நான் ஏற்கனவே பல தியாகங்களை செய்துவிட்டேன் இவருக்காக. கேட்டால் அவர் கூறுவது எங்களுக்காகத்தான் இவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று, நாங்கள் விரும்புவது இவருடன் வாழதான், பணத்துடன் இல்லை. தயவு செய்து அவருக்கு புத்திமதி கூறுங்கள்.
அவனது பெற்றோர்கள் தொலைபேசியில் அழைத்து, மகனை ஊருக்கு வரச் சொன்னார்கள், அதற்கு அவன் அம்மா! என்னால் அடுத்த ஒரு வாரத்திற்கு வரமுடியாது. ஏனென்றால் எனக்கு நிறைய அலுவலக வேலைகள் இருக்கு, வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டியது இருக்கு, இதை நான் விட்டுவிட்டு வந்தால் நமக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும். ஆதலால் நான் 10 நாட்கள் கழித்து வருகிறேன் என்று கூறினான் .
பத்து நாட்கள் கழித்து அவன் தனது ஊருக்கு வந்தான். வந்தவன் அவனது குழந்தையையும், மனைவியும் தேடினான், ஆனால் அவர்கள் வீட்டில் இல்லை. தன் பெற்றோர்களை பார்த்து அவர்கள் எங்கே என கேட்டான்?
அதற்கு அவனின் தந்தை உன் மனைவிக்கு உடம்பு சரியில்லை. அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். பார்த்துக் கொள்வதற்காக உன் மகன் அங்கு உள்ளான் என்று கூறினார்.
உடனே அவனுக்கு கோபம் அதிகமாயிற்று, தன் பெற்றோர்களை ஆச்சா, போச்சா என்று கத்தினான்.ஏன் இதை நீங்கள் என்னிடம் கூறவில்லை? கூறியிருந்தால் நான் உடனே வந்திருப்பேனே. அவர்களை பத்திரமாக பார்த்திருப்பேன் என்றான் .
அதற்கு அவனது தாய் உனக்கு அலுவலக வேலை இருக்கு, வாடிக்கையாளர்கள் பார்க்க வேண்டியது இருக்கு, இல்லை என்றால் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்று சொன்னது நீதானே . உனக்கு குடும்பத்தை விட பணம் முக்கியம் அதனால் தான் உன்னை நாங்கள் தொந்தரவு செய்யவில்லை.
அப்படி ஒன்றும் இல்லை, நான் அயராது ஓடி உழைப்பது உங்களுக்காகத்தான் .
நீங்கள் இல்லை என்றால் என் வாழ்க்கை ஏது?
இதை ஒளிந்து கேட்டுக் கொண்டிருந்த அவனது மனைவி கண்ணீருடன் வீட்டில் ஒரு அறையில் இருந்து வெளியே வந்தாள். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்? உங்களது ஓட்டம் பணத்திற்காக அல்ல, எங்களுக்காக, எங்களின் வாழ்க்கைக்காக என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அவனது தந்தை, நல்லது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும். நான் என் மருமகளுக்கு சொல்வது என்னவென்றால், வீட்டிலுள்ள கடிகாரம் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த கடிகாரத்தை பார் அது ஓடவில்லை என்றால் நீ என்ன செய்வாய்? அதை தூக்கி எறிந்து விடுவாய் அல்லவா! அதுபோலத்தான் மனிதர்களும் நாம் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஓட வேண்டும் இல்லை என்றால் நம்மை இந்த சமூகத்திலிருந்து தூக்கி எறிந்து விடுவார்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதன் ஓட்ட த்திற்கான காரணங்கள் வேற இருக்கலாம். புலி,சிங்கம் வேட்டையாடி உண்பதற்காக ஓடுகிறது. ஓடாமல் வேட்டையாட முடியாது . ஆடு, மாடு, மான்கள் ஓடி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறது , ஓடாமல் இருந்தால் அதன் உயிர் போயிடும் .
மகனை பார்த்து, மகனே ஓடும் வயதில் நன்றாக ஓடு. ஆனால் கிடைக்காத ஒன்றை தேடி, கிடைக்கும் ஒன்றை விடுத்து ஓடாதே. கிடைக்காதது மகிமை, கிடைத்தது சிறுமை என்று கருத்தாதே
பணம் மட்டும் வாழ்க்கை அல்ல. பணத்திற்காக மட்டும் ஓடாதே வாழ்க்கைக்காக ஓடு, ஓட்டம் பந்தய ஓட்டம் ஆக இருக்க வேண்டியதில்லை. வளர்ச்சி , புதுமை , மாற்றத்திற்க்கான ஓட்டமாக இருக்கட்டும்.
புரிந்தது அப்பா, இனி நான் என் ஓட்டத்தில் குடும்ப அக்கறையையும் சேர்த்துக் கொள்வேன்.
கதை கருத்து:
ஆடுகிற ஆட்டமும் , ஓடுகிற ஓட்டமும் ஒருநாள் ஓயும் , அப்போது கூடுகின்ற கூட்டம் தன சொல்லும் நீ யாரென்று — பட்டினத்தார்
உன் உடலில் குருதி ஓட்டம்,உயிரோட்டம் உள்ளவரை ஓடு , ஓட்டத்திற்கான காரணம் பணமாக இருக்கக் கூடாது, அது மற்றவர்களுக்கு பலனாக இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் ஓட்டம் மட்டுமே அவசியம் கிடையாது அப்பொழுதும் ஓய்வும் அவசியம். உங்கள் உடைகளையும் மட்டும் பார்த்துக் கொண்டால் போதாது உடல் மற்றும் ஆரோக்கியத்தையும் சற்று பார்த்துக்கொள்ளுங்கள்.
ஓடிக் கொண்டேயிரு நல்லவைக்காக!!!