கதை கேளு –பணநாயகம்
விடியற்காலை சுமார் 5.30 மணி ,ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் சிற்றுண்டி கடையில் தேநீர் பருகிக் கொண்டு இருந்தனர். அங்கு கூடிய அரசியல் கட்சிக்காரர்கள் வருகின்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்ய தயாராகினர். அதற்கான பேரமும் நடந்தது. அச்சமயத்தில் அந்த தேநீர் கடைக்கு வந்த முருகன், கூச்சலுடன் உடனடியாக மண்ணெண்ணெய் மற்றும் தீப்பட்டி தருமாறு கூறினார். கடைக்காரர் எடுத்துச் செல்வதற்கு முன் அவசரம் சீக்கிரம் கொடுங்கள் என கூச்சலிட்டார். அவர் எழுப்பிய கூச்சலால் தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்தவர்கள், முருகனின் அவசரம் என்ன என தெரிந்து உதவ அவரிடம் கேட்டனர்.
முருகா என்னாச்சு?
அதற்கு முருகன், என் வீட்டில் மூட்டைப்பூச்சிகள், என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. அதனால் தான் வீட்டை எரித்து விடலாம் என முடிவு செய்து . எனது பிள்ளைகளை வெளியே விட்டு மண்ணெண்ணெய் மற்றும் தீப்பட்டி வாங்க வந்தேன். உடனடியாக நான் வீட்டை எரிக்க வேண்டும் இல்லையெனில் மூட்டைப்பூச்சிகள் தப்பித்து விடும்.
அங்கிருந்த அனைவரும் சிரித்தனர் . என்னடா முருகா, உனக்கு பைத்தியமா. மூட்டைப்பூச்சிக்கு வீட்டை கொளுத்தினா, நாளைக்கு எங்க தூங்குவாய்? குடும்பம் நடத்துவாய்?
முருகன்: எனக்கு பைத்தியம் என்றால் , உங்களுக்கு என்ன? வாக்க பணத்துக்கு விற்கிறீர்கள். பணம் கொடுத்தது உங்களுக்கு என்ன சேவையா செய்ய போறாங்க?
அதை நாங்க கேட்கல அவங்கதான் தராங்க.
இலவசமா எது கொடுத்தாலும் வாங்குகிறீர்களா ? நாளைக்கு விஷம் கூட இலவசமாக தருவாங்க , அதை குடிப்பீங்களா? என்னடா முருகா இப்படி சொல்ற!
முருகன்: அண்ணன்மார்கள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். இப்ப அரசியல்ல பணநாயகத்தில் வெல்லமுடியும் நினைக்கிற வேட்பாளர்கள் யாரும் நல்லவர்கள் அல்ல. 466 (13%) வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள், 207 (9%) வேட்பாளர்கள் மீது கடுமையான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் நம்மை காப்பாற்ற, நம் வாழ்வாதாரத்தை உயர்த்த போறாங்களா? இல்லவே, இல்லை.
இதற்கு முன் பல தேர்தல்களில் பணநாயகம் வென்று உள்ளது. அதன் விளைவுதான், இன்று நாம் படும் இன்னல்கள்.
அரசியல் என்பது தியாகம், மக்கள் சேவை, தன்னலம் விரும்பா நிலை அன்று. இன்று பணத்திற்கு ஓட்டை வாங்குபவர்கள் சேவை செய்ய அல்ல, வியாபாரம் தான் செய்வார்கள். பல கோடிகளுக்கு விளம்பரம், ஆலோசகர்களை நியமித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பது பணம் சம்பாதிக்க தான். இவர்கள் நம்மை பணநாயகத்தின் மிகப்பெரிய அடிமை வம்சம் ஆக்குகின்றனர்.
உங்கள் கைவிரல்களை பணத்தின் மூலம் நாட்டை அடகு வைக்காதீர்கள். இவர்களுக்கு இப்ப நீங்க “மரியாதைக்குரிய வாக்காளப் பெருமக்கள்” வாக்களிப்பதற்கு முன்பு, பின்பு போராட்டக்காரர்கள், சமூகவிரோதி. இதைக் கேட்டு புரிந்து கொண்ட ஊர் மக்கள், அரசியல்வாதிகளை விரட்டியடித்து. கொள்கை திட்டம் இருந்தா வாங்க. பணநாயகத்தின் கலாச்சாரத்தை இத்தோடு நிறுத்துங்கள் என்று கூறி ஒவ்வொருவரும் வீட்டுக் கதவில் “எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல” என எழுதினர்.
கதை கருத்து:
மோசமான பணநாயகத்தை வீழ்த்தி, மாண்புமிக்க ஜனநாயகத்தை மலர வையுங்கள். கருப்பு மை உங்கள் விரலில் விழும் முன் நீங்கள் சிந்திக்க வேண்டியது, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியின் கடந்தகால நடத்தையும், இக்கால கண்ணியத்தையும்.
சிந்திக்கக்கூடாதது, வேட்பாளர்களின் ஜாதி, மதம்.
பணநாயகம் அழித்து, ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். மலரட்டும் பாரதம்.
நன்றி!!! வணக்கம்!!!