கதை கேளு — தனிமை

Sankar sundaralingam
2 min readMar 27, 2021

--

“என் இனிய தனிமையே” என்ற பாடலை ராம், சுந்தர் என்ற நண்பர்கள் இருவர் கேட்டுக்கொண்டிருந்தனர். ராம் இந்த பாடலை மீண்டும், மீண்டும் கேட்க, சுந்தர் அவரைப்பார்த்து “தனிமை எப்படி இனிமையாகும்”? நீயும் மீண்டும் மீண்டும் ரசிக்கிறாய். மதன் கார்த்தி தெரியாமல் எழுதி இருப்பார். சித் ஸ்ரீராமும் அதை பாடிவிட்டார். இந்த கொடுமையை நாம் இருவரும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ராம், சுந்தரை நோக்கி நண்பா!! தனிமை சற்று வித்தியாசமானது. நாம் அதை எடுத்துக்கொண்டால் இனிக்கும். மற்றவர்கள் நமக்கு தனிமையை கொடுத்தால் கசக்கும். பல நேரங்களில் நாம் தவிக்கும்போது ஆறுதல் சொல்வது தனிமை. தனிமை கசப்பு கிடையாது.

சுந்தர் நீ என்றாவது தனிமையை தனித்து ரசித்து அனுபவித்து இருக்கிறாயா?

இல்லவே இல்லை!!!

அப்படி என்றால் மூன்று நாட்கள் தொலைபேசி, நண்பர்கள் உறவினர்கள் எதிரிகள் இல்லாமல் உன்னைத் தனிமைப்படுத்தி கொண்டு உன்னை அறிய முற்படு. மூன்று நாட்கள் கழித்து உன்னை நான் சந்திக்கிறேன், உன் அனுபவங்களை கூறு.

மூன்று நாட்களா! மிகக்கடினம். சரி உனக்காக நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.

மூன்று நாட்கள் கடந்தது மீண்டும் ராம், சுந்தர் இருவரும் சந்தித்தனர். சுந்தர், ராமை பார்த்து நண்பரே மிகப்பெரிய நன்றி. என் அனுபவத்தை கூறுகிறேன் கேட்கிறாயா?

சரி சொல்லுங்கள். தனிமை என்பது தவிப்பு அல்ல , அது ஒரு தனித்துவம். எல்லோராலும் கடந்து போக முடியாத மகத்துவம். இது கடவுள் நமக்கு தந்த பரிசு. தனிமையை இனி நான் என்றுமே தனியாக தவிக்க விடமாட்டேன். தனிமையில் தான் நம் பலமும், பலவீனமும் நமக்குத் தெரியும்.

இன்னும் எளிமையாக புரியும்படி கூற வேண்டுமென்றால், தனிமை சாபம் இல்லை. கலையின் மகத்துவத்தை சிற்பி செதுக்கும் போது எவ்வாறு அறிவாரோ அது போன்று தான். தனிமையில் உன் அருமை அறிய முடியும்.

சரியாக சொன்னீர்கள் சுந்தர்.

முயற்சிகளை எடுப்பது நம்மை முன்னேற்றிக் கொள்ள

தவறுகள் நடப்பது நம்மை திருத்திக்கொள்ள

தனிமை கிடைப்பது நம்மை அறிந்து கொள்ள

தனிமையை அதிகம் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களை உங்களுக்கு உணர்த்தும் அற்புத ஆயுதம் அது. நண்பர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் என் இனிய தனிமையே என்ற பாடலை கேட்டு மகிழ்ந்தனர். மதன் கார்த்தி அனுபவித்து தான் எழுதி இருக்கிறார் என்று ஒப்புக் கொண்டார்.

கதை கருத்து:

இந்த கொரோனா காலத்தில் தனித்திரு (தனிமை) தான் மருத்துவம். தனிமை கொடுமை இல்லை, பழகிவிட்டால் அதுபோல ஒரு நிம்மதி இந்த உலகில் எதுவும் இல்லை.

தனியாக இருப்பதை கண்டு கலங்காதே, இனி உன்னை காயப்படுத்த யாருமில்லை என நிம்மதியாக இரு. தனிமை கிடைக்கும் நேரத்தில் அதை நேசி சந்தோஷம் தானாக வரும். தேடவேண்டிய அவசியமில்லை.

அடுத்த தனிமைக்காக ஆவலுடன்.

நன்றி! வணக்கம்!

--

--

No responses yet