கதை கேளு- கவனம்

Sankar sundaralingam
2 min readMay 21, 2022

--

சரவணனுக்கும் அவனது தந்தைக்கும் வாக்குவாதம், வாக்குவாதம் முத்தி சரவணன் கோபித்து கொண்டு பணிக்கு சென்றான். பணி நேரம் முடிவடைந்தவுடன் சக ஊழியர்கள் விடை பெற்று கொண்டிருந்தனர். சரவணன் மட்டும் புறப்படாமல் பணி செய்து கொண்டிருந்தான். அவனது அலுவலக தோழி சரவணனிடம் சென்று என்ன ஏதாவது அவசர வேலையா? இன்னும் வீட்டிற்கு புறப்படவில்லை என கேட்டாள். அதற்க்கு சரவணன், ஏன் வீட்டிற்கு செல்ல என தெரியாம உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.

தோழி சற்று குழம்பி போய், என்னப்பா பிரச்சனை சரவணா ?

பிரியா, என் பிரச்சனையெல்லாம் என் பெற்றோர்கள். எதற்கெடுத்தாலும் கவனம், கவனமென ஒரே ஒப்பாரி. நான் சொந்த தொழில் செய்ய போறேன் என்றால் கவனமாக யோசித்து செய் என்கிறார்கள்.நான் என்ன சின்ன பையனா? எனக்கு விவரம் தெரியாதா?

சரவணா உன் பெற்றோர்கள் மட்டுமல்ல அனைத்து பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு சொல்லுவது கவனம். கவனம் என்பது கண் போன்றது. கண் மூடி வண்டி ஓட்டினால் எப்படி பெரிய விபத்தில் சிக்குவோமோ, அதே போல தான் கவனம் இல்லாமல் செய்யும் செயல்களும்.

நீயும் ஆரம்பித்து விட்டாயா ?

எதிலும் கவனம், எங்கும் கவனம், எப்பொழுதும் கவனம், எதற்கெடுத்தாலும் கவனம். கவனம் குறைந்தால் குடி மூழ்கிவிடுமா?

அப்படி நினைக்காதே.

கவனம் கொள்ளக்கூடிய விஷயங்கள் மற்றும் அதன் பலன்களை தெரிந்து கொள்.

-சுவாச கவனம் ஆயுளை தரும்.

-வார்த்தை கவனம் உறவுகளை இணைக்கும்.

-செயல் கவனம் நிதானத்தை தரும்.

-எண்ணங்களின் கவனம் நல் வாழ்வை தரும்.

-நடத்தை கவனம் மரியாதையை தரும்.

-உடல் / உணவு கவனம் ஆரோக்கியத்தை தரும்.

-மன கவனம் நிம்மதியை தரும்.

- கற்றல் கவனம் சிறந்த கல்வியை தரும்

கவனம் சிதறாமல் பார்த்து கொள்ள வேண்டும். கவனம் இங்கெல்லாம் அதிகம் தேவை. கவனம் சிதறாமல் உன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் .

சாலை விபத்தை தவிர்க்க கவனித்து செல்.

வார்த்தை விபத்தை தவிர்க்க கவனித்து பேசு.

வாழ்க்கை விபத்தை தவிர்க்க கவனித்து முன்னேறு.

கவனமான அணுகுமுறை வாழ்க்கைக்கு அவசியம். வேண்டிய விஷயங்களில் மட்டும் கவனம் தேவை.

கவனக்குறைவால் இவ்வளவு பாதிப்பா! இதெல்லாம் எனக்கு தெரியாதே?

ஆம் என் பெற்றோர்கள் சொல்வது சரி. அவர்கள் தொழில் தொடங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கவனமாக செய் என்று தான் கூறுகிறார்கள்.

தெரியும் சரவணா, உன் பெற்றோர்கள் உனக்கு சொல்லி சொல்லி கற்று கொடுக்கிறார்கள். நீ வாழ்க்கையில் தடுமாறிட கூடாதென்று.

ஆம், பிரியா நான் தான் புரிந்து கொள்ளவில்லை. நான் வீட்டிற்க்கு சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். நீயும் கிளம்பு, இருட்டாகிவிட்டது கவனமாக செல் .

கதை கருத்து :

கவனம் செலுத்துவது ஒன்றே மன அமைதிக்கு சிறந்த வழி. அலைபாயும் மனதை முழு கவனம் செலுத்தினால் கட்டுப்படுத்தி வந்து விடலாம்.

மேடு, பள்ளங்களை கடக்கும் போது கவனத்துடன் செல்கின்றோமே, அது போல வாழ்க்கை ஏற்ற, தாழ்வுகளை கடக்கும் போது கவனத்துடன் செல்லவேண்டும்.

அவரவர் வேலையில் கவனம் செலுத்தினால் சாதனைகள் அடையாளம். உலகம் உன்னை கவனிக்கிறது. கவனமாக கையாளும் ஆயுதம் வார்த்தைகள்.கவனம் கொள்.

--

--

No responses yet