கதை கேளு-தைரியம்
கதை கேளு
தைரியம்
விவசாயி ஒருவர் தனது வயற்காட்டில் அறுவடை முடிந்து அடுத்த போகத்திற்கு என்ன செய்யலாம் என யோசித்தவாறே இருந்தான். அவனது மனைவி நெல் போடலாம் என கூற, அந்த விவசாயி இல்ல மழைக்காலம் நெற்பயிர்கள் வீணாகிவிடும். இவ்வாறு மனைவி கூறிய யோசனைகளுக்கு கணவனால் தைரியமாக முடிவெடுக்க முடியவில்லை.இதனை சுதாரித்துக் கொண்ட விவசாயின் மனைவி, கணவனிடம் உங்களுக்கு கழுகு அலகு பற்றி தெரியுமா எனக் கேட்டாள்.
விவசாயி ஆம் தெரியும், அலகு என்பது பறவைகள் உணவை உண்ண, சண்டையிட, குஞ்சுகளுக்கு உணவளிக்க இருக்கும் உறுப்பு. இது கூர்மையானதாக இருக்கும். மனைவி ஆம் , ஆனால் கழுகு அலகு சற்று வித்தியாசமானது அது என்னவென்றால் கழுகு ஒரு வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். அதனுடைய அலகு கூரிய நுனியுடையதாக இருக்கும்.
கழுகு 70 ஆண்டு காலம் வாழும் பறவையினம், தன் 40 வயதை அடையும் போது அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் உதவாது. அது கனமானதாக மாறிவிடும். வாழ்வா சாவா, என்ற சூழ்நிலையில் , கழுகுக்கு ஒன்று இறப்பது அல்லது தன்னை மரண வலிக்கு தயார் படுத்திக் கொள்வது என இரண்டு வாய்ப்புகள் மட்டும் தான் .
இந்த சூழ்நிலையில் கழுகு மிக உயர்ந்த மலையின் உச்சிக்கு பறந்து அங்குள்ள பாறைகளில் தன் அலகை கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும்.மரண வலியாக இருக்கும். ஆனால் தொடர்ந்து சில நாட்கள் துணிந்து செய்து தன் அலகை உடைக்கும்.
புதிய அலகு வளர நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகும், அதுவரை கூட்டிலேயே இருக்கும். அந்த மரண வலியை அனுபவித்து மறுபிறவி எடுக்கும் கழுகு பின் 30 ஆண்டுகள் உயிர் வாழ முடியும்.
அதன் தைரியத்தை பார்த்து தான் கழுகை பறவைகளின் அரசன் என்கிறோம். அது 40 ஆண்டு காலங்கள் வாழ்ந்து விட்டோம் என வீழாமல் வாழ்க்கையை துணிந்து சந்திக்கிறது. மனிதனுக்கு கழுகு கற்றுத்தரும்பாடம் இது. இந்தத் துணிச்சல் மனித சமுதாயத்திற்கு ஒரு உதாரணம். தைரியமாக முயற்சிக்கவேண்டும். முயற்சிக்காமல் அதை செய்தால் இது பிரச்சனை இதை செய்தால் அது பிரச்சனை என்று கூறுவது தீர்வாகாது என மனைவி கணவனிடம் எடுத்துரைத்தாள்.
கழுகு அலகு பற்றி அறிந்து கொண்ட கணவன் மனைவியிடம், ஆம் எனக்கு அலகு மலிந்து பயமாக உருவெடுத்தது ,நான் அதை உடைத்து துணிச்சலுடன் பறவை அரசன் போல் செயல்படுவேன் என கூறி அடுத்த போகத்திற்கு தயாரானான் .
கதை கருத்து: தைரியமாக துணிச்சலுடன் செயலாற்றுங்கள் எதை கண்டும் தயங்காதீர்கள். பலமே வாழ்க்கை, பலவீனமே மரணம். தைரியத்துடன் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்.
குறிப்பு :இந்தக் கதையை நான் எழுத காரணம் பலமுறை என்னிடம் என்னை அறிந்தவர்கள் தான் சொந்த தொழில் செய்ய இருப்பதாகவும் தன்னிடம் நல்ல யோசனை மற்றும் முறை இருப்பதாகவும். ஆனால், பயமாக இருக்கு தொழில் செய்து நட்டம் ஆனால் என்ன செய்வது. வேலைக்குப் போனால் நிரந்தர வருமானம் என்று. கூறும் அனைவருக்கும், இனி நான் தைரியமும் துணிச்சலும் இருந்தால் எந்த செயலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம் என்று கழுகின் அலகை உதாரணமாக சொல்லி இதனை எழுதுகிறேன்.