கதை கேளு — தன்மானம்

Sankar sundaralingam
2 min readOct 9, 2021

--

கல்லூரிப் படிப்பு முடித்த இளைஞன் ஒருநாள் கண்ணாடி முன் நின்று தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான். அவன் மிகுந்த சோகத்தில் இருந்தான், அவனது சோகம் என்னவென்றால் அவனை அக்கம்பக்கத்து வீட்டார்கள் மதிப்பதில்லை. தனக்கு வேலை இல்லை என்று அவனை அனைவரும் அவமானப்படுத்துகிறார்கள், இதனால் அவன் தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவனது முன் அவனது வடிவில் அவனது மனசாட்சி வந்து நின்றது. அவனைப் பார்த்து எதற்கு இந்த புலம்பல்? உன் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா உனக்கு வேலை கிடைக்கும் என்று?

அதற்கு அவன் எனக்கு சுய மரியாதை போய்விட்டது. தன்மானமே கிடையாது. எனக்கு என் மீது நம்பிக்கை இருந்தாலும் யார் எனக்கு வேலை தருவார்கள் இவர்கள் இப்படி பேசினால் ?

மனசாட்சி அவனுக்கு அலிபாபா நாற்பது திருடர்கள் படத்தின் பாடல் வரியை நினைவு கூறியது.

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்

நம்மை விட்டு அனைத்தும் சென்றாலும் நம்மிடம் இருக்க வேண்டியது தன்மானம் மட்டும் தான். உனது தன்மானத்தை இழந்து விடாதே.

தன்மானம் அல்லது சுயமரியாதை என்பது நம்மை நாம் மதிப்பது, அது பிறரிடம் இருந்து கிடைக்கும் என்பதல்ல. தன்மானம் நமக்கு நாமே கொடுக்கும் மரியாதை.

நீ எவர் கையையும் ஏந்தி நிற்க்கவில்லை. தைரியமாக சொல், பிறர் காலில் விழுந்து கிடந்து இருப்பதைவிட, தன்மானத்துடன் பட்டினியாக இருப்பது மேல்.

வருமானம் இல்லாத வாழ்க்கையை விட, தன்மானம் இல்லாத வாழ்க்கை அவமானம்.

இப்படி நான் கூறினால், அவர்கள் வேலை இல்லாவிட்டாலும் வெட்டி தலைக்கனம் என்கிறார்கள் .

மனசாட்சி : உன்னை மதிக்காதவர்களை நீ மதிக்கத் தேவையில்லை. அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் தலைக்கனம் என்றால், அதற்கு நாம் வைக்கும் பெயர் தன்மானம்.

வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துப் போ, ஆனால் உன்னை மதிக்காதவர்களிடம் இருந்து விலகிக் கொள். உற்றார் உறவினர்களை விட தன்மானம் முதன்மையானது.

வேலைக்கு முயற்சி செய்தும் வேலை கிடைக்காதது உன் தவறு கிடையாது, அது சூழ்நிலை. தவறு செய்யாமல் தன்மானத்தை இழக்கும் படி எவரேனும் உன்னை இழிவுபடுத்தின், துணிவாக எதிர்த்து கேள் தப்பே இல்லை.

அவமானத்தை அரவணைக்காதே,

வெகுமானம் வெகு தொலைவு வராது,

தன்மான திமிர் நம் அடையாளம்!

அதை அடகு வைக்காதே!

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம், ஆனால் தன்மானத்தை இழக்கக்கூடாது.

உனக்கு நீ முதலில் மரியாதை கொடுத்தால் தான் , மற்றவர்கள் உனக்கு கொடுப்பார்கள். சுய மரியாதை பிறர் கொடுப்பதில்லை . தைரியமாக இரு, உன் தைரிய தன்மானம் தான் உனக்கு நல்ல எதிர்காலத்தை தரும்.

தனது மனசாட்சியின் அறிவுரையை கேட்டபின் இளைஞனின் மனம் உறுதியாகியது. தன்மான திமிருடன் அவனது தன்னடக்கமும் ஓங்கி நின்றது.

கதை கருத்து:

அன்புக்கு அடிபணி! தன்மானத்திற்கு தலை நிமிர்!

இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தனக்கான தன்மானத்தை ஒருபொழுதும் இழக்க தயாராக இல்லை. யாருடைய தன்மானத்திலும் தலையிடாதீர்கள், உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.

தன்மானம் சுயமரியாதை என்று வாழ்ந்தால் மனம் நிறைந்து இருக்கும். பணம் நிறைந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.

நமக்கான தன்மான திமிர் பயணம் தொடரட்டும்………..

--

--

No responses yet