கதை கேளு — சக்தி கொடு

Sankar sundaralingam
2 min readMay 7, 2022

--

சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து விட்டது. கிராம மக்களுக்கு பெரிய பயம் சிறுத்தை தங்களையோ அல்லது தங்கள் குடும்பத்தாரையோ தாக்கி விடுமென்று. கிராம மக்கள் ஒன்றாக கூடி சிறுத்தையை பிடிக்க ஒரு கூண்டு கொண்டு வந்து பிடித்து விடலாமென்றும், அதற்கு ஒரு ஆட்டு குட்டி வேண்டுமென்றும் சொன்னார்கள். கூட்டத்திலிருந்த ஒருவர் தான் ஊர் மக்களுக்காக தனது ஆட்டு குட்டியை தருகிறேன் என்று. அவர் சொன்னமாதிரியே ஆட்டு குட்டியை ஊர் மக்களிடம் கொடுத்தார். அந்த ஆட்டு குட்டி கூண்டில் அடைக்கப்பட்டது. அனைவரும் வீட்டிற்கு திரும்பி விட்டனர்.

அந்த ஆட்டு குட்டியின் தாய் கூண்டிற்கு அருகாமையில் வந்து மறைந்து நின்று தனது குட்டியை காப்பாற்ற எண்ணிக்கொண்டிருந்தது. ஊர் மக்கள் திரும்பி சென்றவுடன் கூண்டிற்கு அருகில் வந்து குட்டியை அழைத்தது. ஆட்டு குட்டி சோர்வுடன் எழுந்து தாயை பார்த்து நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? சிறுத்தை உங்களை தாக்கிவிட போகிறது. இங்கிருந்து கிளம்புங்கள். தாய் ஆடு உடனே நீயும் வா போகலாம் என்று கூற, குட்டி ஆடு என்ன விளையாடுகிறீர்களா என்னால் எப்படி இந்த கூண்டிலிருந்து வெளி வர முடியும். என் வாழ்க்கை முடிந்து விட்டது, சிறுத்தை எனக்கு எமன்.

நீ முயற்சி செய்தால் தப்பி விடலாம். குட்டி ஆடு தாயே கூண்டை விட்டு தப்பிப்பதற்க்கு என்னிடம் மந்திர சக்தி எதுவும் கிடையாது. தயவு செய்து நேரத்தை கழிக்காமல் தங்கள் உயிரையாவது காப்பாற்றி கொள்ளுங்கள்.

இல்லை ஒருபோதும் நீ இல்லாமல் நான் போக மாட்டேன். சக்திக்கு மந்திரம் தேவையில்லை. மனமிருந்தால் போதும் எதையும் எதிர்கொள்ளலாம். துன்பம் வேண்டாம் என்று கூற முடியாது, அதை எதிர்கொள்ளும் சக்தி கொடு மனமே. உன் சக்தி உன் எண்ணத்தில் உள்ளது. மன உறுதியுடன் முயற்சி செய் உன்னால் முடியாதது இல்லை.

சோதனைகளை வெல்ல சக்தி உன்னிடத்தில் தான் உள்ளது, நான் இங்கு உன் துணைக்காக உள்ளேன். எல்லா காலங்களிலும் என் துணை உனக்கு இருக்காது.

ஆட்டு குட்டி ஆர்வமுடன் எழுந்து கூண்டு கம்பியின் வழியாக தப்பிக்க உடம்பை குறுக்கி முயற்சி செய்தது. தலையை கம்பியின் வழியாக வெளிய நீட்டி உடம்பு கொஞ்சம் கொஞ்சமா வலியில் குறுக்கி வெளியே வந்தது. வந்த குட்டியினால் வேகமாக ஓட முடியவில்லை. தாயே எனது எலும்புகள் இரும்பு கம்பியின் வழியாக வந்ததால் முறிவடைந்து விட்டது என்னால் வேகமாக ஓட முடியாது. பார் முதலில் தப்பிக்க முடியாது என்றாய், உனது மன வலிமையால் வெளியே வந்தாய், இப்பொழுது ஓட முடியாது என்கிறாய். உனது சக்தியை குறைத்து எடை போடாதே. முடியும் முயற்சி செய்.

ஆட்டுக்குட்டி மற்றும் தாய் ஆட்டின் பேச்சுக்களை கவனித்து கொண்டிருந்த சிறுத்தை அதனை தாக்காமல் பூரிப்படைந்தது. இந்த நிகழ்வையம், தாக்காத காரணத்தையும் தனது குட்டிகளுக்கு எடுத்துரைத்தது. தான் அந்த கூண்டில் மாட்டியிருந்தால் கூட வெளியேறியிருக்கமாட்டேன், கஷ்டங்களை கண்டு துவங்காமல் அதை எதிர்கொள்ளும் அந்த ஆடுகளை நான் கொல்லாமல் வந்ததிற்கு காரணம் அதன் மனோ சக்தி. அதை மீறி தாக்க முயற்சி செய்திருந்தாலும் தாய் ஆடு கொம்பால் என்னை தாக்கி வீழ்த்தி இருக்கும், தாயின் பாச சக்தி வலிமையானது. உடல் சக்தியை விட மனோ சக்தியுடையவர்களின் பலம் அதிகம்.

கதை கருத்து:

சக்தியை கொடுக்க சொல்லி யாரிடமும் அலைய வேண்டாம். உனது சக்தி உன்னிடம்தான் உள்ளது. உன்னை கீழே தள்ளிவிடுவதில் மற்றவர்களுக்கு சக்தி இருக்குமாயின், விழுந்தாலும் எழுந்து நிற்கும் சக்தி உன்னிடம் இருக்கும் என்பதை மறவாதே.

கஷ்டங்கள், துன்பங்கள், வலிகளை எதிர்கொள்ளும் சக்தியை உன் மனம் உனக்கு வழங்க அதை தயார் செய்.

--

--

No responses yet