கதை கேளு — தானதர்மங்கள்

Sankar sundaralingam
2 min readJan 23, 2021

--

பக்தர் ஒருவர் சாமி தரிசனத்திற்காக கோவிலில் வரிசையில் நைவேத்தியத்துடன் நின்று கொண்டிருக்கையில், வறியவர் ஒருவர் வந்து பக்தரிடம், ஐயா எனக்கு மிகவும் பசிக்கிறது தயவுசெய்து கையில் இருக்கும் சாப்பாட்டை தாருங்கள் என கேட்க, பக்தர் முகம் சுளித்துக் கொண்டு இல்லை, இது சாமிக்கு நைவேத்தியம் தர இயலாது எனக் கூறினார். இருந்தாலும் வறியவர் விடவில்லை, கேட்டுக்கொண்டே இருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த கோயில் பூக்கடை அக்கா தன்னிடம் உள்ள பழைய சாதத்தை எடுத்து வந்து அந்த வறியவரிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு உடனே வறியவர் சாப்பிட்டுவிட்டு அந்த பூக்கடை அக்காவிடம் சென்று அவரை மனதார வாழ்த்தினார்.

இதை கவனித்துக்கொண்டிருந்த பூக்கடை அக்காவின் மகள், தன் தாயிடம் ஏன் அந்த பக்தர் நைவேத்தியத்தியத்தை அளிக்கவில்லை? சாமியா சாப்பிட போகிறது? இப்போது நாம் சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம்?

மகளே! அது அந்த பக்தரின் நம்பிக்கை. கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் அவரின் மனநிலை. நான் அந்த இடத்திலிருந்திருந்தால் நைவேத்தியத்தை கொடுத்து இருப்பேன் அல்லது அவரை சற்று நேரம் காத்திருக்க சொல்லி சாமிக்கு படைத்த உடன் கொடுத்திருப்பேன். இல்லை/ கிடையாது எனக் சொல்லியிருக்க மாட்டேன்.

ஒருவர் தானம் கேட்கும் போது கையில் எதுவும் இல்லை என்றால் இல்லை என்று கூறக்கூடாது. இப்போது இல்லை எனக் கூற வேண்டும்.

கவலைப்படாதே, நமக்கு கண்டிப்பாக இன்று சாப்பாடு கிடைக்கும். மற்றவர்களுக்கு கொடுக்க கொடுக்கத்தான் கிடைக்கும்.

சரி அம்மா, உன்னிடம் சாப்பாடு இருந்தது கொடுத்து விட்டாய் இல்லை என்றால் என்ன செய்திருப்பாய்?

மகளே! பணமோ, பொருளோ, உணவோ இருந்தால்தான் தானதர்மம் செய்ய வேண்டும் என்பது அவசியமல்ல. செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். மனதார 365 நாட்களும் தானதர்மம் செய்ய வேண்டும் என நினை. அது செய்ததற்கு சமம். உன் எண்ணம் போல் அது செயல்படும்.

தான தர்மம் என்றால் என்ன?

பசித்திருக்கும் ஒருவருக்கு அவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலே அவர் பசியாற்றுவது தர்மம்.

தான தர்மத்தில் எது சிறந்தது? என்ன பயன்?

இதில் எது சிறந்தது, எவ்வளவு புண்ணியம், எதில் புண்ணியம் எனப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. அடுத்தவர்களுக்கு உதவுவதே சிறந்தது. தானத்தில் பல வகை உண்டு.

அன்னதானம் புண்ணியம் சேர்க்கும்,

ரத்ததானம் உயிர்காக்கும்

கல்வி தானம் தலைமுறை செழிக்கும்

நிதானம் நம்மை காத்து நிற்கும்.

நமது கர்மாவை உடைப்பதில் தான தர்மங்களுக்கு தனியிடமுண்டு எனக்கூறிக் கொண்டிருக்கையில் பூக்கடைக்கு அருகிலுள்ள கடைக்காரர் பூக்கடை அக்காவிடம் வந்து, அக்கா இன்று என்னால் மதிய உணவு சாப்பிட இயலாது. நான் என் நண்பருடன் வெளியே செல்கிறேன் நீங்கள் எனது மதிய உணவை சாப்பிட்டு விடுங்கள் என்று கூறி சென்றுவிட்டார்.

பார்த்தியா மகளே, நாம் தான தர்மங்களை செய்தால் எப்படியாவது நமக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகள் கிடைத்துவிடும். ஆமாம் மா என்ன அதிசயம்.

கதை கருத்து :

சிறுதுளி பெருவெள்ளம். தானதர்மங்கள் செய்தால் அதற்கு பல மடங்கு நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக ஒரு தானியம் செலவிட்டால் அது பல கதிர்களை கொடுக்கிறது ஒவ்வொரு கதிரிலும் பல தானியங்கள் உள்ளன. அதுபோலத்தான் தானதர்மங்கள் செய்தால் அது பல தானியங்களாக உங்களுக்கு பயன் கொடுக்கும்.

தர்மம் தலை காக்கும், தானம் செய்பவரை வறுமை தீண்டாது. தான தர்மங்கள் மூலம் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

நன்றி !!!

வணக்கம்!!!

--

--

No responses yet