கதை கேளு!

கதை கேளு -தவறை உணர்ந்தால்

Sankar sundaralingam

--

ஒரு கிராமத்தில் வசித்து வந்த இரு சகோதரர்கள் துரதிஸ்டவசமாக விபத்தின் காரணமாக இறக்க நேரிட்டது. சகோதரர்கள் எமலோகத்தில் பாவ கணக்கிற்காக காத்திருந்தார்கள். எமதர்மராஜா ஒவ்வொருவரின் கணக்காக பார்த்து, கடைசியில் சகோதரர்களின் கணக்கை பார்ப்பதற்கு அருகில் அழைத்து, இளைய சகோதரரின் பாவம் கணக்கை சரி பார்த்து அவனை சொர்க்கலோகம் அனுப்ப ஆணையிடுகிறார். மற்றொரு சகோதரன் கணக்கை பார்த்து சிரித்துவிட்டு அவனை நரகலோகம் அனுப்ப ஆணையிடுகிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத அண்ணன், இதை ஏற்க மறுக்கிறான்.

இது என்ன நியாயம்?

எமதர்மராஜா என் சகோதரனை சொர்க்கலோகம் அனுப்பி வைத்து என்னை நரகலோகம் அனுப்புகிறீர்கள்! ஏன் இந்த பாகுபாடு?

எமதர்மர்: என்ன பாகுபாடா? நீ எந்த வகையில் கூறுகிறாய் மானிடா?

அண்ணன்: எமதர்மராஜா, நாங்கள் இருவரும் ஒரே தாய் வயிற்றில் பிறந்து, ஒன்றாக வளர்ந்தோம். அனைத்து நல்ல மற்றும் கெட்ட காரியங்களை இணைந்தே செய்தோம். நாங்கள் சாவில் கூட ஒன்றாகத்தான் இறந்தோம் .

எமதர்மர்: நீங்கள் செய்த கெட்ட விஷயங்கள் என்ன? அதை ஏன் செய்தீர்கள்?

அண்ணன்: எமதர்மராஜா, நான் செய்த கெட்ட விஷயங்கள் அனைத்தும் தம்பியுடன் இணைந்தே செய்தேன். அனைத்து காரியங்களுகாண காரணங்களை விளக்கி கூறினான்.

உடனே எமதர்மராஜா சரி, இதெல்லாம் தவறு தானே? பின் ஏன் அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி, அவர்களின் சொத்துக்களை அபகரித்து, பிடுங்கி பணம் பறித்திருக்கிறாய்!

ஐயா, இது போட்டி நிறைந்த உலகம், பொறாமைகள் அதிகம். வாய்ப்பு வரும்போது ஏறி மிதித்து செல்ல வேண்டும், இல்லையெனில் உங்களை அழித்து விடுவார்கள். பண விஷயத்தில் பாவ புண்ணியம் பார்க்கக் கூடாது. இது தொழில் தர்மம் என அடுக்கடுக்காக தான் செய்த காரியங்களுக்கு நியாயப் படுத்திப் பேசினான்.

எமதர்மராஜா: மானிடா, இப்போது நான் விளக்கம் அளிக்கிறேன். ஏன் உன் சகோதரனை சொர்க்கலோகம் அனுப்பினேன் என்று, அவனுடைய பாவ கணக்கை பார்க்கும் போது, அவன் சாவதற்கு முன் உன்னோடு சேர்ந்து செய்த தவறுகளை எண்ணி வருந்தினான், தவறை உணர்ந்து தான் செய்த தவறுக்கு பிரதிபலனாக நிறைய நற்ச்செயல்களைச் செய்தான் . தவறை உணர்பவர்கள் வாழ்க்கையில் தவறே செய்ய மாட்டார்கள், அவர்கள் மன்னிக்கப்படுவார்கள் . அவர்கள் திருந்திக் கொண்டு பொது வாழ்வு வாழ முடியும். உன் சகோதரன் தவறை உணர்ந்ததால் மன்னிக்கப்பட்டு சொர்க்கலோகம் அனுப்பப்பட்டான்.

நீயோ!! வாழும் காலத்திலும் சரி , இறந்த காலத்திலும் சரி, நீ செய்த தவறுகளை நியாயப் படுத்துகிறாய். இல்லை என்று வாதாடுகிறாய். அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அதனால் தான் உன்னை நரகலோகம் அனுப்ப ஆணையிட்டேன்.

நான் உங்களுக்கு எந்த பாகுபாடும் பார்க்கவில்லை. நீ இனிமேலாவது தவறை உணர முற்படு, எனக்கூறி மறைந்தார்.

கதை கருத்து:

தவறை உணர்ந்தவன் மன்னிக்க படுவான்

நியாயப்படுத்த முயற்சிப்பவன் தண்டிக்கப்படுவான்”

தவறு செய்வது மனித இயல்பு!

நியாயப்படுத்தக் கூடாது,

மறுக்கக்கூடாது,

பிறரை குற்றம் சாட்ட கூடாது,

மீண்டும் செய்யக்கூடாது ,

தவறு செய்யும் பட்சத்தில் தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.

தவறுக்காக மன்னிப்பு கோருங்கள்,

அதனை உணர முற்படுங்கள்

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.

--

--

Responses (1)