கதை கேளு — ஞாபகம்

Sankar sundaralingam
2 min readMar 19, 2022

--

பஞ்சாயத்து தலைவர் தன் கிராம சாலைகளை பெரிதுபடுத்த வேண்டுமென்று சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரிடம் கூறினார். அதற்கு ஒப்பந்ததாரர் இங்கு சாலைகளில் நிறைய மரங்கள் இருக்கின்றது. இவற்றை அகற்றினால் தான் சாலைகளை விரிவு படுத்த முடியும். என்னை பொறுத்த வரை இவைகள் புராண கால மரங்கள், பேசும் சக்தியுடையது, இவற்றை அகற்ற கூடாது. நாம் சிறு வயதில் இருந்து இவற்றை பார்த்து வருகிறோம். தற்போது நமது சாலைகளை விரிவு படுத்த வேண்டிய அவசியமில்லை, தேவைப்படும் போது வேறு பாதைகளை பார்த்து கொள்ளலாம்.

உடனே பஞ்சாயத்து தலைவர், ஒப்பந்ததாரரை நோக்கி பிழைக்க தெரியாத ஆள் , தங்களுக்கு தங்கள் தொழிலை விரிவு படுத்த தெரியவில்லை என எனக்கு தோன்றுகிறது. ஒப்பந்தத்தை பெற்று கொண்டு இந்த மரங்களை அகற்றி சாலை போடவேண்டிய வேலையை விட்டுவிட்டு எனக்கு உபதேசம் சொல்றீர். மரங்கள் ரொம்ப பழையதாகிவிட்டது வெட்டி விடு, வேண்டுமென்றால் வேற இடத்தில் புது மரங்களை நட்டுக்கிடலாம். ஒப்பந்தக்காரர் இதற்கு வேற ஆள பார்த்திகிடுங்க, எனக்கு சரி வராது என்று கூறி விடைபெற்று கொண்டார்.

இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து அந்த சுற்று வட்டாரமெல்லாம் அதிக கனமழை, எங்கு பார்த்தாலும் வெள்ளம். வெள்ளம் பஞ்சாயத்து தலைவர் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. பஞ்சாயத்து தலைவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார், அவர் சற்று சுதானித்து ஒரு மரத்தை பிடித்து கொண்டார். மெதுவாக மரத்தின் மீது ஏறி அமர முயன்றார். அப்பொழுது வித்யாசமாக யாரோ பேசுவது போல் அவர் காதுக்கு கேட்டது.

பேச்சு குரலை உன்னிப்பாக கவனித்தார், பலா மரம், புளிய மரத்திடம் பேசிக்கொண்டிருந்தது. என்ன தெரியுமா?

மரத்திற்கும் ஞாபக சக்தி உண்டு !

இவன் தான் சில நாட்களுக்கு முன் நம்மை “மரங்கள் ரொம்ப பழையதாகிவிட்டது வெட்டி விடு” என்று கூறினான். ஞாபக படுத்திக்கொள். இன்று எதற்கு நம்மை பிடித்து கொண்டு உயிர் பிழைக்க வருகிறான். பெரிய சாலைகள் இருந்திருந்தால் அவன் இந்த நிமிடத்திற்கு போய் சேர்ந்திருப்பான். அவனை ஒரு குலு குலுக்கு கீழே விழுந்து வெள்ளத்தோடு போகட்டும்.

புளியமரம் , அப்படி செய்ய கூடாது. நல்லா ஞாபக படுத்தி பாரு இவன் சிறு குழந்தையாக இருக்கும் போது நம்மை சுற்றி தான் விளையாடி கொண்டிருந்தான். இவன் குறும்பு தனத்தை நாம் ரசித்திருக்கிறோம். அந்த சிறுவன் வளர்ந்து நம்மை பழைய மரம் என்று வெட்ட நினைத்தாலும், அவனை நாம் அழிக்க நினைக்கக் கூடாது.

மனித வாழ்க்கை பூக்களை போன்றது.

மொட்டாக இருப்பது குழந்தை,

விரிந்து மலர்ந்தால் இளமை,

மலர்ந்தது காய்ந்ததால் முதுமை

எல்லாம் சில காலம் தான், அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும். இந்த விஷயத்தை மறந்து விடுவதால் தான், இங்கு பல பிரச்சனைகள். அவர்கள் செய்த தவறுகளை ஞாபக படுத்தி பார்க்காமல், செய்த நன்மைகளை ஞாபக படுத்தி பாருங்கள். நம் பகைவன் கூட நமக்கு எதாவது வழியில் நன்மை செய்திருப்பான்.

இதை கேட்டு கொண்டிருந்த பஞ்சாயத்து தலைவர் கண்ணிலிருந்து தண்ணீர், மரங்களை கைகூப்பி வணங்கினான். பின் அவன் மரங்களை பார்த்து என்னை மன்னியுங்கள். ஞாபக சக்தி ஒரு சாபம் என கருதினேன், வளர்ந்த பின் முன்னோக்கி செல்ல வேண்டுமென்றும், பழைய விஷயங்களை ஞாபக படுத்த தேவையில்லை என்றும் எண்ணினேன். இன்று அது தவறு என்று உணர்ந்து விட்டேன். ஞாபகம் எவராலும் திருட முடியாத சக்தி. அதை நன்றாக பயன்படுத்தினால் வரம். வெள்ளம் வடிந்த பின் தன் கிராம மரங்களை பொக்கிஷங்களாக அறிவித்து அதற்க்கு வேலி அமைத்து பாதுகாத்தார் பஞ்சாயத்து தலைவர்.

கதை கருத்து:

ஞாபகம் இருமுனை கத்தி, ஒரு முனை வரம் , மறு முனை சாபம். அதை பயன்படுத்தும் மனதை பொறுத்தது. நல்ல விஷயங்களை ஞாபக படுத்தி கொண்டு நகர்ந்தால் வரம். கசப்பு விஷயங்களை ஞாபக படுத்தி தான் வருந்தினாலும் , அடுத்தவர்களை வருத்தினாலும் அது சாபம்.

ஞாபகம் எவராலும் திருட , அழிக்க முடியாத அற்புத சக்தி.

மீண்டும் மீண்டும் ஞாபக படுத்திக்கொள்ள வேண்டிய விஷயம் பிறப்புக்கும் இறப்புக்கும் உள்ள காலம் சில காலம் மட்டுமே, அது நிரந்தரமல்ல. மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் நல்ல ஞாபகங்களை சிறை வைக்காதீர்கள்.

--

--

No responses yet