கதை கேளு — நம்பிக்கை
கலிங்கம் என்று ஒரு சமஸ்தானம், நல்ல செல்வ வளம் உள்ள சமஸ்தானம். இந்த சமஸ்தானத்தை நரசிம்மன் என்ற ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார். இவர் எல்லா போர் தந்திரங்களையும் நன்கு கற்றவர். நல்லாட்சியை மக்களுக்கு வழங்கி வந்தார்.
ஒரு நாள் ஒற்றர் அரசரிடம் வந்து, நம்மை ஆங்கில அரசு படை எடுக்க திட்டமிட்டுள்ளது என்ற தகவலை தந்தார். தகவலை பெற்றுக்கொண்ட அரசர், சபையை கூட்டினார். மந்திரிகளிடம் தகவலை தெரிவித்து, நாம் போருக்கு தயாராக வேண்டும். நமது சமஸ்தானத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். நாம் விடுகின்ற மூச்சு, நம் சொந்த பூமியில் இருக்கவேண்டும் என்று அரசர் மந்திரிகளிடம் கூறினார்.
மந்திரிகள் நரசிம்ம மன்னரிடம், மன்னா! நம்மிடம் பெரும் படைகள் இல்லை .ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி கொள்வது மிகக் கடினம். நம்மைவிட பெரிய சமஸ்தானங்கள் ஏற்கனவே ஆங்கிலேயர்களிடம் தோற்றுவித்தது. நம் வீரர்கள் எப்படி ஆங்கிலப் படைகளை எதிர் கொள்வார்கள்?
அரசர் பதிலளிக்க முற்படுகையில் சமஸ்தானத்தின் ராஜகுரு மற்றும் நரசிம்ம மன்னரின் தந்தையுமான காளிங்கன், நரசிம்மரை அமைதி காக்க கூறி, மந்திரிகளிடம் சொல்கிறார் . இன்று ஆங்கில படைகள், இதற்குமுன் முகலாயர்கள் , பல பேரரசுகள் நமது சமஸ்தானத்தின் மீது படை எடுத்துள்ளனர். அதை நம் முன்னோர்கள் எதிர்கோண்டு வென்று சமஸ்தானத்தையும் , மக்களையும் பாதுகாத்துள்ளனர்.
நம் முன்னோர்கள் எப்படி இப்போர்களை கையாண்டார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மிடம் எத்தனை சிப்பாய்கள், ஆயுதங்கள், தளவாடங்கள் இருக்கின்றது என்பது முக்கியமல்ல. நம்பிக்கை என்ற ஆயுதம் தான் முதன்மை. அது நம்மிடம் இருக்க வேண்டும்.
மந்திரிகள்: என்ன நம்பிக்கையா?
ராஜகுரு நம்பிக்கை மட்டும் தான் பயத்தை விட வலிமையானது.
மனிதன் உணவின்றி சில மாதங்கள் வாழலாம்,
நீரின்றி சில நாட்கள் வாழலாம்,
காற்றின்றி சில நிமிடங்கள் வாழலாம்,
ஆனால் நம்பிக்கையின்றி சில நொடிகள் கூட வாழ முடியாது!
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும், வெற்றி என்பது நம்பிக்கை இருந்தால் மட்டுமே வரும் .
நம்பிக்கை தருவதே நல்லரசு!!
இதை அறிந்து செயல்பட்டு நம்பிக்கை கொள்ளுங்கள், வெற்றி பெறுங்கள்.
இக்கருத்தினை உணர்ந்த மந்திரிகள், நம்பிக்கைதான் எங்களில் பெரிய கை. இதை அனைத்து வீரர்களிடம் தெரியவைத்து போருக்கு தயாரானார்கள்.
சிறிய சமஸ்தானம் என கருதி குறைந்த வீரர்களுடன் சமஸ்தானத்தை நோக்கி ஆங்கிலேயர்கள் போர் புரிந்தனர். ஒரு சில நிமிடங்களிலேயே நரசிம்ம மன்னனின் படைகள், நம்பிக்கையுடன், திறமையாக கையாண்டு ஆங்கிலப் படையை துரத்தி அடித்தனர்.
கதை கருத்து:
நம்பிக்கை என்ற மருந்து, ஆழ் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை குணமாக்கும்.
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம், நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது (வீழ்த்துவது) கடினம்.
உங்களை எதிர் கொள்பவன் திறமைசாலியாக இருந்தாலும் கவலை அடையவேண்டாம். நம்பிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள். நம்பிக்கைதான் பயத்தை விட வலிமையானது. நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம்.
உன்னால் செயலை செய்ய முடியும் என முதலில் நம்பு, பின் செயலை தொடங்கு ,வெற்றி அடைய.
நன்றி வணக்கம்