கதை கேளு-கனவு மெய்ப்பட வேண்டும்
பள்ளிக்கூட வகுப்பில் மாணவர்களுக்கு தமிழாசிரியர் பாரதியின் “மனதில் உறுதி வேண்டும்” என்ற பாடலை பயிற்றுவித்து கொண்டிருந்தார். அப்போது இரு மாணவர்களுக்கு இடையே உரையாடல். என்ன உரையாடல் தெரியுமா?
கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் என்ன ? என ஒரு மாணவன் மற்றொரு மாணவனிடம் கேட்க, அதற்கு சக மாணவன் பதிலளிக்கிறான் “கனவு மெய்ப்பட வேண்டும்” என்பது நாம் நினைப்பவகளை அடைவது, எதற்கு ஆசைப்படுகிறோமோ அது கிடைக்க வேண்டும். இதுதான் கனவு மெய்ப்பட வேண்டும். இதை கவனித்துக் கொண்டிருந்த தமிழாசிரியர், அவர்கள் இருவரையும் அழைத்து உங்களின் விவாதம் அருமையாக இருக்கிறது. அதை நாம் வகுப்பிலேயே விவாதிக்கலாம் என கூறி, அனைத்து மாணவர்களிடம் கனவு என்றால் என்ன? எனக் கேட்டார்.
அதற்கு அனைத்து மாணவர்களும் ஒரே பதிலாக நாம் தூங்கும்போது வருவதே கனவு என பதிலளித்தனர்
பதிலை கேட்ட ஆசிரியர் சிரித்துக்கொண்டே! கனவு என்பது தூங்கும் போது வருவவது அல்ல. அப்துல் கலாம் அய்யா சொன்னது போல “கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு” என பதிலளித்தார்.
மாணவர்கள் : கனவை எப்படி நிஜம் ஆக்குவது. ஆசைக்கும் கனவுக்கும் என்ன வித்தியாசம்?
உங்கள் கனவுகளை செயல்படுத்த நீங்கள் திட்டமிட வேண்டும். அதை சுமந்து செல்லுங்கள், தன்னம்பிக்கையோடு மெய்ப்பட வேண்டும் என்று. முயற்சியை கைவிடாதீர்கள். முயற்சியும், பயிற்சியும் வெற்றியை உங்கள் முன் நிறுத்தும்.
ஆசை என்பது நமக்கு என்ன கிடைக்க வேண்டுமென என எதிர்பார்ப்பது. கனவு என்பது நாம் எதை, எந்த இலக்கை அடைய வேண்டுமென நினைப்பது.
மாணவர்கள்: எதை பற்றி கனவு காண வேண்டும்?
ஆசிரியர்: எதைப்பற்றி வேண்டுமானாலும் கனவு காணுங்கள். உங்கள் கனவுகளை எல்லோரைப் போலவும் சுயநலமாக காண வேண்டாம். நான் இங்கு சுயநலம் என்று கூறுவது வேலை வாங்குவது, வீடு கட்டுவது, பணம் சம்பாதிப்பது, இயந்திர வாழ்க்கை வாழ்வது. சற்று பொதுநலமாக கனவு காணுங்கள். நம்மால் நம் சமுதாயத்தில் என்ன மாற்ற முடியும்? என்ன அழுத்தத்தைக் கொடுக்க முடியும்? என கனவு கண்டு, அதை துரிதமாக செயல்படுத்துங்கள். ஒருபோதும் உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நிற்போம். என மாணவர்களுக்கு கனவைப் பற்றி விளக்கிக் கூறி அன்றைய வகுப்பை முடித்துக்கொண்டு ஆசிரியர் விடைபெற்றார்.
கதை கருத்து:
நமது செயலே, நமது அடையாளம்.
கனவுகள் சில ஆண்டுகள் கடந்தோடி நிறைவேறும்!
சில கனவுகள் நினைத்த உடனே நிறைவேறும்!
சில கனவுகள் உழைப்பால் மட்டுமே நிறைவேறும்!
சில கனவுகள் நிராசையாக போகலாம்!
ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் கனவு மெய்ப்படும். நம்பிக்கையுடன் பயணியுங்கள்.
பாரதி சொன்னது போல கனவு மெய்ப்பட தான் வேண்டும், நற் சிந்தனைகள், நல்ல எண்ணங்கள் நம்மிடம் இருக்கும் போது.
நன்றி!!!
வணக்கம்!!!