கதை கேளு — நாணயம்
கதை கேளு
நாணயம்
ஆக்கம் உள்ள இளைஞன், தனது ஊர் மக்கள் நல்ல தரமான துணிகளை உடுத்த வேண்டும், நல்ல புதிய ரகங்களை தங்கள் ஊரில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில், ஒரு துணி கடையை ஆரம்பித்தான். அத்தொழிலில் நேர்மையாக கட்டுப்பாடுடன் நடத்தி வந்தான். எதிர்பார்த்தபடியே நன்றாக வளர்ந்தது. வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெற்று பல கிளை நிறுவனங்களையும் அருகில் உள்ள ஊர்களில் ஆரம்பித்தான். ஆரம்பித்த நிறுவனங்களில் போட்ட முதல்களை சீக்கிரம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விலைகளை உயர்த்தி தரத்தினை குறைத்தான்.அதை நுகர்வோர்கள் அறியாவண்ணம் மறைக்க முற்பட்டான். நேர்மை கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக மறைந்து நாணயம் (காசு) ஈட்டுவதே பிரதான குறிக்கோளாக மாறியது.
சிறிது காலத்தில் தொழில் பின்பு போல இல்லை. புது ரகங்கள்,நவீனரக துணிகளை அறிமுகப்படுத்தியும், பெரியதாக வாடிக்கையாளர்கள் வரவில்லை. இளைஞனுக்கு ஒரே வியப்பு என்ன நடக்கிறது? சுற்று வட்டாரத்தில் நம் கடைகளில் துணிகள் தான் புதிது ஆனால் நம்மிடம் வாடிக்கையாளர்கள் வருவதில்லை. ஏதோ தவறு என அறிந்த இளைஞன். ஒரு நாள் தொழில் வல்லுநர் மற்றும் ஆலோசகரான தனது குருநாதரை சந்திக்கிறான். தனது தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துரைத்து ஆசானிடம் எப்படி இதை சரி செய்வது என விவரிக்கிறான். அவனது ஆசான் சரி நீ போ நான் சந்தையில் உனது தொழிலைப் பற்றி நுகர்வோர்கள் இடம் விசாரிக்கிறேன் என்று கூறினார்.
இளைஞனும் சுமார் இரண்டு வாரங்கள் கழித்து தனது ஆசானை மீண்டும் சந்தித்து, சந்தை நிலவரத்தை விசாரிக்கிறான். அவரது குருநாதர் இளைஞனைப் பார்த்து உன்னிடம் நாணயம் இருக்கிறதா எனக் கேட்டார்.
இளைஞன் என்னிடம் நிறைய நாணயங்கள் இருக்கின்றன என்னால் இன்னும் அதிக முதலீடுகள் செய்ய முடியும் என்றான். அதற்கு அவரது குருநாதர் நான் கேட்டது அந்த நாணயம் கிடையாது, நாணயம் என்றால் உனக்கு காசு , பணத்தின் வடிவம் தான் தோன்றுகிறது.உன்னிடம் பரிமாற்ற ஊடகங்கள் உள்ளது . ஆனால் நேர்மை, நம்பிக்கை என்ற அர்த்தங்கள் உனக்கு மறைந்து போயின. அதனால் தான் வாடிக்கையாளர்களை நீ இழக்க வேண்டியதாகிவிட்டது. தொழில் ஆரம்பிக்கும் போது இருந்த நேர்மை வளர்ந்த பின் பணம் பின்னாடி போய்விட்டது.
உன்னால் நுகர்வோர்களின் தேவை அறிந்து செயலாற்ற முடியவில்லை. நீ மட்டுமல்ல பெரும்பாலோர் ஆரம்பகட்டத்தில் நேர்மை நம்பிக்கை என தொழிலை ஆரம்பித்து ஒருகட்டத்தில் காசு பின்னாடி ஓடி விடுகிறார்கள். நாணயம் என்பது நேர்மை , செயல் முதலியன குறித்தவை.
உனக்கு ஒரு கேள்வி எழலாம் நேர்மை இருந்து என்ன பயன் என்று ? இங்கு நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை .
கதை கருத்து :
நாணயம் (காசு) ஈட்ட நானம் இராதே , நானம் இழந்து ஈட்டும் காசு (நாணயம்) அர்த்தமற்றது, மதிப்பில்லாதது நாணயம் இருந்தும்.
நேர்மை நம்பிக்கை அதிகம் சம்பாதி, பணத்தின் பின் ஓடாதீர்கள். நேர்மையான தொழில் என்றுமே நிலைத்திருக்கும் அதற்கான சன்மானமும் உங்களுக்கு நிச்சயம் கிட்டும். நாணயத்துடன் வாழ வாழ்த்துக்கள்.