கதை கேளு — நோக்கம்
காட்டில் உள்ள விலங்குகளில் நரி ஒன்று தன்னைவிட பலம் குறைந்த மிருகங்களை வேட்டையாடிக் கொன்றது. அதற்கு அந்த காட்டிற்கு தந்திரமாக ராஜா ஆகவேண்டும் என்று ஆசை. அதை எப்படியாவது குறுக்கு வழியில் செய்து அடைய வேண்டும் என்ற நோக்கம். ஆனால் அதனால் தன்னை விட பலம் அதிகம் உள்ள விலங்குகளிடம் ஜெயிக்க முடியவில்லை.
கடவுளை நோக்கி கடும் தவம் செய்தது. அதனுடைய தவத்தைப் பார்த்து மனமிரங்கிய கடவுள், அதனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டது, அதற்கு அந்த நரி நான் என்னைவிட பலம் வாய்ந்த மிருகங்களை எதிர்த்து ஜெயிக்க வேண்டும். அவைகள் என்னிடம் தோற்று ஓட வேண்டும். அதனுடைய நோக்கத்தை அறிந்த கடவுள், “உன்னை விட பலம் அதிகம் என மனதார நினைக்க்கும் மிருகங்கள் உன்னிடம் தோற்று பயந்து ஓடும்” என கூறி வரத்தை அளித்தார். கடவுள் நரியை நல்ல எண்ணங்களுடன் வாழ் என வாழ்த்தி மறைந்தார் . நரிக்கு எண்ணற்ற சந்தோஷம், இனி நான்தான் காட்டுக்கு ராஜா என கூச்சலிட்டது.
நரியின் கூச்சல் சத்தம் காட்டிலுள்ள அனைத்து விலங்குகளுக்கும் கேட்டது, கடவுளுக்கும் அது கேட்டது. உடனடியாக கடவுள் நரி முன் யானை வடிவில் வந்தார். யானையை பார்த்த நரி அது கடவுள் என அறியாமல், இதனிடம் சண்டையிட்டு வெற்றியடைந்து மத்த மிருகங்களுக்கு உதாரணத்தை காட்டுவோம் என எண்ணியது .
நரி யானையை தாக்க முற்பட்டது , யானை மனதில் நரியை விட பலம் குறைவு என நினைத்து எதிர் தாக்குதல் நடத்தியது. யானையின் எதிர் தாக்குதலை தாங்கமுடியாமல் நரி கீழே சுருண்டு விழுந்தது.
நரி என்ன கடவுள் நம்மை ஏமாத்திவிட்டாரா என நினைக்க , யானையாய் வந்த கடவுள் நரியிடம் கடவுளாக அவதரித்து , நான் உன்னை ஏமாற்றவில்லை , உனக்கு நான் கொடுத்த வரம் “உன்னை விட பலம் அதிகம் என மனதார நினைக்க்கும் மிருகங்கள் உன்னிடம் தோற்று பயந்து ஓடும்”. நானே யானையாக வந்த போது கூட மனதார உன்னை விட பலம் குறைவு என நினைத்து தான் எதிர்த்தாக்குதல் நடத்தினேன் . நீங்கள் என்னிடமே தந்திரம் செய்துவிட்டீர்கள் என நரி அழுதது.
கடவுள் நரியிடம் இந்த விளையாட்டு உலகத்துக்கு ஒரு பாடம். பிறரை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், என்னதான் கடவுள்கிட்ட வரம் பெற்றாலும் நிறைவேறாது. உன்னுடைய நோக்கம் சரியாக இருந்தால், கடவுளின் ஆசீர்வாதம் இருக்கும். நீ என்னை நோக்கி கடும் தவம் செய்து பெற வேண்டும் என்று அவசியமில்லை.
நோக்கம் உன்னுடையது!!
ஆக்கம் என்னுடையது!!
சரியான மற்றும் தெளிவான நோக்கம் தான் வாழ்வின் தொடக்கம். நோக்கத்தை அறிந்து கொள்வது வாழ்க்கையை எளிதாக்காது ஆனால் அது வாழ்க்கையை சாத்தியமாக்கும். பிறந்து விட்டோம் என்பதை விட, இனி மீண்டும் பிறக்கப் போவதில்லை என எண்ணி இந்த வாழ்க்கையின் நோக்கம் எதுவென்பதை தீர்மானித்து அதன் பாதையில் வாழ்க்கையை பயணிப்பது நல்லது.
கதை கருத்து
சரியான நோக்கம் இல்லை என்றால் தலைகீழாக நின்றால் கூட நோக்கம் நிறைவேறாது. அது உன்னை அகலபாதாளத்தில் தள்ளும். வெற்றி அடைவதோ, இலக்கை அடைவதோ நோக்கமல்ல. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது தான் நோக்கம். எதையும் புரிந்து கொண்டு வாழ்ந்தால், இயல்பாக இலக்குகளை அடையலாம். நோக்கத்தை அறிந்து அதற்கு எதிர்மறையானவர்களிடமிருந்து காலத்தை கழிக்க வேண்டாம். இந்த உலகில் அதுவாக நிகழ்வது நீ பிறப்பதும் இறப்பது மட்டுமே மற்றவை அனைத்தும் அவரவர் நோக்கம் மற்றும் செயல்களை பொருத்துதான். நோக்கத்தை நோக்கி தொடரட்டும் உன் இனிய பயணம்….