கதை கேளு — கருணை

Sankar sundaralingam
3 min readJul 17, 2021

--

காட்டில் பசு, காளை மாடு, இரண்டு கன்று குட்டிகள் என குடும்பத்தோடு வாழ்ந்து வந்தது. அதில் ஒரு கன்றுக் குட்டிக்கு கால்களில் சற்று ஊனம். அதனால் வேகமாக ஓட இயலாது. அதே காட்டில் புலி ஒன்று அதன் குட்டியோடு வாழ்ந்து வந்தது. அந்த புலி குட்டிக்கு மாமிசத்தை வேட்டையாடி உண்ண பழகிக் கொடுக்க வேண்டும் என அந்த புலி எண்ணியது. அதனால் இளம் கன்று குட்டியை வேட்டையாடினால் அதன் இறைச்சி ஜீரணமாகும் மற்றும் புலி குட்டி பழகிக் கொள்ளும் என நினைத்தது தாய் புலி. கன்று குட்டிக்காக காத்திருந்தது. பசுவின் குடும்பம் புல் மேய்ந்து கொண்டிருந்தது, புலி அவைகளை தாக்க முயன்றது . பசு, காளை மாடு , ஒரு கன்றுக்குட்டி தப்பித்து ஓடியது. மாற்றுத்திறனாளி கன்று குட்டி புலியிடம் மாட்டிக் கொண்டது, அதனால் வேகமாக ஓட இயலவில்லை . அதனை வேட்டையாடியது, தனது புலிக்குட்டிக்கு இந்த இறைச்சியை கொண்டு கொடுத்தது.

காளை மாட்டிற்கு மிகுந்த கோபம். ஒரு மாற்றுதிறனாளி கன்று குட்டியின் மேல் ஏன் இந்தபுலிக்கு சற்று கூட இரக்கம் இல்லை. நீ வேட்டையாடி உணவு உள்ள நாங்கள் உள்ளோம். ஏன் மாற்றுதிறனாளி கன்றுவை கொன்று உன் பசியை ஆற்றுகிறாய். மிகப்பெரிய கோபம், நேரம் வரும் போது உன்னை நான் பழிவாங்காமல் விடமாட்டேன் என்று காளைமாடு சபதம் செய்தது. அதற்க்கு மற்றொரு கன்றும் சம்மதித்தது . பசு மாடு சோகத்தில் அமைதி காத்தது .

சில நாட்கள் கழித்து இந்த புலிக்குட்டி விளையாடிக்கொண்டு காளை மாடு, பசுமாடு இருக்குமிடம் இடத்திற்கு அருகாமையில் வந்தது. அங்கு ஒரு புதருக்குள் மாட்டிக்கொண்டது, அந்த சத்தத்தை கேட்டு புலி வருவதற்குள் அங்கு காளை மாடும், பசுமாடும் சென்றது. புலிக்கோ பயம் காளை மாடு தனது குட்டியை கொன்று விடும் என்று. அப்படி கொன்றால் அவர்கள் அனைவரையும் அளித்தது விட வேண்டும். காளை மாடு தன் கொம்புகளால் முட்டி புலிக்குட்டியை கொல்ல முயற்சித்தது, பசுமாடு தடுத்தது, காளை மாட்டுக்கும், அதன் கன்றுக்கும் பசு மாட்டின் மீது கோவம். பசு மாடு அதை பொருட்படுத்தாமல் புலிக்குட்டியை புதருக்குள் இருந்து மீட்டது. அதன் காயத்திற்கு மருந்து கொடுத்து, அதற்க்கு குடிக்க தண்ணீர் கொடுத்தது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து விடை பெறலாம் என நினைத்த புலிக்குட்டியிடம் பசு மாடு கூறியது, சற்று பொறு உன் தாய் வந்து உன்னை அழைத்து செல்லட்டும் இல்லை என்றால் நீ போகும் வழியில் என்னை நரிகள் வேட்டையாடிவிடும் .

காளை மாடு, பசு மாடுவை பார்த்து கோபமாக முறைத்து கொண்டிருந்தது. கன்று குட்டி பசு மாட்டை பார்த்து கேட்டது உனக்கு கொஞ்சும் கூட உன் இறந்த கன்று மீது பாசமில்லையா என்று ?

பசு கூறியது ,ஏன் இல்லை . இருப்பதினால் தான் இந்த புலிக்குட்டி மீது கருணை உள்ளது. கருணை உள்ளம் கடவுள் இல்லம். இதன் தாய் செய்த குற்றத்திற்காக இதை பழிவாங்கினால் இதன் தாய் நம்மை அனைவரையும் கொன்று விடும். நாளை பெரிய புலியாக இந்த குட்டிக்கூட நம்மை தாக்கலாம் . அனைவரிடமும் பாகுபாடில்லாமல் கருணையோடு இருக்க வேண்டும் . கருணைதான் கடவுளாக்குகிறது அனைத்து ஜீவராசிகளையும்.

இதை கவனித்துக் கொண்டிருந்த புலி, காளை மாடு, பசுமாடு, கன்று குட்டியின் முன் சென்று மண்டியிட்டு மன்னிப்பு கோரியது. நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். மாற்றுத்திறனாளியான கன்று குட்டியின் மேல் நான் இரக்கம் காட்டி இருக்க வேண்டும். காட்டத் தவறி விட்டேன் என்னை தயவு செய்து மன்னியுங்கள். நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன் இனி வேட்டையாடும் பொது குட்டிகளை வேட்டையாடி கொல்ல மாட்டேன். கருணை கல்நெஞ்சையும் கரைக்கும் என்பதை உணர்த்திவிட்டீர்கள். இது ஒரு ஞானம்.

கருணை என்பது ஒரு மொழி , அதை குருடர்களும் பார்க்க முடியும் , செவிடர்களும் கேட்க முடியும் என்பதை உணர்த்திவிட்டீர்கள் தாயே என்று பசுவை புலிக்குட்டி வணங்கி சென்றது.

கதை கருத்து :

கருணையை விட மிகப்பெரிய ஞானம் இந்த உலகத்தில் உண்டா? என்று தத்துவ மேதை ரூஷோ கேட்டுள்ளார். அவர் கூறுவது , கருணை என்பது ஒரு ஞானம். அது தியானத்தாலும், யோகத்தாலும் கிடைப்பதில்லை. அன்பு செய்வதால் மட்டுமே கிடைக்கிறது. சகல உயிரினங்களையும் நேசிக்க தெரிந்த மன பக்குவத்தால் கிடைப்பது. அழும் குழந்தையை தூக்க தாய்மை உள்ளம் வாய்க்கப்பெற்றவர்களுக்கு கிடைப்பது. அப்படிப்பட்ட ஞானம் பெற்றவர்கள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அதிகம் அறியப்படுவதில்லை, புகழ், வெளிச்சம் கொஞ்சம் கூட தங்கள் மேல் படாமல் ஏதோ ஒரு மூலையில் சத்தம் இல்லாமல் இந்த சமூகத்திற்கு தங்களால் முடிந்த சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த கதை அவர்களுக்கு சமர்ப்பணம் .

வெ. இறையன்பு கூறியது போல கருணை என்பது கண்களில் இருந்து ஊறுகின்ற உணர்வு அல்ல. அது இதயத்தில் இருந்து கசிய வேண்டும்.

காந்தியை போல் இருக்க வேண்டாம், கருணைமனம் கொண்டிருந்தாலே போதும் உன் புகழ் என்றும் பாடும் இவ்வுலகில். கருணை உள்ள உள்ளம் கடவுளின் அருள் சேர்க்கும்!

--

--

No responses yet