கதை கேளு — பணிவு
ஒரு பெரிய செல்வந்தர். மிகவும் நல்லவர், அடக்கமானவர், அனைவரிடமும் பணிவுடன் பழகுவார். சிறு குழந்தைகளாயினும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து, அன்பாக பேசுவார். அவரைக் கண்டு அனைவரும் வியப்பாக பார்ப்பர். எப்படி இவரால் மட்டும் இவ்வளவு பணிவாக இருக்க முடிகிறது என்று? அவர் பணிவு பேச்சு மற்றும் செயலில் மட்டுமல்ல உள்ளத்திலும் கூட.
ஒரு நாள் அவரைப் பற்றி தெரிந்த கயவர்கள், இவர் பார்த்தால் பயந்தாங்கோலி போல் இருக்கிறார், செல்வந்தராகவும் இருக்கிறார். இவர் வீட்டுக்குச் சென்று நாம் கொள்ளையடித்து சென்று விடலாம் என்று திட்டம் தீட்டினர். திட்டம் தீட்டியபடி ஒரு நாள் இரவு அவர் வீட்டுக்கு கொள்ளையடிக்க சென்றனர். இவரை கத்திமுனையில் மிரட்டி பணங்களை எடுத்துச் செல்ல முயற்சித்தனர், ஆனால் திருடர்கள் எதிர்பார்த்தபடி அவர் பயப்படவில்லை. அதற்கு மாறாக தற்காப்பு கலையின் மூலம் தன்னை மற்றும் தன் குடும்பத்தையும் காப்பாற்றினார். திருடர்கள் அனைவரையும் பிடித்து ஒரு அரையில் அடைத்து வைத்தார். இதைக் கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். ஐயா, திருடர்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனிமேல் அவர்கள் உங்கள் வீட்டு பக்கம் வரமாட்டார்கள். அதற்கு அந்த செல்வந்தர் இல்லை, இல்லை, நான் இவர்களை பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள் என்றார்.
ஐயா!!! உங்களால் எப்படி இவர்களை கட்டுப்படுத்த முடியும்?
நான் பார்த்து கொள்கிறேன். கொஞ்சம் பொறுங்கள் என்றார்.
அவர் அறையில் அடைத்துவைத்திருந்த (திருடர்கள்) அனைவருக்கும் உணவளித்தார், பின்பு அவர்களிடம் கூறினார். உழைத்து வாழுங்கள், திருடி வாழாதீர்கள். எதற்கு இப்படி வாழ்கிறீர்கள் என்று அறிவுரை கூறி அவர்களை விடுவிக்க சொன்னார். அந்த கூட்டத்திலிருந்த ஒருவன், ஐயா! நீங்கள் எல்லாரிடமும் மிகவும் பணிவாக இருக்கிறீர்கள், பயந்து எங்களிடம் பணம் கொடுத்து விடுவீர்கள் என்று தான் வந்தோம். எப்படி உங்களால் எங்களை துணிந்து எதிர்க்க முடிந்தது?
தம்பி! பணிவு என்பது பண்பு, அது பலவீனமோ, பயமோ அல்ல.
“பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல, அது ஒரு உயர்ந்த பண்பின் அறிகுறி”- புத்தர்
ஐயா! எப்ப பணிவு வேண்டும்? எல்லா இடத்திலும் பணிவு எடுபடாது இல்லையா?
தம்பி! பதவியிலும், வெற்றியிலும் பணிவு வேண்டும். பணிந்து போ, பலரும் உனக்கு படிவார்கள் . பணிவு உன்னை பிறர் மனதில் உயர வைக்கும், ஆழமாக உங்களைப்பற்றி நல்லெண்ணங்களை பதியவைக்கும். எல்லா தருணத்திலும் பணிவு வேண்டும்.
நாம் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் முதல் பாடம் பணிவாக தான் இருக்க வேண்டும். பணிவு உயர்வின் அடையாளம். உள்ளத்தில் பணிவு இருந்தால் இந்த உலகை ஆளும் வலிமை உனக்கு கிடைக்கும். பணிவான சொற்கள் நம் பாதையை எளிதாக்குகிறது.
வாழ்க்கையில் உயர்ந்து செல்லும்போது மிகவும் பணிவாக இருக்க வேண்டும். ஒருவேளை பின்னோக்கி செல்ல நேரிட்டால் எவரேனும் உனக்கு உதவுவர்.
ஐயா!! பணிவை பற்றி எங்களுக்கு அழகாக எடுத்துரைத்தீர்கள் . பணிவின் மகத்துவத்தை இப்போது புரிந்து கொண்டோம். பணிவு உயர்வின் அடையாளம். பணிவு என்பது பலவீலமல்ல , அது ஒரு பலம் என்று. நன்றி !!இனிமேல் நாங்கள் திருட மாட்டோம், உழைத்து தான் வாழ்வோம்.
கதை கருத்து:
“கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவை கற்றுக்கொள்ள வேண்டும்”- அரிஸ்டாட்டில்
பணிவு வேண்டும் அனால் கோழைத்தனம் கூடாது. பெரிய மனிதனின் உண்மையான அடையாளம் பணிவு. பெரிய மனிதன் என்று செல்வத்தாலும், புகழாலும், பதவியினாலும் அடுத்தவர்களுக்கு புரியவைக்க வேண்டிய அவசியமில்லை. பணிவாக இருந்தாலே அது தெரிந்துவிடும். பணிவு என்ற பண்பை கொண்டிருப்பவர் வாழ்க்கையில் நிம்மதி கொண்டிருப்பர். பணிவு ஒன்றே உன்னை மாமனிதனாக்கும்.
என்றும் பணிவுடன்……