Sankar sundaralingam
2 min readJul 5, 2020

*கதை கேளு*
*செல்வம்*

ஒரு கிராமத்தில் 20வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தொழில் மரம் வெட்டுதல். அரசாங்க கெடுபிடிகளால் அவர்கள் மரம் வெட்டும் தொழில் வெகுவாக பாதித்தது. ஒருநாள் அவர்கள் மூவரும் விவாதித்தவாரே தங்களது கோடாரியுடன் காட்டுக்குள் சென்றனர். இனி நாம் என்ன செய்வது , நமது வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிட்டது என பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு பழைய மரம் அவர்கள் கண்ணில் தென்பட்டது , மரத்தில் இலைகள் இல்லை , மரம் முற்றிலும் காய்ந்து கிடந்தது. மரத்தை பார்த்த மூவரும் , இந்த மரம் விறகுக்கு தான் உதவும் , வெட்டி செல்லலாம் என மரத்தை வெட்ட , உடனடியாக இடி மின்னல் இடிக்கத் தொடங்கியது பலத்த மழை வேற, ஒரு வழியாக மரத்தை வெட்டி முடித்தனர் , மரத்தை வெட்டி சாய்த்தவுடன் சாய்ந்த மரத்தில் இருந்து ஒரு தேவதை வெளியே வந்தது . வந்த தேவதை மூவருக்கும் நன்றி தெரிவித்து , நான் நீங்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டேன் , என்னை விடுவித்த உங்களுக்கு நான் கைமாறு செய்ய வேண்டும் , உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் தருகிறேன், கேளுங்கள் என்ன வரம் வேண்டுமென. முதல் நண்பர் எனக்கு வற்றாத சொத்துக்கள் வேண்டும் என கேட்க அந்த தேவதை அவனுக்கு அந்த வரத்தை அருளியது . இரண்டாவது நண்பர் எனக்கு உன்னைப்போல் ஒரு தேவதை மனைவியாக வரவேண்டுமென்று கேட்க, இதற்கு அந்த தேவதை சிரித்துகொண்டே வரத்தை அருளியது. மூன்றாவது நண்பர் எனக்கு நோயற்ற வாழ்க்கை என்றுமே வேண்டும் என கேட்க , மற்ற இரண்டு நண்பர்கள் உடனடியாக சிரிக்க, தேவதை அவ்வளவு தானா என மூன்றாம் நண்பரை பார்த்து கேட்க , அவர் எனக்கு மண்ணோ , பொண்ணோ வேண்டாம் நோயற்ற வாழ்க்கை மட்டும் போதும் என கூறினார். அவர் கேட்ட வரத்தை அளித்து தேவதை அங்கிருந்து மறைந்தது . மற்ற இரண்டு நண்பர்களும் மூன்றாவது நண்பரை பார்த்து நீ பிழைக்க தெரியாதவன் என திட்டி அங்கிருந்து விடை பெற்றனர்.

அவரவர் கேட்ட வரங்கள் படி அனைத்தும் கிடைத்தது , காலங்கள் கடந்த்து . மூவரும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது , செல்வ செழிப்புடன் வாழும் நண்பர் எனக்கு 10 தலைமுறைக்கு மேல் சொத்து இருக்கு ,ஆனால் அதை அனுபவிக்க வாரிசு இல்லை , கூட உள்ளவங்கள நம்ப முடியல , படுத்தா தூக்கம் கூட வரவில்லை, உடம்பும் ஒத்துழைக்க வில்லை என புலம்பி தள்ளினார். இரண்டாவது நண்பர் நீ பரவாயில்லை எனக்கு மனைவி அழகாக அமைந்தால் , ஆனால் நல்ல உபசரிப்பு இல்லை எப்ப பார்த்தாலும் எரிச்சு விழுந்துகிட்டே இருப்பாள், வீட்டுக்கே போரதே கிடையாது என கூறி இருவரும், மூன்றாவது நண்பரை பார்த்து எங்களுக்கே இவ்வளவு பிரச்சினை நீ எப்படி என கேட்க ,மூன்றாவது நண்பர் உடனே என் வாழ்க்கை மிகவும் எளிமையானது , சராசரி வருமானம் , நல்ல அன்பான மனைவி , அறிவு ஆற்றலுடன் குழந்தைகள், நோயற்ற வாழ்வு என வாழ்க்கை நிம்மதியாக போய்கிட்டு இருக்கு என கூற மற்றவர்கள் இருவர் கண்களிலிருந்து கண்ணீர். நீ வரத்தை சரியாக தேர்ந்தெடுத்தாய் . நாங்கள் இருவரும் தான் மண் , பொன் ,பெண் என தவறாக தேர்ந்தெடுத்து . இன்று நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்கிறோம் .

கதையின் உட்கருத்து : செல்வம் என்பது மண்,பெண்,பொன்னில் கிடையாது. சந்தோஷம் , நோயற்ற வாழ்க்கை தான் செல்வம் , ஆதலால் மண்,பெண்,பொன் பின்னால் ஓடாதீர் .

"நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்"

நன்றி,
சங்கர் சுந்தரலிங்கம்

No responses yet