கதை கேளு- தடைகளைத் தாண்டி

Sankar sundaralingam
2 min readSep 12, 2020

--

அக்கா, தங்கை இருவரும் ஒரு நாள் தனிமையில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் விவாதம் வாழ்க்கையில் தடைகளைத் தாண்டி எப்படி வெல்வது என்று.

அக்கா, தங்கைக்கு எடுத்துரைக்கிறாள், நாம் ஏதாவது செயலில் இறங்கினோம் என்றால் தடை வந்தால் அதை விட்டு விலகிவிட வேண்டும். இல்லையென்றால் நாம் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும். எதையும் நன்கு கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும். இது போட்டி நிறைந்த உலகம், மெதுவாகத்தான் பயணிக்க வேண்டும். நான் பல பேரை பார்த்திருக்கிறேன், தன்னம்பிக்கை, தைரியம் என பேசி தோற்று இருக்கிறார்கள்.

தங்கை: அக்கா நீ சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. எக்காரியமும் தடையில்லாமல் இருக்காது, நாம் தான் சாதுரியமாக செயல்பட்டு தடைகளைத் தகர்த்து தாண்டி முன்னேற வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இப்படி சித்தாந்தம் தான் பேசவேண்டும். “முயற்சி திருவினையாக்கும்” என்ற பழமொழியை மறந்து விட்டாயா?

அக்கா: தங்கை உனக்கு போதிய வயது மற்றும் அனுபவம் கிடையாது. நான் என் அனுபவத்தில் கூறுகிறேன்.

தங்கை: அக்கா ஆமாம் எனக்கு உங்கள் மாதிரி அனுபவம் கிடையாது. ஆனால் தடைகளை, தாண்டி வருவதற்கு தன்னம்பிக்கை நிறைய இருக்கிறது மற்றும் என் மேலான நம்பிக்கையும் இருக்கிறது

நான் உங்களுக்கு புரியும் படியான ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன்.

மழைக்காலங்களில் பறவைகள் பறந்து சென்று இரை தேட முடியாது. அதனால் பயணிக்க இயலாது, அதனால் பறவைகள் கூடுகளில் அடையும். மழை நிற்கும் வரை காத்திருக்கும். இதனால் காலங்கள் வீணாகும். இரை இல்லாமல் பறவைகள் உயிரிழக்க நேரிடும்.

ஆனால் கழுகு மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும். எத்தனை தடைகள் வந்தாலும், தனது இரையின் மேல் கொண்ட கவனத்தை சிதறவிடாமல் தனது இலக்கை நோக்கி பயணித்து வெற்றி அடையும்.

இதுதான் மனிதன் கழுகிடமிருந்து கற்கும் பாடம். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் வேண்டும்.

அக்கா: அப்படியா! என்ன அதிசயம், மற்ற பறவைகள் கூண்டில் அடைகிறது மழைக்காலத்தில், ஆனால் கழுகு தன்னம்பிக்கையுடன் தடைகளை தாண்டி மேகத்தின் மேல் பறக்கிறது. இது ஒரு நல்ல உதாரணம்.

வாழ்க்கையில் கிளியாக இருக்காமல், கழுகாக இருக்கணும்.

கிளி அதிகமாக பேசும் ஆனால் உயர பறக்க முடியாது

கழுகு அமைதியானது, அது வானத்தைத் தொடும் அளவிற்கு செல்லும் சக்தி உண்டு.

தங்கை: ஆமாம் அக்கா, எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதை நாம் கண்டு தாண்டி வர வேண்டும்.

கதை கருத்து : வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் தடை தாண்டி தான் ஓடவேண்டும், தடையைக் கண்டும் என்று ஒதுங்கக் கூடாது. தடைகளைத் தாண்டி தடம் பதிக்க வா. பல தடைகளைத் தாண்டும் போது
மட்டுமே வெற்றி எனும் அறிய பொக்கிஷம் நமக்கு கிட்டும்…!

படித்ததில் பிடித்தது:

“தடைகள் என்றும் தடையல்ல நீயே

தடையாக ஆகாத போது”

--

--

Responses (1)