கதை கேளு — துரோகம்
4 நண்பர்கர்கள் ஒரே தெருவில் வசித்து வந்தனர். அதில் 2 நண்பர்கள் (ராமன், ரகு ) ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள், மிகவும் திறமை சாலிகள். மற்றொரு 2 நண்பர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி பிடிப்பை முடித்து விட்டு வேலைக்கு செல்கிறார்கள், அவர்களால் கல்லூரி படிப்பை தொடர இயலவில்லை.
ஒருநாள் அக் கல்லூரிக்கு உலகின் தலைசிறந்த நிறுவனம் வளாக நேர்காணலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டது. அக்கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம், எப்படியாவது இந்த வளாக நேர்காணலில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி தாங்கள் இந்த வேலையை பெற வேண்டுமென முயற்சி செய்தனர் .கல்லூரி நிர்வாகம் இந்த இரண்டு நபர்களில் (ராமன், ரகு ) ஒருவர் நிச்சயமாக இந்த வளாக நேர்காணலில் தேர்ச்சி அடைவார்கள் என முழுமையாக நம்பியது.
ராமனும், ரகுவும் இந்த செய்தியை தனது மற்ற இரு நண்பர்களுக்கு பகிர்ந்தனர். அவர்கள் இருவரும் உங்களில் யாராவது ஒருவர் கண்டிப்பாக இந்த நேர்காணலில் தேர்ச்சி அடைய வேண்டும். அதனால் நன்கு படியுங்கள், நாங்கள் கடவுளிடம் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறோம் என்று கூறினர்.
ரகு மனதிற்குள், தான் எப்படியாவது இந்த வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்று. உலகின் தலைசிறந்த கம்பெனியில் பணியாற்ற வேண்டும் என்று மிகுந்த ஆசை. ஆனால், அவனுக்குள் ஒரு பயம். ஒருவேளை தனக்கு பதில் ராமன் தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது? நண்பர்கள் மத்தியில் தன் மதிப்பு குறைந்துவிடும், பெற்றோர் திட்டுவார்கள் என்று அஞ்சினான். அதனால் ராமனை நேர்காணலில் தேர்ச்சி அடையாதவாறு எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினான் .
அப்படி யோசித்து அந்த நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகளுக்கு ராமனைப் பற்றி தவறான தகவல்களை பேராசிரியர்கள் எழுதுவது போல் எழுதி அனுப்பினான். அந்த கடிதத்தை படித்த தலைமை அதிகாரிகள், அடுத்த நாள் நேர்காணலை நடத்தினர் அந்த நேர்காணலுக்கு ராமன் கலந்து கொள்ள வில்லை. ரகு மிகுந்த சந்தோஷம். வளாக நேர்காணலில் கலந்து கொண்டான். நிர்வாகம் முடிவுகளை பின்னர் அறிவிப்பதாக கூறி விடைபெற்றது.
நேர்காணலை முடித்துவிட்டு ரகு ராமனை சந்தித்து ஏன் நேர்காணலுக்கு வரவில்லை? என்னவாயிற்று என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்டான். அதற்கு ராமன் என்னைப் பற்றி தவறாக நிர்வாகத்தின் தலைமைக்கு மொட்டை கடுதாசி அனுப்பியுள்ளனர். கடிதத்தைப் படித்த நிர்வாகம் என்னை நேற்று இரவே தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்தனர். இதைப் பற்றி என்னிடம் கேட்டனர். நான் எந்த பதற்றமும் இல்லாமல் என் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் யாராவது எழுதி இருக்கலாம் என்றேன். இதை நம்புவதும், நம்பாததும் உங்கள் கையில் உள்ளது என்றேன் .அதற்கு நிர்வாகம் நாங்கள் மொட்டை கடுதாசிக்கு செவிசாய்க்க மாட்டோம். உண்மையில் உன்னைப் பற்றி தவறு ஏதும் இருந்தால் எங்களிடம் நேராக வந்து கூறியிருந்தால் அதை ஏற்றுக்கொண்டு இருப்போம் என்று கூறி, எனக்கான நேர்காணலை நேற்றிரவே நடத்தி பணி ஒப்பந்தத்தையும் எனக்கு அளித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன ரகு கண்ணீருடன் வீட்டுக்கு சென்றான். அவன் முகம் வாடியதை உணர்ந்த அவனது தந்தை என்ன நடந்தது என விசாரித்தார். நடந்தவற்றை அறிந்த அவனது தந்தை தனது மகனை நோக்கி நீ செய்தது துரோகம் என்றார் .
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் பேசாதீர்கள். நான் என் வேலைய உறுதிப்படுத்த எப்படி செய்தேன். எனக்கு வேலை கிடைத்திருந்தால் எனது தந்திரத்தை பாராட்டிருப்பீர்கள் .
ரகு திறமை வேறு , தந்திரம் வேறு , துரோகம் வேறு . துரோகத்திர்கு மன்னிப்பே கிடையாது.
துரோகத்தின் முகம் என்னவெனில், அது தெரியாத நபர்களால் நடப்பதில்லை. நன்கு தெரிந்து, பழகிய முகங்களால் நடப்பது. உன் மேல் நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது தந்திரம்/ சாமர்த்தியமல்ல அது துரோகம்.
தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் துரோகங்கள் மறுக்கப்பட்டாலும் , மறைக்கப்பட்டாலும் மன்னிப்பே கிடையாது.
உன் தோல்விக்கு கூட காரணம், நீ உன் மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்கு என்று செய்த துரோகம். உன் நண்பன் தோல்வியை கூட ஏற்று கொண்டிருப்பான். ஆனால் உன் துரோகத்தை அவனால் ஏற்க இயலாது .
சரி அப்பா நான் அவனிடம் பேசி தீர்த்துக் கொள்கிறேன்.
அட போடா முட்டாள்! பேசித் தீர்க்க முடியாத விஷயம் துரோகம். நீ யாரையாவது ஏமாற்றி விட்டால், அவர்கள் ஏமாந்ததாக அர்த்தமில்லை. உன்னை எந்த அளவுக்கு அதிகமாக நம்பி இருக்கிறார்கள் என்று பொருள் .
அவன் உன்னை மன்னிக்கலாம், ஆனால் மீண்டும் நம்பி விட மாட்டான். துரோகிகளுக்கு துரோகம் என்ற ஒன்று பழகிய ஒன்று. துரோகம் என்று ஒன்று உனக்குள் வரக்கூடாது, இனிமேல் வராமல் பார்த்துக்கொள். நட்புக்குத் துரோகம் வேண்டவே வேண்டாம் .
கதை கருத்து
துரோகம் வலியைவிட நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. எப்படி இவ்வளவு சிறப்பாக நடித்து ஏமாற்றினார்கள் என்று. துரோகத்தின் வலியை தந்தவர்கள் நிச்சயம் ஒருநாள் அந்த துரோகம் மூலமாகவே அதை உணர்வார்கள் .யாருக்கும் துரோகம் செய்ய வேண்டுமென கனவில் கூட நினைக்காதீர்கள்.
முகத்தில் அடியுங்கள் !
முதுகில் குத்தாதீர்கள் !!